வெள்ளி, 24 மார்ச், 2017

6 .வருகைப்பருவம்

                                 வருகைப்பருவம்....1

கன்னியிளம் பொன்னியின் தண்வளர்க் கன்னலே!
             கனிக்குரல் தனிப்புகழ் மணிக்குயிலே!
கன்னியர் நன்னடு மின்னிடும் பொன்மயிலே!
             கன்றழை முன்வரு அன்னையே!

கன்னியாய் வன்னனியை மன்னனாய்ப் பணிந்தவளே!
             கன்னியாய்க் கன்னியில் நின்றவளே!
கன்னிடாக் கனிபுகழ்க் கணபதி ஈன்றவளே!
             கன்னிவேல் கந்தனுக் களித்தவளே!

கன்னியாய் வண்தவம் நண்ணியே கண்மூன்றான்
               கண்ணருள் நன்மணம் பெற்றவளே!
கன்னியர் மன்னெழு பொன்னியர் உன்னிடும்,
               கன்னியா நன்குடிப் பொன்மகளே!

கன்னியின் அன்னையே!சென்னியில் பொன்னியான்
               கண்மணி!வருகவே! வருக,
கன்னிக் கற்பகமே! கலையூர் மலைமகளே!
                கல்யாணி அம்மையே! வருக.

                                பொருள்

      காவிரி பாயும் வளம் கொண்ட கன்னியாகுடியில்வளரும் கரும்பின் சுவைபோல் இனிமை
கொண்டவளே! இனிய குரல்கொண்ட குயிலின் இசையே! தோழியர் நடுவே விளங்கும் அழகுத்
தெய்வமே!கன்றின்குரல் கேட்டு ஓடிவரும் தாய்ப்பசுபோல் அடியவருக்குக் காட்சி தருபவளே!
    வன்னிமரத்தைச் சிவபெருமானாக நினைத்து வழிபட்ட க்னனியே! காலமெல்லாம் கணவனாய்
இறைவனை அடையக் கன்னியா குமரியில் குமரியாய் நிற்பவளே! பெற்றோரே உலகம் எனச்
சுற்றிவந்த கணபதிக்கு ஞானக்கனியை அளித்தவளே!சூரன் முதலிய அரக்கர்களை வெல்வதற்குத்
தவமிருந்து வேலாயுதத்தை முருகனுக்கு அளித்தவளே!
    இளம் வயதிலேயே கடுமையான தவத்தில்அமர்ந்து,சிவபெருமானின் அருளும்,மணக்கும் மங்களமும் பெற்றவளே! எழுகன்னியர்கள் போற்றக் கன்னியாகுடியில் அமர்ந்தவளே!
     கன்னியாகுடியின் அன்னையே! தலையிலே கங்கையைச் சூடியவன் மனத்து உறைபவளே!
வருக வருக.
    கன்னியாகுடியின் வரமருள் கற்பகமே! வருக.கலைமிகுந்து விளங்கும் ஊரில் கோயில்
கொண்டுள்ள மலைமகளாம் கல்யாணி அம்மையே! வருக வருக.

                                           விளக்கம்
கன்னியாகுடி என்னும் ஊர்ப்பெயர் கருதி,இப்பாடல் முழுவதும் " கன்னி" என்றே தொடங்கும்
அடிகளைக் கொண்டுள்ளது.

             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக