சனி, 18 மார்ச், 2017

முத்தப்பருவம்...3

                                  முத்தப்பருவம்....3

வினைபல புரிந்தனன் விதிவழி வதிந்தனன்
               வியப்பிலா வெறுமுடல் வளர்த்தனன்
வினையழி அனையுனை அடைந்தனன்:விலக்கிய
                விரல்நுனி தொடுவரம் விந்தையே!

மனையற மகிழ்சுக மலர்முத்து மயங்கிலேன:
              மலைதரு மணியதும் மதிக்கிலேன்:
கனைகுரல் கடலணி கவின்முத்து கனச்சுமை:
              கஜமரு முத்ததும் குறைகுணம்:


புனையணி புதுமணி முத்ததும் புகழிலை:
             புற்றரவு உமிழ்முத்தும் புன்குணம்:
புனைபோலப் பிறவிக்கடல் போக்கிடும் புனிதமே!
             புன்சிரிப்புப் பேரருளே புண்ணியமாம்.

சுனைநனை அருட்கர வரமருள் சுந்தரி!
                செவ்வாய் முத்தம் தந்தருள்வாய்.
சுனைப்பொழில் மனைப்பதி தனிலுறை சுந்தரி!
                 செவ்வாய் முத்தம் தந்தருள்வாய்.

                                   பொருள்
நெறிதவறிய செயல்களைப் புரிந்து,துயருற்றநான் விதியின் பிடியிலும் சிக்கித்
தவித்தேன்.நடைப்பிணமாய் வாழ்ந்தேன்.அக்காலை கல்யாணி அம்மையே!உனது
சேவடியைச் சிந்திக்கும் வாய்ப்பும்,பேறும் கிட்டியது.உனது விரல் நுனி அருள் என்
மீது பட்டதும் என் துயரும்துன்பமும் மறைந்தது.உன் கருணை வியப்புமிகு பேர்ருள
எப்படிப் போற்றுவேன்.
        மனையறசுகம் நாடி,மலர்முக மாய முத்துக்களில் மயக்கம் கொள்ளேன்.
மலையில் விளையும் மரகத முத்துக்களை ஒருபோதும் மதிக்க மாட்டேன்.அலைகடல்
விளை அழகு முத்தும் கூடக் குற்றச்சுமை கொண்டதே.யானையின் மத்தக முத்தும்
குணக் குறைபாடு உடையதே.
    ஆபரணங்கள் ஆக்கப் பயன்படும் புத்தம்புதிய முத்து கூடப் புகழ் உடையதாகா.
புற்றில் நாகப் பாம்பு காக்கும் இரத்தின முத்தும் புனிதம் ஆகாது. பிறவிப் பெருங்கடலை
நீந்திடப் படகாய் உதவி,வீட்டினை(மோட்சத்தை) அடைய வழி காட்டும் புனிதத் தாயே!
உனது புன்சிரிப்பே புண்ணிய முத்தாகும்.
     அருவிக் குளிர்போல் அருள்புரியும் அபயக் கரம் கொண்டு வரமருளும் கல்யாணி
அம்மையே! திங்கள் முகத்துச் செவ்வாய் முத்தம தந்தருள்வாய்.
    சுனையும், பொழிலும்நிறைந்த கன்னியாகுடி என்னும்ஊரில் வீற்றிருக்கும் கல்யாணி
அம்மையே! திங்கள் முகத்துச் செவ்வாய் முத்தம் தந்தருள்வாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக