செவ்வாய், 31 ஜனவரி, 2017

தாலப்பருவம்........2

                            தாலப்பருவம்.........2

பொன்னி நதிக்கரையில் பூத்துக் குலுங்கும்
                 பூக்களைப்   பறித்தும்,
பொதுவில் நடனமாடும் புண்ணியன் திருவடிக்குப்
                  பணிவுடன் பூசித்தும்,

அன்ன நடைநடந்து  அங்குமிங்கும்   ஓடியும்,
                    அரைகழல்    மணியொலிக்க,
அன்னம்   ஊட்டவரும்  அன்னை   அருங்கரம்
                  அன்பணை    தவிர்த்தபடி,

பொன்னூசல்   நலுங்காடப்   புன்னகை   சிந்தியும்,
                 புதுமணல்   குழைத்து,
மென்கரம்   சிவக்கவே   மண்வீடு   கட்டியும், 
                 மகிழாடல்   மலைமகளே!

கன்னல்   மொழிபேசும்   கன்னிக்   குழந்தையே!
                தாலோ! தாலேலோ!
கன்னியா   குடிவாழும்   கற்பகமே!  கல்யாணி!
                 தாலோ! தாலேலோ!

                       பொருள்
      காவிரிக் கரையில் மலர்ந்து நறுமணம் கூட்டும் மலர்களைப் பறித்தும்,
பறித்த மலர்களை மன்றத்தில் நடனமாடும் நடராசப் பெருமானின் திருவடியில்
பக்தியோடு சார்த்தியும், அன்னம் போல அழகாக நடந்தும்,ஓடியும்,காலிலும்,
இடுப்பிலும் அணிந்துள்ள அணிகளின் மணிகள் ஒலி எழுப்புமாறு ஓடுகின்ற
பொழுது,அன்போடு அணைத்து,உணவு ஊட்டப் பின் தொடர்ந்து வேகமாய்
நடந்து வரும்,அன்னையின் பிடியிலிருந்து தப்பித்து ஓடியும்,அருகில் உள்ள
ஊஞ்சலில் அமர்ந்து பாடியபடி ஆடியும்,சிரித்தபடி ஓடி,மணலில் அமர்ந்து,
மணலைக் குழைத்து,மென் தளிர்விரல்களும்,கைகளும் சிவக்குமாறு,அழகிய
மணல் வீடு கட்டியும் மகிழ்வோடுவிளையாடும் கல்யாணிஅம்மையே!
      கரும்பு போல் இனிக்கும் மொழி பேசும் கன்னியாகுடிக் குழந்தையே!
 தொட்டிலில் நல்லுறக்கம் கொள்க.தாலேலோ! 
கன்னியாகுடி என்னும் ஊரில் எழுந்தருளி,வரமருளும் கல்யாணி அம்மையே!
தொட்டிலில் நல்லுறக்கம் கொள்க.தாலோ! தாலேலோ.

                          விளக்கம்
அரை .....இடுப்பு
அரை,கழல்.......உம்மைத்தொகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக