ஞாயிறு, 1 ஜனவரி, 2017

அலைமகள் ....6

                                 அலைமகள் ....6

இல்லம் எல்லாம் நல்லறச் செல்வமே!
இல்லாமை நில்லாமை ஆக்கிடும் செல்வமே!
இல்லோன் இதய இடம்பிடி இனிமையே!
இல்லிடை என்றுரை எழில்திரு இளமையே!

வல்லவன் வாழ்வின் வளமாம் துணையே!
வற்றா   வகையான் வேங்கட வரைவே!
வண்ண வடிவே!பொன்மழைப் பெண்ணே!
வணங்கும் அடியவர் வாழ்வின் ஒளியே!

அலைகடல் தோன்றி அமுதமாய் ஆனாய்.
அலைநீர்த் தாமரை அமர்ந்தே அருள்வாய்.
அலைஅலை அருந்துயர் அகற்றிடும் அன்னையே!
அலைமன ஆசையின் அடங்காத் திருமகளே!

நல்லோர் உள்ளுறை தெள்ளூர் கன்னிவாழ்
செல்வம் கல்விச் செழும்புகழ்க் கல்யாணி
சொல்லால் போற்றும் செந்தமிழ் நூலொடு
நல்லவள் காக்கவும் வாழ்த்தவும் வருகவே.

                             பொருள்

வீடுகளில் எல்லாம் நிறைந்த செல்வ வரலக்குமி:இல்லாமை களையும் தனலக்குமி:கணவனாம்
திருமால் மார்பில் அமர்ந்த மகாலக்குமி:இல்லை எனும்படி இடையழகு கொண்ட இளமைத் திருமகள்.
   வல்லவனான வராகன் மனைவி:வேங்கடத்தானின் பெருமைக்கு ஆதாரச் செல்வத் தலைமகள்
அழகு நிலைத்தவள்:பொன்மழை பொழியும் பேரரசி:அடியவர் வணங்கின் வாழ்வின்ஒளியாகுபவள்.
    அலைகடலிலே தோன்றி அமுதமாய் விளங்குகிறாய்!தாமரை மலர்மீது அமர்ந்து அருளைப்
பொழிகிறாய்.அடியவர் துயர்களை அகற்றுவதில் அன்னையாய் விளங்குகிறாய்.உலகோர் மனத்து
அடங்காச் செல்வ ஆசையை வளர்க்கும் திருமகளே!
      நல்லோர் வாழும் தொன்மை வாய்ந்த ஊரான கன்னியாகுடியில் கோயில் கொண்டுள்ள
கல்யாணி அம்மை:செல்வமும்,கல்வியும் போற்றும் அன்னை:அம்மையைப்  போற்றும் பிள்ளைத்
தமிழ் நூலையும்,அம்மையையும்,வாழ்த்தவும்,காக்கவும் வருவாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக