ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

சப்பாணிப்பருவம்...2

                                  சப்பாணிப்பருவம்,,,,,,2

கருணை  கலந்த   அமுதக்   கடலே!
   கலைகள்   குலிந்த.  கற்பகமே!
கருமை    மேகப்   பொழியருள்    கரமே!
    கவிமனக்   கவிதைக்   கருவே !

இருளில்   ஒளிர்ந்த   இரத்தினக்    குழையே !
       இருங்குயில்   இசைபயில்   மொழியே!
இருக்கொடு   நான்மறை    இலங்கு   இனியநாவே!
        இலக்கிய   கனிச்சுவை  இதழே!

அருள்வதில்   அளவிலா   மகிழ்வுடை   அகமே!
          அருவியாய்ப்   பொழிந்திடு   கருணையே!
அருளொடு   பெருநிலம்   அருள்வதில்   மகிழ்ச்சியே!
          அருங்குண   நிறைமன  அன்னையே!

திருத்தகு   நலப்பதி   விருப்புடைத்   தலைவியே!
           சப்பாணி    கொட்டி   அருளே!
திருமகள்   கலைமகள்   போற்றிடும்   மலைமகளே!
           சப்பாணி   கொட்டி   அருளே

                         பொருள

அமுதக்கடல்போல் கருணை பொழிபவளே!கற்பக மரம்போல் கலைகள் வற்றாது வழங்குபவளே!
கருக்கொண்ட மேகம்போல் அருள் வழங்கு கரம் கொண்டவளே!கவிஞர்களின் உளத்தே எழும்
கவிதைப்பொருளே!
    அடியவருக்காக,அமாவாசையில் ஒளிர்ந்த நிலவான இரத்தினத் தோடே!குயிலின் இனிய இசைப்பெருக்கே!நால்வேதமாம் நனி நாவே!இலக்கியம்போல் இனிக்கும் இதழே!
    அடியவருக்கு அருள் வழங்குவதில் ஆனந்தம் கொள்ளும் மனதுடையவளே! கருணை காட்டுவதில்
அருவியாய் அமைந்தவளே!அருளோடு நல்வீடு நல்குவதில் பெரு மகிழ்வு கொண்டவளே!அருமையாய்
நற்குணங்கள் நிறைந்த கல்யாணி அம்மையே!
     செல்வமும் நன்மையும் நிறைந்த கன்னியாகுடியின் மக்கள் விரும்பும் தலைவியே!இருகரம் குவித்து சப்பாணி கொட்டி அருள்வாய்!
    திருமகளும்,கலைமகளும் போற்றி வணங்கும் மலைமகளாம் கல்யாணி அம்மையே!இருகரம்
குவித்து,ஒலி எழுப்பி சப்பாணி கொட்டி அருள்வாய்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக