வியாழன், 9 பிப்ரவரி, 2017

தாலப்பருவம்.........10

                             தாலப்பருவம்.........10

மானினேர்விழி   மாதர்கள்   மயங்கிடும்   மதிச்சோலை
                           மலர்களிலே   மதுவருந்தி,
தேனினேரொலி   தூண்டிடும்   தலைசாய்ந்திடும்: தேனிழிமலர்
                            தேடியலை   வண்டுகளும்,

பானையோர்புறம்  பாளையோர்புறம் பருவமோர்புறம்  சுமந்துவரும்,
                              பாவைமேல்மனம்  தாவிடும்குணச்
சேனையார்வயல்  சேற்றினில்நடு   நாற்றினில்நிலை  மாற்றியே,கள்,
                                சோற்றினில்விழு  உழவர்களும்,

ஆனினேர்குரல்   அரற்றுமேஒலி   அடிக்குமேமணி   அசையுமேநடை
                             அமையுமேபுகை   ஆவினங்களும்,
கூனியோர்நடை,  குனிந்துஓர்இரை,கொக்குவோ,குரல்   நாரையோ,வளம்
                               கூட்டிடும்துணைப்   பறவைகளும்,

காணிநேர்நிலக்    காடுகள்வளர்   கழனியூர்,புகழ்க்   கல்யாணி!
                               தாலோ! தாலேலோ.
பேணுவார்நலம்     காக்குமோர்புரிப்   பேரரசியே! கல்யாணி!
                                தாலோ! தாலேலோ.

                                பொருள்
     மான் போன்ற கண்களை உடைய இளம்பெண்கள் விரும்பிச் சென்று,மனமயக்கம்,
கொள்ளும்,சோலையில்,மலர்ந்துள்ள மலர்களில் அமர்ந்து,தேனைச் சுவைத்து,மயங்கியும்,
ரீங்காரம் இட்டபடிப் பறந்து புது மலர் தேடும் வண்டுகளும்,
     சோற்றுப் பானையைத் தலையிலும்,கள்ளுப் பானையை இடுப்பிலும்,பருவ அழகை உடல்
முழுவதும் சுமந்துவரும்,தங்கள் குலப் பெண்கள் மீது,பார்வையைச் செலுத்தி,உழவுப் பணியில்
நாட்டமின்றிப் பாவையர் கொணர்ந்த கள்ளைக் குடிப்பதிலும்,சோற்றை உண்பதிலும் நாட்டம்
கொண்ட உழவர்களும்,
         காளையின் குரலொலி,கழுத்தில்கட்டியுள்ள மணியின் ஒலி,அசைந்து அசைந்து அவை
நடக்கும்ஒலி,கூட்டமாய்ச்செல்வதால் எழும்பும் பழுதிப்புகை,தோன்றச் செல்லும்,ஆவினங்களும்,
கூனிக்குறுகி நடந்து சென்று,குனிந்து கொத்தித்தின்னும்இரையால் மகிழ்ந்த கொக்கு,பெருங்குரல்
எழுப்பும் நாரை,என மருதநில வளம் சேர்க்கும் பறவைகளும்,
       
நிறைந்த மருத நில வயல்கள் நிறைந்த கன்னியாகுடியின்,புகழ்மிக்க
கல்யாணி அம்மையே! தொட்டிலில் தவழ்ந்து உறங்குக.தாலோ! தாலேலோ.
 போற்றிவாழும் மக்களைக் காக்கும் கன்னியாகுடிப் பேரரசியே! கல்யாணி! தொட்டிலில்
தவழ்ந்து உறக்கம் கொள்க. தாலோ! தாலேலோ.








                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக