திங்கள், 6 பிப்ரவரி, 2017

தாலப்பருவம்......6

                           தாலப்பருவம்.....6

அன்னமே! அஞ்சுகமே! பொன்மயிலே! பூம்புறவே!
                   ஐவண்ண, அருங்கிளியே!
மின்னிடும் விண்மீனே! மேகநடு   முழுமதியே!
                    மின்னலொளிச் சுடர்க்கீற்றே!

கன்னலின் நறுஞ்சாறே! கனிமாவின்  நனிஇனிப்பே!
                   கதலிக்குலை   களிச்சுவையே!
இன்னருங்குளிர்   இளநீரே! இலைமறை  கொய்யாவே!
                              இளமைவளர் எழில்நெல்லியே!

பொன்னிதழ்   மல்லியே!  புதுமுகை   முல்லையே!
                        பூக்காட்டுச்   செண்பகமே!
தண்ணளி   தாமரையே!    தடாகத்துத்   தவழல்லியே!
                   தளிர்ச்செங்கால்   பவளமல்லியே!

மன்னவன்   மயில்முருகன்   மடியமர்   மலைமகளே!
                    தாலோ! தாலேலோ!
கன்னியா   குடிவாழ்   கற்பகமே! கல்யாணி!
                   தாலோ!  தாலேலோ.

                                 பொருள்
  அன்னமே! அழகிய கிளியே! பொன்னிறத்  தோகைமயிலே! மென்மையான புறாவே! ஐந்து வண்ணம்  கொண்ட கிளியே! வானத்தில் மின்னிடும் நக்ஷத்திரமே! மேகத்தின் நடுவே
ஒளிரும் நிலவே! மேகத்தில் தோன்றும் மின்னல் ஒளிக் கீற்றே!
         இனிக்கும் கருப்பஞ்சாறே! மாங்கனியின் சுவையே! குலை வாழைக் கனியின் நறுஞ்சுவையே!
குளிர்ச்சியும்,இனிப்பும் கொண்ட இளநீரே! மரத்திலை இடையே மறைந்து விளங்கும். கொய்யாக்
கனியே!  இளமை வளர்க்கும் நெல்லிக்கனியே!
    மணக்கும்  மல்லிகை மலரே! அன்றலர்ந்த முல்லை மலரே! குவிந்து காடாய் வளரும் செண்பக
மலரே! குளிர்ச்சி உடைய தாமரையே! குளத்தில் மலர்ந்த அல்லி மலரே! செங்கால் உடன்
காட்சி தரும் பவளமல்லி மலரே!
       மன்னனாம் முருகனை மடியில் அமர்த்தி ஞானம் வழங்கும் மலைமகளே! கல்யாணி!
தங்கத் தொட்டிலில் நல்லுறக்கம் கொள்வாய். தாலோ! தாலேலோ..
     கன்னியாகுடி என்னும் ஊரில் எழுந்தருளி நல்வரம் நல்கும் கல்யாணி அம்மையே! தொட்டிலில்
நல்லுறக்கம் கொள்க.தாலோ! தாலேலோ.

                                     விளக்கம்

பறவைகள்,   நிலவு,கனிகள்,மலர்கள்,போன்ற இயற்கைகளை,அம்மையாய்
உருவகித்து, உயர்குணம்,குளிர் கருணை,இனிமை வரமருளல் போன்றன
கொண்டவள் என்பது விளக்கப்படுகிறது.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக