ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

தோற்றுவாய்

                                                  தோற்றுவாய்

     எல்லாம் வல்ல பரம்பொருள் துணை கொண்டு,தமிழ்ப் பிரபந்தங்கள் என்னும் சிற்றிலக்கிய வகை
நூல்களில் கலம்பகம்,பிள்ளைத் தமிழ் என்னும் இரண்டிலும் முருகன் அருளோடு முருகன் புகழ் பேசிய
என் மனத்தே,"தூது"நூல் எழுதும் எண்ணத்தை அவ்விறைவன் தோற்றுவித்தான்.அவன் அருளால் அவன் புகழை,தூது நூல் வாயிலாகப் படைக்க முற்பட்டேன்.
         "பெற்ற  தாயும் பிறந்த பொன்னாடும்,நற்றவ வானினும் நனி சிறந்ததுவே"என்பாரே பாரதியார்.
அவர் சொல்லைத் தலைமேற்கொண்டு,யான் பிறந்த "கன்னியாகுடி முருகனையே பாட்டுடைத்
தலைவனாகக் கொண்டு "கன்னியாகுடி முருகன் மஞ்ஞை விடு தூது"என்னும் பெயரில் இயற்றத்
தொடங்கினேன்.
     முருகனுக்கும் மயிலுக்கும் உள்ள இணக்கம்,பக்தி,பாசம்,இணைபிரியாமை,போன்றன ,மயிலையே  தூதுக் கருவியாய்ப் படைக்கும் எண்ணத்தை எனக்குத் தந்தது,ஆங்காங்கு சுற்றித் திரியும் மயில்களைக் காணும்போதெல்லாம் முருகனைப் போற்றும் நாம் முருகன் ஊர்தியாம் மயிலையும்
போற்ற வேண்டாமா?என்று நினைப்பேன்.அந்நினைவே மஞ்ஞை விடு தூதாக உருவாயிற்று,எனலாம்.
     தமிழ் விடு தூது இலக்கியத்தை இளமையில் தேர்வு நோக்கில் படித்த காலை,அதன் உள்ளார்ந்த
பொருட்சுவையும்,அமைப்பு முறையும்,வரலாறுகள் விளக்கும் பாணியும்,மற்றவர் பார்வையில்
காண இயலாத தமிழ்ப் பார்வையும்,புலப்படவில்லை.இன்றோ படிக்கும் தொறும் புதுப்புது பொருள்கள் ஆழ்ந்த வரலாற்றுச் சிந்தனைகள் தோன்றுகின்றன.அதன் வழியே நானும் பயணித்தேன்.சொக்கநாதர்,
சுப்பிரமணியர் ,தந்தை  மகன்  ஆயினும் அவரும் இவரும் ஒன்றிணைந்த அழற்சுடர் அன்றோ!
மகனைத் தன்னோடு ஐக்கியப் படுத்தினார் தந்தை.நூலும் முந்தைய நூலொடு ஐக்கியம் ஆகும்,
ஆகவேண்டும்'என்ற பேராசையில் இந்நூலைப் படைத்துள்ளேன்.காலமும்,கவிதையும் காலக்கோடு.
     "கலிவெண்பா"என்னும் யாப்பு முறையில்,வெண்டளை பிறழாமல்,பாடப்பட்டுள்ள இந்நூலில்
புராண,வரலாற்றுச் சான்றுகள் ஆங்காங்கு தந்துள்ளேன்.சைவ சமயக் கோட்பாடுகளும்,
சிவத்தலங்களின் பெருமைகளும் தக்க இடத்தில் விளக்கியுள்ளேன்.

ஊர்ப்பெருமை :--கன்னியாகுடி என்னும் சிற்றூர்.ஆயினும் பண்புடைச் செயலால்,விருந்தோம்பலால்,
வேளாளர் செயற்பாட்டால் அவ்வூர் உயர்ந்து விளங்குகிறது,"நற்கன்னி நல்லூர்" கல்வியளி சாலையும்
கற்கும் குழந்தைகள் நல்ல பணிவுடன் நாடிவருகின்ற நல்லூர்"என்று ஊரின் பெருமையைப் படைத்துள்ளேன்.

கைலாசநாதர் ;--கன்னிக் கோயிலின் கடவுள் கைலாசநாதர்.அவரை,"பொங்குகங்கை பூக்கும்
மலர்க்கொன்றை சூடிய----- சங்கரன் கைலாச நாதன்" எனப்போற்றியுள்ளேன்.

கல்யாணி அம்மை ;--இறையின் பெயர் கல்யாணி அம்மை."கல்யாணி கற்பகச் சைல மகள் "
என்றுபோற்றப்படுகிறாள்.

முருகன் ;--நூல் முழுவதுமே அவன் புகழ் தான்.சிறப்பாக,"கண்ணழகன்,கால்போற்றின் கண்ணருளும்
காரழகன் "என்று முருகனின் அழகும்,கருணையும் போற்றப்படுகிறது.

இயற்கை வருணனை ;--சோழநாடு ஆதலின் மருத  நிலமே இயற்கையாக வருணிக்கப் படுகிறது.
முருகனைத் தேடி அலையும் தலைவி செல்கின்ற வழியில் "செந்நெல் வயல்வரப்பு ....எனத்தொடங்கும்
14  வரிகள் மருதநில இயற்கை வருணனையாக அமைந்துள்ளது,இன்னும்,"உழவுப்பயனாய் விளங்கும்
பழவாறு"என ஆற்றையும்,"உழவின் உயிராம் சிறு சிறு வாய்க்கால்"என வாய்க்காலையும்,
"சோழ வளநாட்டின் சுந்தரக்காடுகள்"என வயல்களையும்,"முக்கால நற்பயிர்கள் முன்னூறு முத்தளக்கும்"எனப் பயிர்களையும்,"அரும்பு முல்லை மல்லிகைத் தோட்டம்"என மலர்களையும்,
விளக்கியுள்ளேன்.

சோழர்கள் ;--"நீதியான் தேர்க்கால்"சீத முசுகுந்தன்,""தன்னுயிரைச் சீதனமாய்த் தந்த சிபி"எனச்
சோழமன்னர்களின் சிறந்தோரைக் குறிப்பிட்டுள்ளேன்.

புராண வரலாறு '-- "கழுகு ஜடாயு வினைதீர் நறைமலர் நல்லூர்"என வைத்த்தீஸ்வரன் கோயிலைக்
குறிப்பிட்டு,ஜடாயு மோக்ஷத்தையம்,"
"பாத தரிசனத்தில் பைந்தமிழ் வாசகர்,
நாதநாத என்றழைத்து நற்சிவன் நாடினாற்போல " என மாணிக்கவாசகர் வரலாற்றையும்,
"குழலணி  திங்களாய் வானிலே கண்டே
அழகன்னை முன்வீழ்ந்த பட்டர்போல " என்னும் வரிகளில் அபிராமி பட்டர் வரலாற்றையும்,
"சூரனவன் மாளாது சேவல் மயிலாகி"என்னுமிடத்து,முருகனின் கருணை வரலாற்றையும்,
"பீடுபுகழ் பெற்றிடவே பாதியுடல் பெண்ணானான்"இதில் சிவபெருமான் மலைமகளுக்கு
உடலில் பாதி வழங்கிய வரலாற்றையும் விளக்கியுள்ளேன்.

உவமை வளம்;-   தலைவிக்கு உதவ முன்வந்த நெஞ்சத்தை,"ஏகனவன் பக்தர் இடர்களையத்
தோன்றல்போல் "என்ற உவமையும்,
தலைவியின் மனம் படும் துயரை,"கடலலை பட்ட துரும்பென"என்ற உவமையும்,
முருகனைத் தேடி அலையும் தலைவியின் செயலை,"கன்றுதேடும் தாய்போல"எனவும் வளமுடைய
உவமைகளைப் பயன்படுத்தியுள்ளேன்.

உவமையணி ;- "முன்னொருகால் கந்தனுக்கு ஊட்டி அலைகடல் நல்லுலகு காத்தது போல்
கலைமொழிப்பண் காத்திட்ட தாயின் கவினருள்"
"தண்ணாறு வண்ணவயல் வாழவைக்கும் தன்மைபோல் "என
ஆங்காங்கு உவமையணி பயில்கிறது.

முடிவாக......முருகனின் புகழ் ஒன்றே மூலதனமாகக் கொண்டு பல நிலைகளிலும் முருகன் போற்றும்
இந்நூல் கலிவெண்பா"என்னும் யாப்பு முறையில் அமைந்துள்ளது.வெண்டளை மட்டுமே பயிலும்
அமைப்பினைக் கொண்டது.முருகன் பேரருளால் இதனைத் திறம்பட ஆக்கியுள்ளேன் என நினைக்கிறேன்.பேரருள் புரிந்த முருகனுக்கு முதல் நன்றி.இதனை நன்கு அச்சிட்டு வடிவமைத்த
திரு.சேது விஜயன்,விஜயா பிரஸ் மண்ணிவாக்கம் அவர்களுக்கும்,இந்நூலுக்கு அணிந்துரை
வழங்கிய .........................................................................................................................................................அவர்களுக்கும்,
என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வழக்கம்போல் எனது இப்பணிக்குப் பல்லாற்றான்
உதவிய என் குடும்பத்தார்க்கும் நன்றி.

                                                              வணக்கமும் நன்றியும்
  ...................                                                                                                                                          தங்கள்
சென்னை.73
                                                                                                                                               சுவாமி.சுப்பிரமணியன்

   
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக