வருகைப்பருவம்....6
சீர்மிகு உமையே! செல்ல மாமகளே!
சிந்தனைச் சிவமே!
நீறணி நித்திலமே! நில்லா தோடிவா!
இமவான் அழைப்பேற்றாய்!
கார்கருங் கூந்தலே! கலைவளர் வண்ணமே!
காசறு குழந்தாய்!
மார்புறத் தழுவிடவே மாதா அழைக்கின்றேன்.
மேனையின் அழைப்பேற்றாய்!
போர்முனை முருகனும், புகல்முனை பிள்ளையும்
அழைத்ததை ஏற்றாய்!
சார்தீமுன் சந்திர ஒளிபடரப் பட்டர்
அழைத்ததை ஏற்றாயே!
வாரா திருக்க வழக்கும் உள்ளதோ?
வந்தருள்க கல்யாணி.
பேரா யிரமாம் பேருற்ற பேரரசி!
பேறுநல்க, வந்தருள்க.
பொருள்
செல்ல மகளே! சிறப்புமிக்க உமையே! சிவம் நிறைந்த சிந்தனை மிக்க குழந்தையே!
வெண்ணீறு பூசிய நெற்றித் திலகமே! வா! ஓடிவா! என்றழைத்த தந்தையான இமவானின்
அழைப்பை ஏற்றாய்.
மேகம்போன்ற கூந்தலை உடையவளே! வண்ணக்கலைகளின் வளர் கலையே! குற்றமில்லாக்
குழந்தையே! உன்னை மார்புறத் தழுவி முத்தமிட வேண்டும்.அன்னை அழைக்கிறேன். ஓடிவா!
என்று அன்னை மேனை அழைத்த பொழுது,அவ,வழைப்பை ஏற்றாய்.
சூரனை வெல்ல வேலாயுதம் வேண்டி,முருகன் அழைத்த அழைப்பையும்,குளக்கரையில்,தந்தையைக் காணாது,புகலிடம் வேண்டி,ஞானசம்பந்தப் பிள்ளை
அழ்ழைப்பையும் ஏற்றாய்.நெருப்பின்முன் தவித்த அபிராமி பட்டர் நிலவு உதிக்கவேண்டி,அழைத்த
பொழுதும் அதனை ஏற்றாய்.
அடியவர் அழைப்பை ஏற்று வந்தருள் புரிந்த அம்மையே! நான் அழைத்தால் வராமல் இருக்க,
நமக்குள் ஒன்றும் வெறுப்பு,வழக்கு இல்லையே.ஆதலின் கல்யாணி அம்மையே ! அழைக்கிறேன்.
வருக.வருக,
பல்லாயிரக் கணக்கான பெயர்கள் போற்றும் பேறு கொண்ட கன்னியாகுடிப் பேரரசியே! வருக.
வரம்பல அருள்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக