செவ்வாய், 3 ஜனவரி, 2017

துர்க்கை .......8

                                           துர்க்கை .......8

பஞ்சினும் மெல்லடிப்  பவள மேனியாள்:
பற்பல படைகள் பாங்குடன் கொண்டவள்:
பக்தர் காக்கும் சக்தி உருவினாள்:
பதினெண் கரமுடை துர்க்கையே காப்பாய்.

விஞ்சையர் சூழ்ந்த விரிவான் தோன்றி,
விளங்கு சங்கொடு  சக்கரம் ஏந்தி,
விண்ணிலும் மண்ணிலும் அச்சம் களையும்,
விஷ்ணு துர்க்கையே விருப்புடன் காப்பாய்.

அஞ்சேல்!அறவழி  ஆக்கம் அளிப்பேன்:
அரக்கர் அழித்து,அகிலம்  காப்பேன்:
அரைக்கசை புலித்தோல் மழுவில் அணிந்த,
அரனின் அம்சமாம் துர்க்கையே காப்பாய்.

மஞ்சள் இஞ்சி,மணிநெல் நடுவே,
தஞ்சமாய்த் தாமரை விளையும் கன்னி
அஞ்செழுத் தையன் அகத்தாள் கல்யாணி
கொஞ்சு மழலையாள் காத்திடுக துர்க்கையே.

                              பொருள்

பஞ்சு போன்ற மென்மையான திருவடிகள் கொண்ட,செம்பவள மேனியை உடையவள்:பல்வேறு
படைகள்(ஆயுதங்கள்)பரசு,கதை,குலிசம்,வில்,வாழ்,போன்றவை)கரத்திலே கொண்டவள்:
அடியவர்களைக் காக்கும் அன்னை வடிவத்தினாள்:பதினெட்டு கரம் கொண்ட துர்க்கையே!கல்யாணி
அம்மையைக் காப்பாய்.
     ஏழு மாதர்கள் சூழ்ந்து நிற்க,வானத்தே தோன்றி,சங்கு,சக்கரம் ஏந்தி, அச்சம் போக்கி,
,விண்ணகத்திலும்,மண்ணகத்திலும்,அருள் பாலிக்கும் விஷ்ணு
துர்க்கையே!கல்யாணி அம்மையைக் காப்பாய்.
     உலகோர்!அச்சம் தவிர்ப்பீர்!அரக்கர் அழித்து உலகம் காப்பேன்,என்று கூறி இடையில் புலித்தோலும்,
மழுவாயுதமும் வில்லும் தரித்துக் கொண்டு,சிவனின் அம்சமாய் விளங்கும் சிவா துர்க்கையே!
கல்யாணி அம்மையைக் காப்பாய்.
     மஞ்சள் ,இஞ்சி வரப்பிலே பூக்க,வயலிலே நெல் விளைய,நடுவிலே தாமரை மலரும் விளைநிலங்கள்
நிறைந்த கன்னியாகுடி என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள,கைலாச நாதரின் மனம் நிறைந்த
கல்யாணி அம்மை.அம்மையைக் குழந்தையாக்கிப் பாடப் படும் பிள்ளைத்தமிழ்நூல் போற்றும்
அம்மையாம் குழந்தையைத் துர்க்கையே!காத்திடுவாய்.
   



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக