புதன், 22 மார்ச், 2017

முத்தப்பருவம்...10

                              முத்தப்பருவம்..10

கண்காண் காவிரி கரைகாண் கவின்முத்து,
                   கலங்குநீர் கறையாக,
தண்கடல் புகார்த்துறை தவளமாம் தலைமுத்து,
                    தவழ்உப்பு உடனேக,

மண்வளர்ப் பொன்னருவிப் பொதிகைப் புதுமுத்து,
                    புரளலால் சிதிலமே,
எண்ணிலா எழில்மலை இரத்தினப் பொதிமுத்து
                    எரிசீற்றக் கருமையே.


பெண்ணணி நகைமுத்தும் பொன்னணிப் புகையாம்.
                     பன்னக உமிழ்முத்தும்,
அண்ணவழி நன்னஞ்சு அழிவுதோய் பிழையதே.
                     அனைத்தும் குறைபட,

விண்ணகப் பண்ணிசையே! மண்ணகப் பெண்ணரசி!
                    வியன்முத்தம் தந்தருள்க.
பொன்னகையும்,கண்ணகையும்,எண்ணிடும் தண்ணுமையே!
                    பொன்முத்தம் தந்தருள்க.

                               பொருள்

 கண்ணிறைந்து ஓடும்,காவிரியின் கரையிலே காணப்படும் முத்துக்கள் ஆற்று நீரின் கலங்களில்
கலந்து கறையுடையதாய்க்காட்சி அளிக்கும்:புகார்க் கடற்கரை விளையும் கடல்முத்து,ஆழிநீர்
அலைப்பட்டு உப்பேறி தகுதி இழந்திருக்கும்.
      நிலவுலகம் வளமாக்கும் பொதிகைமலை அருவிநீர் தோன்றும் முத்துக்கள் அருவி வேகத்தில்
புரள்வதால் சிதைந்து காணப்படும்:எண்ணற்ற மலைகளில் பொதிந்துள்ள மணிமுத்துக்கள்
இயற்கை சீற்றத்தால் மண்ணுள் சிக்கிக் கரியாய் மாறிவிடும்.
      பெண்கள் அணிகலனாகும் நன்முத்துக்கள் பொன்னோடு இணைப்பதால்,புகை மேவிக் காணப்
படும்.நாகங்கள் காக்கும் நாகமணி முத்தும்,நஞ்சு கலந்து,குறை உடையதாகவே காணப்படும்.ஆக,
அனைத்துமே குறையுடையதாகவே விளங்க,
       விண்ணவர் போற்றும் கலையரசி!நிலவுலகப் பேரரசி!வியன்முத்து உன் செவ்வாய் முத்தமே.
அருள்முத்தம் தந்திடுக.
     பொன்னாள் இலக்குமியும்,கண்ணாம்கல்வியாள் சரஸ்வதியும் வணங்கும் கல்யாணி உமையே!
கனிவாய் முத்தம் தந்தருள்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக