செவ்வாய், 3 ஜனவரி, 2017

கலைமகள் ......7

                                   கலைமகள் ......7

ஆய கலைகள் அறுபத்து நான்கும்
ஆகம அருமறை அமிழ்தமிழ் அனைத்தும்
ஆதியோ டந்தம் ஆழ்மனச் சந்தம்
ஆதவ நல்லொளி வேதமுதல் கலைமகளே!

தேயம் தாண்டினும் தேடிடும் சிறப்பு:
தேவனாய்த் தீம்புகழ் தந்திடும் சிறப்பு
தணலழி,திருட்டழி அளியழி தகவிலை :
துணங்கணங் கனைவரும் தொழுதிடும் தூயவளே!

தூய வீணை தாங்கி நின்று,
தூய வெண்மை சார்ந்து நின்று,
தூய கல்வி ஏற்று நின்று
தூய நாவில் அமர்ந்து இருப்பவளே!

காய்நிலா கண்டுவிரி கனியிதழ் கமழல்லி
வேயுராய் வருகான வளமுடைக் கன்னித்
தாயவள் கல்யாணி தளிர்ப்பதம் போற்றி,
நேயமுடன் நற்றமிழ் புரக்கவும் வருகவே.

                                பொருள்

உலகத்திலுள்ள அனைத்துக் கலைகளும்,ஆகம,மறைநூல்கருத்தும்,தமிழ்நூல்களின் கருத்தும்,
மனத்துள் சந்தமாய்க் கொண்டு,ஆதவ ஒளிபோல் புகழொளி மிக்க கலைமகளே!
   உன்வழி,கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு:கற்றவன் தேவனுக்கு நிகரான புகழைப் பெறுகிறான்:கல்வியாம் உன்னைக் களவு கொள்ள இயலாது:நெருப்பால் பொசுக்க இயலாது:கொடுப்பதால் ஒருபோதும் குறையாது,இத்தகைய சிறப்புகள் கொண்ட உன்னை உலகோரும் அத்தனை தேவதேவியரும் தொழுது போற்றுகின்றனர்.
    நல்லிசை நல்கும் வீணையைத் கரத்திலே கொண்டவளே!வெண்மலர்,வெள்ளாடை,அணிந்து,
வெண்ணிறப்பறவை யாம் அன்னத்தின் மீது அமர்ந்தவளே!கல்வி,என்னும் தூய்மை வாய்ந்த
அருளைப் பொழிபவளே!தூயோனாம் பிரமனின் நாவில் அமர்ந்து காட்சி தருபவளே!(உலகோர்
நாவில் தங்கி அருள்பவளே!)
      வானத்தில் நிலவைக் கண்டு,தனது இதழ்களை விரிக்கும் நறுமண அல்லிமலர்கள் மலரவும்,
மூங்கில் மரங்கள் உராய்வதால் எழும் ஒளியே அமுதப் பாடலாய் ஒலிக்கவும்,இயற்கை வளம் பொருந்திய கன்னியாக்குட்டி என்னும் ஊரில் எழுந்தருளி,அருள்பாலிக்கும் அன்னையான
கல்யாணி அம்மையின் மென்மையான திருவடிகளைப் போற்றி,அம்மையை வாழ்த்திக் காக்க,
அம்மை மீது பாடப்படும் பிள்ளைத் தமிழ் நூல் காக்க,கலைமகளே!வருக!வருக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக