செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

சப்பாணிப்பருவம்........1

                        சப்பாணிப்பருவம்
       பிள்ளைத் தமிழின்   நான்காம்   பருவம்  இது.ஒன்பதாம்    திங்களில்
அமர்ந்தபடி,  கைகொட்டிச்   சிரிக்கும்   குழந்தை   விளையாட்டே  இப்பருவம்.
கல்யாணி  அம்மையைக்  குழந்தையாகப்  பாவித்து,அம்மையே!  கைகொட்டி
அருள்வாய்,  என வேண்டுதல்.





                      சப்பாணிப்பருவம்.......1

தேன்பொழி  திகழ்மலர்   தெண்ணீர்   குளிர்மலர்,
                     தளிர்க்கரம்    பறித்தும்,
தேனிசை   கருங்குயில்   தெள்ளிசை   சுவைத்தும்,
                    தென்றலில்    ஆடியும்,

மான்மருள்   வருடியும்,    மற்றது   மகிழ்ந்திட,
                    மாந்தளிர்  வாயளித்தும்,
மாலை   மதியின்   ஒளியதில்   மயங்கியும்,
                     மாக்கோலம்    வரைந்தும்,

வான்விரி   தோகைமயில்    வண்ணம்   வியந்தும்,
                  வட்டெடுத்   தாடியும்,
வான்பறவை   கணக்கெடுத்தும்,வெண்புறா   கொஞ்சியும்,
                   வாய்க்கால்   நீராடியும்,

பூணணி  குலுங்கிடப்   புரியாடல்   பெண்ணரசி!
                சப்பாணி   கொட்டியருள்.
நாணணி   நலக்குல   நல்லூர்    நற்றலைவி!
                 சப்பாணி    கொட்டியருள்.

                          பொருள்

     நறுமணமிக்க மல்லிகை,முல்லை போன்ற மலர்களையும்,நீரில் மலரும் அல்லி,தாமரை,குவளைபோன்ற மலர்களையும் மென்மையான கரங்கொண்டு பறித்தும், கருங்குயிலின் இசையைக் கேட்டுமகிழ்ந்தும்,தென்றல் காற்றில் ஓடியாடியும்,
   மருளும் மானினம் தடவிக்கொடுத்தும்,அம்மான் மகிழ்ந்து பசியாற,இளம் மாவிலையை. அதன்வாயில் ஊட்டியும்,மாலையில் தோன்றும் நிலவொளியில் மனதைப் பறிகொடுத்தும்,தரையில் அழகிய
கோலம் வரைந்தும்,
      தோகையை விரிக்கும் மயிலின் அழகைக் கண்டு வியந்தும்,வட்டு என்னும் ஆட்டம் ஆடி மகிழ்ந்தும்,வானத்தில் பறக்கும் பறவைக் கூட்டங்களை எண்ணி,எண்ணி வியந்தும்,வீட்டில் வாழும் வெண்மையான புறாவோடு கொஞ்சி விளையாடியும்,பாய்ந்தோடும் வாய்க்கால் தண்ணீரில் குதித்து
நீராடியும்,
     அணிந்த ஆபரணங்கள் குலுங்குமாறு விளையாட்டில் ஈடுபாடு கொண்ட பெண்ணரசி கல்யாணிஅம்மையே! உன் கரத்தால் ஒலியெழுப்பி,சப்பாணி கொட்டுக.
    நாணத்தை அணியாகக் கொண்டும்,நன்மையே பிறர்க்களிக்கும்நல்ல குடிமக்கள்போற்றும்கல்யாணி அம்மையே! இருகரம் தட்டி,ஒலியெழுப்பி,சப்பாணி கொட்டுக.


                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக