ஞாயிறு, 19 மார்ச், 2017

முத்தப்பருவம்...5

                                       முத்தப்பருவம்...5

வாவென் றழைத்து வளப்பாதம் வருடியே
                   வாய்வழி வழிநீர்
ஓவெனத் துடைத்து,உளமகிழ்ந்து கேட்டால் ,
                   ஒருமுத்தம் தாராயோ!

கூவிடும் குயில்குரல் குணமுடன் போற்றிக்
                  குதிதவழ் நடையார்ந்து,
தூவிடும் வரைகோலம் புகழ்ந்தபின் வேண்டின்
                 தளிர்முத்தம் தாராயோ!

பூவிடும் பூஞ்சோலை புதுத்தோழி உடனாடும்
                 பூவாட்டம் புகழ்ந்துரைத்து,
தாவிடும் பொன்னூஞ்சல் தாலாட்டு,பாடியபின்
                 தண்முத்தம் தாராயோ!

நாவிடும் நோன்புடை நல்லூர் நற்றலைவி!
                   நனிமுத்தம் தந்தருள்க.
பூவழகி!புதுமுத்துப் புன்னகைப் பூங்கொடியே!
                  பூமுத்தம்  தந்தருள்க.

                            பொருள்
குழந்தையாம் உன்னை,வா"என்றழைத்து,மென்மையான உனது பாதங்களைத் தடவிக் கொடுத்து,
வாயில் வழியும்,எச்சிலைப் பார்த்ததும் ஓ"என்றபடி,அதனைத் துடைத்துவிட்டு,உள்ளமெல்லாம்
மகிழ்ச்சி பொங்க,வணங்கிக் கேட்டால் ஒரு முத்தம் தரமாட்டாயோ!தருவாய்.
      கூவும் குயிலன்ன உனது குரல்வளம் பாராட்டிக் குதித்தோடும் உன் நடையழகில் மெய் மறந்து,
மாவைத் தூவி,மங்களக் கோலம் இடும் அழகைப் பாராட்டியபின் பணிந்து கேட்டால் ஒருமுத்தம்
தரமாட்டாயோ!தருவாய்.
       பூக்கள் மலர்ந்துள்ள சோலையில் தோழியருடன் நீ ஆடும் விளையாட்டை வெகுவாகப் புகழ்ந்துரைத்து ,நீ ஏறி அமர்ந்த பொன்னூஞ்சலைத் தாலாட்டுப் பாட்டுப் பாடி,ஆட்டிவிட்டபடியே,
கேட்டால் ஒருமுத்தம் தரமாட்டாயோ!தருவாய்.
      உண்ணா நோன்பைக் கடைப்பிடிக்கும் கன்னியாகுடியின் தலைவியே!ஒரு முத்தம் தண்டு
அருள்வாய்.
     பூப்போன்ற அழகுடையவளே!புது முத்து போல் புன்னகை கொண்ட பூங் கொடியே!கல்யாணி!
பூவிதழில் ஒரு முத்தம் தந்தருள்க.

                                                      விளக்கம்
ஓ"வென்று .....குறிப்பிடைச்சொல்
நாவிடும் .....நா=நாக்கு உணவைக் குறிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக