சனி, 18 மார்ச், 2017

முத்தப்பருவம்....4

                                              முத்தப்பருவம்....4

அருக்கொடு அதர்வண இருக்கொடு அருவமாய்,
                          அருங்கஜ உருக்கொடு
அருள்கொடு இருள்தடு பொருள்முதல் கணபதிக்கு
                          அருள்முத்தம் தந்தவளே!

தருக்கொடு செருக்கொடு வரத்தொடு பெருங்களத்
                         தருக்கர்கள் அழித்தபின்
திருத்திடு ஒருத்தனைப் பெரும்பதக் கருத்தனுக்குத்
                         திருமுத்தம் தந்தவளே!

வருந்திடு அருந்திடு அருகழைத்துக் குழந்தைக்கு
                     வாய்முத்தம் தந்தவளே!
வருந்திடு இருந்திடு மருந்திடு மகனெனக்கு,
                     வரமுத்தம் தந்தருளே!

கருக்கொடு திருக்கழுத்தன் உறுபாகத் தருமமே!
                     கனிமுத்தம் தந்தருள்க.
கருணையே!கற்பகமே!கவிதையே!கல்யாணி!
                     கனிமுத்தம் தந்தருளே.

                                பொருள்

அருகம்புல்லை அணிந்தவனாகவும்,அதர்வண வேதத்தின் தலைவனாகவும்,உருவமற்றவனாகவும்,
யானைஉருவத்தைக்கொண்டவனாகவும்,அருளைஅடியவர்களுக்குவழங்குபவனாகவும்அறியாமையைப் போக்குபவனாகவும் விளங்குகின்ற விநாயகப் பெருமானுக்கு அருள் பொதிந்த முத்தம் அளிக்கும் அன்னையே!
    கர்வமும்,அகம்பாவமும் கொண்ட அரக்கர்கள்,வரபலம் பெற்றுள்ளோம்,என்ற மமதையில் முருகனோடு போருக்கு வந்து,எதிர்த்து அழிந்தனர்.அரக்கர் தலைவனான சூரபன்மனைத் திருத்தி
நல்வழிப்படுத்த அவனை,மயிலாகவும்,சேவலாகவும் ஏற்று அருள்பாலித்த முருகனுக்கு முத்தம் தந்த
அன்னையே!
     தந்தையைக் காணாது குளக்கரையில் அழுது கொண்டிருந்த சம்பந்தக் குழந்தைக்கு அமுதப்பால்
ஊட்டி,அருகணைத்து முத்தம் தந்த அன்னையே!உன்னையே நினைந்து வருந்தியும்,பல்லாண்டு
தவம் இருந்தும் வருகின்ற அடியேனுக்கு,மருந்தாக,மனமிரங்கி முத்தம் தந்தருள்வாய்.
       கருமை நிறக் கழுத்தினைக் கொண்ட நீலகண்டனின் ஒருபாகத்தைப் பெற்று விளங்கும் தரும
தேவதையே!முத்தம் அருள்வாய்.
     கருணை கொண்டவளே!கற்பகமரம்போல் வாரி வழங்கும் அம்மையே!கவிதையாம் செந்தமிழே!
கல்யாணி அம்மையே!முத்தம் தந்தருள்வாய்.
                       
                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக