வியாழன், 5 ஜனவரி, 2017

முப்பத்து முக்கோடி தேவர்கள் .......10

                   முப்பத்து முக்கோடி தேவர்கள் .......10


வான   வெளியில் வடிவான கோள்கள்
வாயொலிவசுக்கள் ,வீணைக் கீதமும்,
வார்சிலை தாங்கியும் ஊர்ந்திடு கந்தர்வர்,
வாகைக் கின்னரர் வளமகள் காக்கவே.

தானமாய்த் தன்னையே தந்திடும் முனிவரர்,
மோனச் சண்டர்,முகிழ்முகக் கிம்புருடர்,
ஞானக் கூத்தர் ஞமலி பைரவர்
தீன பந்துத் தேவர்கள் காக்கவே.

மீனம்  முதலாம் மதிமிகு இராசிகள்,
வானச் சுழல்பணி பன்னிரு ஆதித்தர்,
ஊனுயிர் உலவும் பதினொரு உருத்திரர்,
தூண்திசைக் கஜங்கள்,பாலகர் காக்கவே.

                              வேறு
கானல்வரி கால்வாய்க்கரை கண்டேநினை கன்னிப்பதி
கூனல்பிறை கொண்டோனுறை கோயில்நிறை கல்யாணி
பேணும்தமிழ் பிள்ளைத்தமிழ் பூணும்தலை ஞானத்தவள்
தேனார்மலர் திகழும்பதம் தொழுதேநிதம் காப்பீரருள்

                           பொருள்

வானத்துச் சுற்றும் கோள்கள்,நன்மையே ஒலிக்கும் வாய் கொண்ட வசுக்கள்,கையிலே வீணையுடன்
பாட்டும்,வில் தாங்கிய வீரமும் கொண்ட கந்தருவர்கள் கின்னரர்கள் அம்மையாம் கல்யாணியைக்
காக்கவே.
     தன்னையே தானமாய் வழங்கும் பேருள்ளம் கொண்ட முனிமுதல்வர்கள்,கிம்புருடர்,மௌனத்தை
நிறைவாய்க் கொண்ட சண்டர்கள்,அறிவானந்தத்தில் மூழ்கிய கூத்தர்கள்,நாயை ஊர்தியாய்க்
கொண்ட பைரவர்கள்,எளியோருக்கு உதவும் தேவர்கள் அனைவரும் அம்மை கல்யாணியைக்
காப்பீராக.
      மேஷம் முதல் மீனம் வரையுள்ள இராசிகள்,வானத்தில் சுழன்றபடி உலகைக் கணிக்கும்
பன்னிரண்டு சூரியர்கள்,உலக உயிர்களின் நன்மை தேடும் பதினோரு உருத்திரர்கள் ,எட்டு திசைகளையும் காக்கும் யானைகள்,திகபாலர்கள் ஆகியோர் கல்யாணி அம்மையைக் காத்தருள்
பெறுக.
      (வேறு ...சந்தம் மாறுபடுகிறது)
     கானல்வரி பாடும் அளவு பரந்த கடல்போன்ற கால்வாய்க் கரையைக் காணும் பொழுதெல்லாம்
நினைவில் தோன்றும் ஊராகிய கன்னியாகுடியில் கோயில் கொண்டுள்ள கைலாச நாதரின் துணைவியாம் கல்யாணி அம்மை.போற்றும் பிள்ளைத்தமிழ் நூலை அணியாக அணியும் ஞானத்
தலைவி.அம்மையின் மலரணிந்த திருவடிகளைத் தொழுது,அம்மையைக் காத்திடுங்கள் முப்பத்து
முக்கோடி தேவர்களே.
   
 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக