வியாழன், 16 மார்ச், 2017

முத்தப்பருவம்..1

                                           முத்தப்பருவம்

பாட்டுடைத் தலைவியைக் குழந்தையாக்கி,அவளின் பெருமைகளைக் கூறி,
முத்தம்  தா"என வேண்டுதல் முத்தப் பருவம் ஆகும்.இது                        திங்களில்
நிகழ்வது.







                                 முத்தப்பருவம்...1

கனைகுரல்  கருமையில்   கலைநிலை   முகமதியே!
                  கருப்புவில்   புருவமே!
கணைச்சுடர்   கனிந்திடு   கருணைக்   கருவிழியே!
                   கவிபுகழ்   சுழிமூக்கே!

நனையருள்   நலமொழி   நவின்றிடு   நாவே!
                     நசைதரு   செவ்விதழே!
நினைபவர்   நினைவுணர்   நீளருள்   நற்செவியே!
                     நிலவுமான   வலக்குழையே!

புனைதமிழ்ப்   புலவரின்   புதுக்கவி   புகைக்குழலே!
                       பனைஇனிப்   பழந்தமிழே!
அணைந்தவர்   அருள்வழி   அமுதளி   அனைமுலையே!
                        அணையிருள்    அருங்கரமே!

மனையெலாம்   மகிழ்வடை  மங்கள   மலரடியே!
                          முகிழ்முத்தம்  அருள்கவே.
மனைகுலம்   வளர்நலக்  கனிநகர்ப்   புனிதமே!
                           முகிழ்முத்தம்   அருள்கவே.

                                  பொருள்

இடி,இடிக்கும் குரலும்,கருத்த தன்மையும் கொண்ட மேகத்தின் நடுவே தோன்றும் நிலவுபோல்
முகம் கொண்டவளே!கருமையுற்ற வில்போன்ற புருவம் கொண்டவளே!நெற்றிக்கண்ணின் சுடரைத்
தணிக்கின்ற கனிவுடைக் கருவிழி கொண்டவளே! புலவர்கள் போற்றும் ஆற்றுச்சுழல் போன்ற மூக்கு உடையவளே!
    அருள் நனைந்த நலச்சொல் அருளும் நாவினைக் கொண்டவளே! பற்றினை வளர்க்கும் செம்மையான உதடு கொண்டவளே!நினைக்கும் அடியவர் மனத்தே தோன்றும் துயர்களை, கேட்டு,
அதனைக் களையும் அருள்கொண்ட காதினை உடையவளே!நிலவாகி,அடியவராம் அபிராமி பட்டர்
துயர் போக்கிய தோட்டினை அணிந்தவளே!
     புலவர்கள் புனையும் புத்தம் புதிய கவிதையில் புகைபோல் மென்மையும்,கருமையும் கொண்ட
கூந்தல் உடையவளே!இனிக்கும் பனம்பழம்போல் பேசும் பைந்தமிழே!இறைவன் ஆணைப்படி,
இளம் குழந்தை சமபந்தருக்கு,அன்னையாகி அமுதப்பால் அளித்த முலை கொண்டவளே!அடியவரின்
இருளாம் துயரை நீக்கி,அனைத்து,வாழவைக்கும் கரம் கொண்டவளே!
     கன்னியாகுடி ஊரின் வீடுகள் தோறும் நன்மை வழங்கும் மகிழ்ச்சி அருளும்,மலரடி கொண்ட
கல்யாணி அம்மையே!நினது திருவாயால் முத்தம் சிந்தி அருள்வாய்.,
    வீடு,குலம் போன்றவற்றை வளர்க்கும்,கன்னியாகுடியின் புனிதத் தாயே!நினது திருவாயால்
முத்தம் அருள்வாய்.
                     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக