வியாழன், 29 டிசம்பர், 2016

முருகன் ....4

                                                   முருகன் ....4

மதிமுக மலர்விழி மனமெலாம் காக்க:
மனையிரு துணையருள் நினையுளம் காக்க:
மகிழ்புனை அணிவேல் அகிலமும் காக்க:
மகபதி மணிமுடி மறுபடி அளித்தவா!

விதிசிறை மறைகுறை:பதிசிவம் மறையறி:
விளைசினம் தனிமலை:விரிவயல் அலைகடல்:
வினைமுதல் சுரமகள்:தினைப்புனம் குறமகள்:
விளங்கிடும் உளங்களின் வியத்தகு வேலவா!

கதியெனக் கிடந்தனர்:பதியெனப் பகர்ந்தனர்:
கவலைகள் மறந்தனர்:கலைகளைக் குவித்தனர்:
கழலினை வணங்கினர்:கணக்கிலோர் கதறினர்:
கலியுகக் கருணையாம் கடவுளே! கந்தா!

உதித்தனள் உலகெலாம் உணர்ந்தநல்  கல்யாணி
துதித்திடத்  தமிழ்மழலை துவங்கியே புகழ்ந்திடும்.
பதியவர் கயிலையார் பதம்பணி மதலையைத்
துதித்தும் போற்றியும் புரந்திடுவாய்!  தூயவனே!

                                பொருள்

முருகனே!உன் நிலவுபோன்ற முகமும்,மலர்போன்ற விழிகளும் நன்மனம் கொண்ட உலகோரைக்
காக்கிறது.உனது இரு மனைவியர்களுடன் இணைந்து காட்சி தரும் உனது அருள் உலகத்தோர் நினைவில் நிலைத்து நிற்கிறது.உலக மகிழ்விற்காக அணிந்திருக்கும் உனது வேலாயுதம் மூவேழ்
உலகையும் காக்கிறது.அரக்கர்களால் பறிக்கப் பட்ட மாமுடியை இந்திரனுக்கு மீண்டும் சூட்டிய முருகா!
      மறையறியா நான்முகனை சிறையில் அடைத்தாய் :அம்மறையை அறியத் தந்தைக்கே ஆசானாய்
ஆனாய்.விளையாட்டில் தோன்றிய சினம் பழனியில் தனியாகத் தங்கும் நிலை தந்தது.உனது
விளைநிலமே செந்தூர்க்கடல் தானே.போரின் வெற்றிப்பரிசு இந்திரன் மகள் தெய்வயானை.
தினைப்புனம் தந்ததோ குறமகள் வள்ளி.பல்வேறு உள்ளங்களில் பலவுருக்  கொண்டு விளங்குகிறாய் முருகா!
      கலியுகக் கடவுளாய்க் காட்சி தரும் கந்தனே!நீயே கதி என உன் காலடியில் கிடப்போர் ஒருசிலர்.
நீயே கடவுள் எனப் போற்றுவோர் பலர்.உன்னைக் கண்டு போற்றிக் கவலை,துன்பம் எல்லாம்
மறப்பவர்  பற்பலர்.உன்முன் ஆட்டம்,பாட்டு,நடனம்,போன்ற கலைகளை வெளிப்படுத்தி அதன்
வாயிலாக உன்னைப் புகழ்வர் பலர்.உன் காலடிகளைக் கட்டிக் கொண்டு,கதறி அழுகின்ற மக்களும்
உண்டு.மக்கள் மனத்து நிற்கின்ற முருகா!
      உலகெல்லாம் உணர்ந்தவள் கன்னியாகுடி என்னும் ஊரில் கல்யாணி என்ற பெயரோடு காட்சி
தருகிறாள்.அம்மை மீது கல்யாணி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் அம்மையைப் போற்றத் துவங்கி
உள்ளது.தனது தலைவராம் கைலாச நாதரின் சேவடியைத் தொழும் குழந்தையாய் விளங்குகிறாள் அம்மை.அந்த அம்மையைத் தொழுதும்,போற்றியும்,காத்து அருள்வாய்  முருகா!

                                                      விளக்கம்
மதிமுகம் .....உவமைத்தொகை





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக