வியாழன், 9 மார்ச், 2017

சப்பாணிப்பருவம்...7

                                         சப்பாணிப்பருவம்...7

உருவென,உருவினை உணரறிச் சடமென
            உருக்கென,உருகிடு மெழுகென,
உரமென,உவகையில் குளிர்ந்திடு திறனென
            உனைப்பலர் உரைத்திட உயர்ந்தவளே!

கருவெனக் கருவினில் கலந்திடு உயிரெனக்
            கலையெனக் களர்நிலச் செடியெனக்
கருவிலாப் பொருளெனக் கருணையின் கலமெனக்
            கணிப்பவர் கருத்தினில் கலப்பவளே!

குருவெனக் குருவருள் குணமெனக் குலமெனக்
            குறையிலா மதியெனக் குறையுடைக்
குரும்பையின் குறைகளை குணவருள் அருளெனக்
           குறையிரந் தரற்றுவோர் குலமகளே!

இருளினை விரட்டிடும் இணையடிச் சுடரரசி !
             சப்பாணி கொட்டி அருள்வாய்.
இருமலர்த் திருக்களும் இறைஞ்சிடும் இறைவியே!
             சப்பாணி கொட்டி அருள்வாய்.

                                     பொருள்
உருவமாயும்,உருவமற்றும்,உணர்வே இல்லாத அசையாப் பொருளாயும்,வலிமை வாய்ந்த உலோகமாயும்,விரைவில் உருகிடும் மெழுகாயும்,கரைக்க இயலாத கடினப் பொருளாயும்,எளிதில் கரைந்திடும் குளிர் நீர்க்கட்டியாயும்,உன்னைப் பலர் பல்வேறு முறையில் போற்றுவர்.அவரவர்
போற்றலுக்கு ஏற்பத் திகழ்பவளே!
    கருவாகவும்,கருவின் வளரும் உயிராகவும்,கலைப்பொருளாகவும்,காட்டுச் செடியாகவும்,
நுண்ணுயிரற்ற பொருளாகவும்,இரக்கம் மிகுந்த நெஞ்சம் உடையதாகவும் உன்னைப் பலகோணத்தில்
கணித்துப் போற்றுவோர் கருத்தெல்லாம் கலந்து நிற்பவளே!
    ஆசானாகவும்,ஆசானருள் குணமாகவும்,குலமாகவும்,குறையில்லா நிலவாகவும்,(அறிவாகவும்,)
குறையுடைய குரும்பை (பிறவி)குறை கண்டு அதனைப் போக்கும் அருளுள்ளம் கொண்ட பண்பாகவும் உன்முன் நின்று தத்தம் குறையிரந்து போற்றுவோர் போற்றும் குலமகளே!
     அறியாமையை(நரகத்தினை)விரட்டி எழில் ஒளி காட்டும் பாதங்கள் கொண்ட அரசியே!உனது
இருகரம் கொட்டி ஒலி எழுப்பி,சப்பாணி கொட்டி அருள்வாய்.
    செந்தாமரையில் வீற்றிருப்பவளும்,வெண் தாமரையில் வீற்றிருப்பவளும் போற்றி வணங்கிடும்
தலைவியே!உனது இருகரம் கொட்டி ஒலி எழுப்பி,சப்பாணி கொட்டி அருள்வாய்.

                                                 விளக்கம்
குரும்பை.....தென்னை பாக்கு மரங்களில் தோன்றி மிகக் குறைந்த நாட்களே ஆகியுள்ள பிஞ்சு,அதனைக் குரும்பை என அழைப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக