செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

தாலப்பருவம் ....7

                                  தாலப்பருவம் ....7

விண்ணிலே  விதையில்லாப்  வெண்பவள  நறுமணத்தின்
                           விரிவே நின்கூந்தல்:
பண்ணிலே  பண்புகூட்டிப்  பார்வையிலே கருணைகூட்டும்
                         பசுமையே  நின்கண்கள்:

மண்ணிலே மகிழ்ந்தோடும் மலையருவி நதிநீரின்
                        மகத்துவமே நின்மொழி:
கண்ணிலே கசிந்துருகும்  கடுந்துயரைக் களைந்தடியார்
                         காத்தருளல் நின்பண்பு:

தண்ணளித்  தயைகொண்ட தாயெனினும்,தருக்கரைத்
                          தண்டிப்பது  நின்வீரம்:
எண்குணத்தான் மணந்திடவே எழிலிளமைப்  பருவத்தே
                          எடுத்துயர்ந்தது  நின்தவம்:

பெண்ணிற்  பெருந்தக்கப்  பேறுடைப்  பார்வதியே!
                          தாலோ! தாலேலோ!
கன்னியாகுடிக் கருணைமிகு கற்பகமே!கல்யாணி!
                          தாலோ! தாலேலோ.

                             பொருள்
     விண்ணகத்தில் அதுவாகவே தோன்றிய நறுமணம் மிக்க பாரிஜாதம் எனப்படும் பவள மலரின்நறுமணம் உனது கூந்தலின் நறுமணம்.பண்ணிலும் பண்பு கலந்த கண்ணோட்டம் உடைய கருணை
மிகுந்த கருணையே உனது கண்கள் ஆகும்.
    மலையில் தோன்றி,அருவி எனக்கொட்டி,ஆறாக நிலவுலகில் ஓடும் புண்ணிய ஆறுகளினகுளிர்ச்சியும்,தடங்களில்லா விரைவும்,இயற்கை அழகும் கலந்ததே உனது மொழி ஆகும்.அழுது,
புரண்டு,நைந்து போன அடியார்களின் துயர் அறிந்து,அதனைக் களைந்து,காத்தலே உனது பண்பாகும்.
     கருணையே வடிவான தாய் நீயே ஆவாய்.ஆயினும் தீமை வழி தீயன புரியும் அரக்கர்களைஅழித்து உலகைக் காப்பது உன் வீரம் ஆகும்.ஐந்தாம் வயதிலேயே கடுந்தவம் இயற்றி,மனத்தே
குடிகொண்ட இறைவனை அடையும் அளவு உயர்ந்தது உனது தவம் ஆகும்.
     பெண்களில் உயர்ந்த பெருமை அடையும் பேற்றினைப் பெற்ற பார்வதியாம் கல்யாணி அம்மையே!தொட்டிலில் தவழ்ந்து தூக்கம் கொள்வாய்.தாலோ!தாலேலோ.
கன்னியாகுடி என்னும் ஊரின் கருணை மிகுந்த கற்பகமாய் விளங்கும் கல்யாணி அம்மையே!தொட்டிலில் நல்லுறக்கம் கொள்க.தாலோ!தாலேலோ.
                           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக