வியாழன், 2 பிப்ரவரி, 2017

தாலப்பருவம்...3

                        தாலப்பருவம்...3

மலையது,  துணையென   மாலையும்   வென்றவன்
                    மாயமும்   மடிந்திட,
நிலையது   நின்றிடா   நிலைபலர்   பெற்றிட,
                    நிலையளி   நீள்வேல்,

சிலைபல,  சிவம்பல,  வரம்பல,  சிறப்புடைச்
                   சிவப்பு   விழியரக்கர்,
அலைபடு   துரும்பென   அவரவர்  வலியிழந்து,
                   அழிவினை   அளித்தவேல,,

தலையவன்   தருக்கவன்   தரித்தநல்   மாயமும்,
                      தருக்குமே   தவிர்ததவன்
கலைமயில்   ஊர்தியாய்,கணக்குரல்   சேவலாய்,
                      கவினருள்   கரவேல்,,

கலைஞனைக்   குமரனை   அருளிய   கருணையே!பலப்பல
                          தாலோ!   தாலேலோ.
கலைகளின்   கருவூலம்   கனிகுடிக்   கல்யாணி!
                        தாலோ! தாலேலோ.

                         பொருள்

   கிரௌஞ்ச மாய மலையைத் துணையாகக் கொண்ட தாரகன்,திருமாலையே
வென்றவன்.அவனும்,அவன் மாயமும் மடிந்திடவும்,நிலையானவர் என்ற இறுமாப்பு
கொண்ட பலப்பல அரக்கர் நிலை அழித்த வேல்,
      சிவனிடம் பெற்ற வரபலத்தால் சிறப்பு கொண்டு விளங்கிய செங்கண் அரக்கர்
பலர்,கடலலை அகப்பட்ட துரும்பு போல் தத்தம் வலியிழந்து மாள வைத்த வேல்,
     மாமன்னன் சூரபன்மன் செருக்கும்,மாயமும்,அழித்து,அவனை மயில்
வாகனமாயும்,ஒலிக்கும் குரலால்" கொக்கறுகோ" ஏனப்புகழும் கொடிச்
சேவலாகவும்,அருள் தந்த வேல்,
      கரம் கொண்ட கலைஞனாம் முருகனைப் பெற்றெடுத்த கருணைத் தாயே!
தொட்டிலில் உறங்குவாய்.தாலோ! தாலேலோ.
எல்லாக் கலைகளும் நிறைந்து விளங்கும் ஊரான கன்னியாகுடியில் விளங்கும்
கல்யாணி அம்மையே! தொட்டிலில் நல்லுறக்கம் கொள்வாய்.தாலோ! தாலேலோ.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக