திங்கள், 20 மார்ச், 2017

முத்தப்பருவம்...6

                                    முத்தப்பருவம்...6

மழுவுடையான் மனத்தக மறைகருணை மாணிக்கமே!
                               மதிமுகமே!மலர்விழியே!
மழுதொட்டு மகிஷனை மாய்த்திட்ட மாவீரமே!
                              மனையறமே!கல்யாணி!

விழுப்பொருளே!விஞ்சையர் குலவிளக்கே!விரிவான்
                               விளங்கு வெண்மதியே!
விழுதவ மேன்மையால் செழும்பாகம் பெற்றவளே!
                               வேதஉருவே!கல்யாணி!

தழுவியே தழும்பாய் தவளக்குறி தந்ததோடு,
                              தஞ்சமும் கொண்டவளே!
தழுவிய தண்கங்கை தலையமர்தல் தத்துவமாம்
                             தன்மையளே!கல்யாணி!

தொழுவோரின் துயர்தீர்க்கத் தண்முத்தம் தந்தருளே!
                             தூமகளே!முத்தமருள்.
புழுவாய்ப் பிறக்கினும் உன்னையே நினைவோர்க்குப்
                             புதுமுத்தம் தந்தருள்க.

                                   பொருள்

 வீரம்மிக்க, சிவபெருமானின் மனத்தில் மறையாய்,கருணையாய் அமர்ந்தவளே!மதிமுகமும்,குவளைமலர்
விழிகளும் கொண்டவளே!வீரப் படைகள் தாங்கி,மஹிடனுடன் போரிட்டு வென்றவளே!மனையறம்
மிக்க கல்யாணி அம்மையே!
       அழிவில்லாப் பொருளே! விண்ணவர் குலத்தின் ஒளிவிளக்கே!வான நிலவு போன்ற குளிர்க்
கிரணம் உடையவளே! இளம் வயதில் மேற்கொண்ட கடுந்தவத்தின் மேன்மையால் இறைவனின்
ஒரு பாகம் பெற்றவளே! நான்மறை நல்லுருவே! கல்யாணி அம்மையே!
        கம்பையாற்று வெள்ளத்தில் சிவலிங்க உரு அடித்துச் சென்று விடுமோ என அஞ்சி அப்படியே
அணைத்துக் கொள்ள,முலைக்குறியும்,வலைக்குறியும்இறைவனுக்கு அளித்து மகிழ்ச்சி அளித்ததோடு,அவரைத் தஞ்சமும் கொண்டவளே! கணவன் தலையமர்ந்த கங்கை மீது சினம்
கொள்ளாமல் த்த்துவ இறைவனின் அருளாக்கத்தை வியந்து போற்றிடும் கல்யாணி அம்மையே!
       வணங்குவோர் வருத்தம் தீர்க்க வாய் முத்தம் தந்து அருள்வாய். தூய அம்மையே! முத்தம்
தந்தருள்வாய்.
     புழுவாம் ஓரறிவுப் பிறவி எடுத்தாலும் உன்னையே நினைந்து போற்றும் உன் அடியவர் மனம்
மகிழ மலர் முத்தம் தந்தருள்வாய்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக