திங்கள், 27 மார்ச், 2017

வருகைப்பருவம்...4

                                  வருகைப்பருவம்.....4

வெள்ளியாய்  உள்ளமாய்   அள்ளிடும்   குளிர்ப்பனியாய்,
                       வெள்ளமாய்,    விளங்கும்
வெள்ளிமான்   துள்ளலில்   புள்ளிமயில்உள்ளிவரு
                       வெள்ளிமலை   உள்ளமே!

தள்ளாக்    கொள்ளா   அள்ளா   விள்ளாக்
                   கள்ளா    உள்ளா,
நல்லவை   வல்லான்   நல்லாடல்   தொல்லாடல்
                  நற்கனக   அவையவளே!

வெள்ளை   உள்ளம்    உள்ளும்  நல்லன,
                 வெள்ளிமலை:கனகமோ,
பள்ளும்    பைந்தமிழ்ப்    பண்ணாடும்   ஆடலே,
                  பரமன்    கன்னியே.

கள்வன்    உள்ளம்,    துள்ளிடும்   நல்லவள்
                 கல்யாணி! வந்தருள்க.
கிள்ளைக்  கரத்தளே! கொள்ளை  உளத்தளே!
                 கல்யாணி! வந்தருள்க.


                               பொருள்
வெள்ளிபோல்  நிறமும், களங்கமில்லா  உள்ளமும், அள்ளத்  தகுந்த  பனிக்கட்டியாயும்,குளிர்  நீராகவும், விளங்கும்  கயிலை  மலை.வெள்ளை
மான்கள்,துள்ளலிலும் ,ஒடுங்கு தோகைப் புள்ளிமயில் ஆட்டத்திலும்
விளங்கும்  கயிலை  மலையான்  உள்ளமாகிய   வெண்மையே!
      தள்ள  இயலாத,முழுதாய்க்  கொள்ள  இயலாத,அப்படியே   அள்ள
இயலாத,உடைக்க  இயலாத,திருட  இயலாத,திருடும்   எண்ணமும்  கொள்ள
இயலாத, கனகப்பேரவை.நல்லவனாய்,வல்லவனாய்,விளங்கும்  ஆடற்கடவுள்  ஆடுகின்ற  கனகப்   பேரவை  ஆட்டத்தில்   துணை  நிற்பவளே!
     வெள்ளை   உள்ளமோ   கயிலை:நல்லன   அருள்புரிதலோ   சிதம்பரம்.
பள்ளாகிப்   பைந்தமிழ்   பண்ணாகி   ஆடும்  ஆனந்தக்    கூத்தனின்    அருந்துணையே!
        உள்ளம்   கவர்  கள்வன்   உள்ளத்தில்  அமர்ந்துள்ள  கல்யாணி  அம்மையே
வருக,
      பைங்கிளியைக்   கரத்தில்  கொண்டவளே! அடியவர்களின்  உள்ளத்தைக்
கொள்ளை  கொள்பவளே!கல்யாணி!   வருக.வந்து  அருள்  புரிக.

                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக