புதன், 1 மார்ச், 2017

சப்பாணிப்பருவம்......4

                    சப்பாணிப்பருவம்....4

வயலிலே   வளப்பயிர்: வளைத்ததே   நெல்முத்து:
          வரப்பெலாம்   இளமலர்த்   தாமரைகள்:
அயலிலே   கரும்புடன்  அருவாழை   செழுமையே:
           அருமருதச் சோழநாட்டுத்  திருமகளே!

குயவரின் கைவண்ணம் குவிமண் சக்கரக்
             குறுகுறு சுற்றலின் கலையாய்
நயமிகு கவினாய் நலமிகு பொருளாய்
              நனிகலை  வளரூர் தலைவியே!

கயமது  கருவெளி கதுமெனக் காரிருள்
               களைத்திடு நிலையதில்,கடும்பசிப்
பயத்தெதிர் பீடரிமா பவித்திரப் பண்புடன்
              புறம்செலும் புதுக்குடிப்  புண்ணியமே!

அயனரி அடிபணி அரன்பதி அன்னையே!
               சப்பாணி கொட்டி அருளே!
சயத்திரு  கலைத்திரு உவந்திடு கல்யாணி!
               சப்பாணி கொட்டி அருளே.

                              பொருள்
கதிர் முத்திய நெல்மணிகள் நெற்பயிரை வளைக்கும் அளவு விளைச்சல் கொண்ட நெல் வயல்களும்,
வயலின் வரப்புகளில் இதழ் விரித்த தாமரையும்,பக்கத்தில் செழித்த கரும்பும்,வாழையும்,கொண்டு
விளங்கும் மருதநிலத்துச் சோழநாட்டின் பேரரசியே!
       குயவர்கள் மண்ணைக் குழைத்து,அதைச் சுற்றும் சக்கரத்தின் மீது குவித்து,சக்கரத்தைச்
சுழற்றுகின்றனர்.அங்கே கலையும் கவினும் கொண்ட வாழ்வாதாரப் பொருட்கள் தோன்றுகின்றன.
பானை,கலயம்.போன்றவை தோற்றுவிக்கும் கலைமிகுந்த கன்னியாகுடியின் தலைவியே!
     கர்ப்பமுற்ற ஒரு யானை குட்டியை ஈனுகின்ற இரவுப் பொழுது:காரிருளில் களைத்து ,தவிப்புடன்
நிற்கும் யானையை நோக்கிக் கடுமையான பசி கொண்ட ஒரு சிங்கம் வேகமாய் வந்தது,யானை
படும் துயரையும்,களைப்பையும் பார்த்து,உயர்ந்த சிந்தனை தழுவி,அவ்விடம் விட்டு அகன்றது.
பண்பாடு தழுவிய விலங்கினங்களும் வாழும் கன்னியாகுடி என்னும் ஊரின் புண்ணியமாய் விளங்கும் அம்மையே!
      பிரமனும்,திருமாலும் போற்றிவணங்கும் கைலாசநாதக் கடவுள் ஊரான கன்னியாகுடியின்
அன்னையே!இருகரம் கொட்டி.ஒலி எழுப்பி,சப்பாணி கொட்டுக
      இலக்குமியும்,சரஸ்வதியும் மகிழ்ந்து போற்றும் கல்யாணி அம்மையே!கரவொலி எழுப்பி,சப்பாணி
கொட்டி அருள்வாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக