சனி, 4 பிப்ரவரி, 2017

தாலப்பருவம்....4

                                         தாலப்பருவம்.....4

வெண்மையே   விதானம்: வெண்பனிப்   புதுமேனி:
                          வெள்ளருவித்   தோரணமே.
வெண்ணீற்றுப்   பனிமலர்:   வெண்மலை   மகவாகி
                           விளையாட்.  டமர்ந்தவளே!

பெண்மையே   வியக்கப்   பாண்டியன்  பெண்ணாகிப்
                        பைம்முலை   மூன்றாகிக்
கண்ணெதிர்   கண்மூன் றுடையானைக் கண்டதுமே
                        கவினியல்    கொண்டவளே!

தண்கடற்   கரையருகே   தாணுமூர்த்தி   வருகைக்குத்
                   திருமணம்    காத்திருக்க,
அண்ணல்வழி   தடைப்பட,அருஞ்சேவல்   கூவிடவே,
                   அருந்தவத்    தனிக்குமரியே!

மண்பரவிய    மாப்புகழ்   மாதரசி   மாணிக்கமே!்
                      தாலோ!  தாலேலோ!
விண்ணவரும்   வணங்கவரும்  வளக்கன்னி   வடிவழகே!
                       தாலோ! தாலேலோ.

                            பொருள்
     வெண்ணிறப் பனி சூழ்ந்த இமயமலை.தோரணங்களும்,அருவிகளும்,மலர்களும் பனியே.அவ்விமயமலைக்கு    மகளாக   அவதரித்து  வளர்ந்து விளையாடிய மலைமகளே!
       பாண்டியன் மகளாகப் பிறந்து,மும்முலை கொண்டு அவதரித்து,திக்விஜயம் செய்யுங்காலை
கைலையிலே சிவனைக் கண்டு,நாணமுற்றபொழுது,மூன்றாம் முலை மறைய,சிவனையே,
மணந்து மதுரையை ஆண்ட பாண்டியன் மகளே!
       விடியற்காலை மணம்.மணமகன் தாணுமாலீசன்.பொழுது புலர்ந்தும் புண்ணியன் வரவில்லை.
காத்திருந்தே காலம் கழிக்கும் கன்னியாயக் குமரியில் தவநிலை மேற்கொண்ட கன்னியா குமரியே!
      உலகெலாம்பரந்து சக்தி பீடங்களாய்ப் புகழ் பெறு மங்கையர் குல மாணிக்கமே! கல்யாணி
அம்மையே! தொட்டிலில் தவழ்ந்து உறங்குக,தாலோ! தாலேலோ.
        விண்ணவரும்,மண்ணவரும் போற்றும் கன்னியாகுடி அழகுத் தாயே! தொட்டிலில் தவழ்ந்து
உறங்குவாய்,தாலோ! தாலேலோ.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக