செவ்வாய், 27 டிசம்பர், 2016

கைலாச நாதர் 2

                       கைலாச நாதர்          2

பிறைசூடிய பெம்மானவன் பைந்நாகப் பசுங்கரத்தான்
              பித்தாவென் றழைத்தோன்
நறைசூடிய நலப்பாடல் கேட்டேமகிழ் செஞ்செவியான்
              நலத்தூது நடைப்பாதன்
கறைக்கண்டன் கண்மூன்று கனலாகும் கருணையான்
              கவின்கோட்டை அழிசிரிப்பன்
மறைமாண்பன் மாலயனால் காணமுடியா அடிமுடியன்
              மலைமகளைக் காத்திடவே

சிறையளித்த செந்தீயான் செழும்பாதச் சீர்போற்றி
           செம்மைப்பொருள் செவிகேட்டோன்
இறையனாய் எழில்தமிழில் இளமைக்கள இயலருளி
         இனியசங்க முதற்புலவன்
குறைகண்ட குணப்புலவன் கொழுஞ்சுடரால் குலைந்துபடக்
         குணம்காத்த குறையில்லான்
அறையாடிய அரசன்மனம் அல்லல்படும் அருங்கால்கள்
         மாற்றியாடிய அம்பலத்தான்.

நறைசூழ்ந்த  நறுமலராய்  நாடிநின்ற நற்றவத்தாள்
          நன்மனத்தை நோகவைத்து,
பறைபோற்றப் பல்லோர்முன் பவித்திரமாய் ஏற்றதோடு
             பாதியுடல் அளித்தவன்,
பொறைகாக்கப் பொலிவுடனே பூவால  மரத்தடியோன்
             பொன்மகளைக் காத்திடவே.

அறைமறை அந்தணர் அருந்தமிழ்ப்பண்ணிசை
                இசைப்பவர் அடியவர்
நிறைதிரு நகர்க்கன்னி நிலமகள் நலத்தமிழ்
              நீலகண்டன் காக்கவே.
அரைஞாண் சதங்கை அணிநனி மழலையாம்
            அம்பிகைக் கல்யாணி
அறைகழல் போற்றிடும் அருந்தமிழ் நூலினை
           அழல்கண் காக்கவே.

                        பொருள்

பிறைநிலவைத்  தலையிலே சூடிக்கொண்டவன்:பாம்பினை அணியாக அணிந்த கரம் கொண்டவன்:
பித்தா! என்றழைத்த  சுந்தரரின் பாடல்களை விரும்பிக் கேட்கும் செவி உடையவன்:அத்தமிழுக்காக
ஆரூர் தெருக்களில் சுந்தரருக்காகத் தூது சென்ற கால்களை உடையவன்:உலகைக் காக்க நஞ்சினை
உண்டதால் கருநீலக் கழுத்துடையவன்:கனல் கக்கும் நெற்றிக்கண்ணிலே கருணை பொழிபவன்:
சிரிப்பாலே முப்புரத்தை அழித்தவன்:ஆகம மறைகளாம் மாண்பு கொண்டவன்:அவனது அடியைத்தேடி த் திருமாலும்,முடியைத் தேடிப் பிரமனும் பலகாலம் அலைந்தும் காண இயலா அண்ணாமலைச் சோதியானாம் கைலாச நாதக் கடவுள் கல்யாணி அம்மையைக் காக்க.

        பிரணவப் பொருள் அறியாபிரம்மனைச் சிறையில் தள்ளிய கந்தசுவாமியை,வாங்கிப் போற்றிச்
சீடனாய்ப் பிரணவப் பொருளறிந்த செவி உடையவன்:அகப்பொருள் இலக்கணத்தை "இறையனார் களவியல்"என்னும் நூல்வழி தந்த தமிழ்ச் சங்க முதற்புலவன்:தருமி'என்னும் புலவனுக்காகப் பாடல்
பாடி,அப்பாட்டில் குறைகண்ட நக்கீரனை,நெற்றிக்கண்ணால் சுட்டெரித்துப் பின் அருள் காட்டிய
குறையற்ற நிறையாளன்:அறையிலே நடனம் கற்றுக் கொண்ட பாண்டிய மன்னன்,ஆடுவதில் உள்ள
 துயரறிந்து,ஆண்டாண்டாய் ஆண்டவன் ஆடும் ஆட்டத்தில் கால்  வலிக்குமே,என எண்ணிக்கால்
மாற்றி ஆடவேண்டுகிறான்,அவனுக்காகக் காலமாறி ஆடிய வெள்ளியம்பலத்தான்:கல்யாணி
அம்மையைக் காக்கட்டும்.

    இமய மலைச்சாரலிலே தன்னை அடைய வேண்டிக் கடுந்தவம் ஆற்றும் பார்வதி தேவியின் மனம்
துன்புறுமாறு,அந்தண வேடத்தில் சென்று,சிவனைப் பழித்தவன் ,உலகோர் மகிழுமாறு மலைமகளை
மணந்தவன் :தனது உடலில் சரிபாதியை அம்மைக்கு வழங்கியவன்:பொறுமையின் சான்றாய்,
ஆலமரத்தடி அமர்ந்த தெக்ஷிணா மூர்த்தி பூவுலகின் பொன்மகளாம் கல்யாணி அம்மையைக் காக்கட்டும்.

     நான்மறை ஓதும்,அந்தணர்களும்,தமிழ் மறையாம் தேவார,திருவாசகம் இசைக்கும் அடியவர்களும்
நிறைந்து வாழும் கன்னியாகுடி என்னும் ஊரில் எழுந்தருள் புரியும் கல்யாணி அம்மை மீது பாடப்
படும் பிள்ளைத் தமிழ் நூலை,வாழ்த்தி,அம்மையையும் காப்பீராக  நீலகண்டரே.
     இடுப்பணியும்,சதங்கையும் அணிந்து விளையாடும் கல்யாணி அம்மையாம் குழந்தை மீது பாடப்
படும் நூலை வாழ்த்தி,அம்மையையும் கைலாச நாதக் கடவுளே!காப்பீராக.

     
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக