திங்கள், 23 ஜனவரி, 2017

செங்கீரைப்பருவம்......10

                          செங்கீரைப்பருவம்.........10

படைத்தலைப் புரிந்திடும் பிரமனை வழிநடத்தும்
                   பரிமளை,  பிராமியே!
படைமழு உடைசிவ விடையதும்துணைவரப்
                   பரம்பொருள் மகேஸ்வரியே!

தடைவரின் தவிர்த்திடும் தழலுரு குமரனின்
        தனிநிழல். கௌமாரி!
விடையிலா விளக்கமாய் விளங்கிடும் விஷ்ணுவின்
          வினைபொழி. வைஷ்ணவி!

கடைக்கடல் அடியினில,கலைநிலம். காக்கவே
             கவினுரு.  வாராகி!
சுடரொளி வச்சிரப் படையவன் இந்திராணி!
              சடையணி சாமுண்டி!

செடிகொடி படர்வனச் செம்பதி கல்யாணி!
                செங்கீரை ஆடியருள்
முடிந திப் பிறையணி முதலவன் முகிழ்நகையே!
                செங்கீரை ஆடியருள்

                        பொருள்

    படைத்தல் தொழில் ஆற்றும் நான்முகனின் உருவோடு தூய்மைப் பணி ஆற்றும் பிராம்மியே!
மழுவேந்திய சிவனும்,அவனது ஊர்தியான காளையும் துணையாக வரப் பரம்பொருளான சிவமாகவே விளங்கும் மகேஸ்வரியே!
         பகை என்னும் தடை எதிர்ப்படின் நெருப்பில் தோன்றி நெருப்பாகவே வேலுடன் விளங்கும் முருகனின் மறு உரு கௌமாரியே! விடை காண முடியாத வியத்தகு செயல்கள் கொண்ட விஷ்ணுவின் வினாகளைக் கொண்ட வைஷ்ணவியே!
   கடலின் அடியில் அரக்கன் மறைத்து வைத்திருந்த நிலமகளை மீட்பதற்காகத் தோன்றிய வாராகியே! வஜ்ரப் படைகொண்ட இந்திரனின் வீரம் பொருந்திய இந்திராணியே!சடைமுடி அணிந்த வெற்றிச் செல்வி சாமுண்டியே!

      மருத நில வளம் மிக்க கன்னியாகுடியின் கல்யாணி அம்மையே! செங்கீரை ஆடி அருள,வாய்.
கங்கையும்,பிறை நிலவும்அணிந்த சிவ பெருமானின் துணைவியே! செங்கீரை ஆடி. அருள்வாய்.

                                 விளக்கம்
   சப்த மாதர்கள். என்னும் ஏழு கன்னியராக கல்யாணி அம்மை போற்றப் படுகிறாள்.



             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக