திங்கள், 6 மார்ச், 2017

சப்பாணிப்பருவம்......6

                          சப்பாணிப்பருவம்.....6

மும்முலைச்  செங்கலை   முதல்நிலை   அமுதவலை,
                     முத்தலை   சூலச்சிலை   கணடுளை,
மும்மலை   அலைத்தலை    அஞ்சுதலைக்   கவிழ்தலை
                     மறைமுலை   மகிழ்நல  மதுரையே!

விம்முலைப்   பால லை   விரிகுழை  சங்குவளை
                      விதிகலை   மதிகலை   வளர்நிலை
செம்புயல்      செம்மலை    செவியிலை   செங்குளம்
                      செந்தமிழ்ப்    பண்ணளி     சீர்காழியே!

அம்புலி    இருளிளி   அருளொளி   வருமொலி
                 அக்னியளி    அதிபதி   அதட்டலில்
நம்பலின்   நனிகுழை    நடுவினில்    நிலவொளி
                  நல்கொளி   படைத்தளி  கடவூரே!

செம்மையாய்   மும்மையும்   கொண்டமை   கல்யாணி!
                   சப்பாணி   கொட்டி   அருளே!
செம்மையும்,   வெண்மையும்   புகழ்ந்திடும்   அம்மையே!
                    சப்பாணி    கொட்டி    அருளே.

                                பொருள்

      மும்முலை என்னும் அரிய உருவமைப்பை முதலில் பெற்று,விளங்கிய அமுத வலை கொண்ட
தடாதகைப் பிராட்டியார்.பல நாட்டு மன்னர்களை வெல்லும் பொருட்டுத் திக்விஜயம் செய்து,
வெற்றியைக் குவித்துவரும் வேளையில்,முத்தலைச் சூலமும்,வில்லும் கொண்டு,போர் தொடுக்க
வந்தவரைக் கண்டு,மனம் தடுமாறி,வெட்கித் தலைகுனிய,பழமைக் கயிலை மலைத் தலைவன்,
கங்கையைத் தலையிலே கொண்டவன்,ஐந்து தலை கொண்டவனைப் பார்த்து,அஞ்சி,நாணி நின்ற
பிராட்டியின் மூன்றாம் முலை மறைய,மகிழ்ந்து அவரையே மணாளனாக அடைந்த  மதுரை அம்மையே!
       செங்குளக்கரையில் அழுது கொண்டிருக்கும் ஆளுடைய பிள்ளை மீது,அன்புற்ற ஆண்டவன்
கருணை காட்ட,அப்பனின் சொல்லால் விம்மிதமுற்ற முலைப்பால் அலைபோன்ற விரிகூந்தல்
நல்லாள் சங்குவளை அணிந்த கரத்தில் சங்கு(பாலளிப்பது)கொண்டு,கலைவிதியும்,அறிவுக்கலையும்
வளரும் நிலையில்,பாலூட்டி மேகங்கள் தாங்கிய சடைகொண்ட இறைவன்செவியில்,செந்தமிழ்ப்பண்
ஒலித்து மகிழும் வகையில் அமுதப் பாலளித்த சீர்காழி அம்மையே!
       அமாவாசை அறியாது,அம்மன் ஒளி முகமே கதி என வாழ்ந்த அபிராமி பட்டர் அரசன்,வினாவை
மனம் கொள்ளாமல் இன்று நிலவு ஒளிரும்"எனக்கூறியதால் வெகுண்ட மன்னன் நெருப்பு வளையத்தில் நிறுத்தி,நிலவை உதிக்கச்சொல்!இல்லெனில் அக்கினியில் தள்ளப் படுவாய்,என்றரற்றிய காலை,
நம்பிய நல்லோர் துயர் போக்கத் தன் காதுத் தோட்டை நிலவாக நடுவானில் உலவ விட்ட,
திருக்கடையூர் அபிராமி அன்னையே!
     செம்மையாய் மீனாட்சியையும்.திரிபுர சுந்தரியாயும்,அபிராமியாயும் விளங்கும் கல்யாணி
அம்மியே!இருகரம் கொட்டி,ஒலியெழுப்பி,சப்பாணி கொட்டி அருள்வாய்!
    செந்தாமரை இலக்குமியும்,வெண்தாமரை சரஸ்வதியும் போற்றும் கல்யாணி அம்மையே!
இருகரம் கொட்டி ஒலி எழுப்பி,சப்பாணி கொட்டி அருள்வாய்.
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக