முருகனின் பவனி
கையிலே வேலெடுத்துக் கண்ணில் கருணைகாட்டிப் ------பொய்யிலே
மையலுற்ற தீயரக்கர் மாண்பினைத் தானழித்து
வையகம் வாழவைத்த விண்ணவர் முன்னவன்: ------மையலுற்ற
தையலின் தண்நெஞ்சம் தானறியாத் திண்மனத்தான்
சேவலது கட்டியச் செங்குரல் முன்னேகப் ----பாவையவள்
ஆவலதை ஆன்மாவின் கூவலதைக் கேளாது,
நாடெல்லாம் ஊரெல்லாம் நல்லோர் மனமெல்லாம் ---காடெல்லாம்
வீடெல்லாம் பீடுநடைமஞ்ஞை மேல் வந்தான்:
பொருள்
கையில் வேலும்,கண்ணில் கருணையும் கொண்ட வேலவன்,பொய்மை வாழ்க்கை வாழ்ந்த,
வரபலம் மிக்க,தீமை அரக்கர்களை அழித்து,மூவுலகும் வாழவைத்த,தேவர்களின் படைத்தலைவன்
அவன்மீது மையலுற்று,அவனையே சுற்றிச்சுற்றி வரும் அபலைப் பெண்ணின் காதல் மனம் அறியாத
கல்மனம் கொண்டவன் ,சேவல் கட்டியக்காரனைப்போல் குரலெழுப்பி முன் செல்ல,மையலுற்ற
பெண்ணின் ஆவலை,ஆன்மாவின் அழைப்பைப் புறக்கணித்துவிட்டு,நாடு,நகர்,காடு,கழனி
நல்லோரின் மனம் நாடி,மயில் மீது பவனி வந்தான்.
விளக்கம்
உலகையே அறிந்து பவனி வருபவன் இப்பெண்ணின் மனமறிந்து வரவில்லையே"என ஏங்குகிறாள்.
கட்டியம் = அரசர் வருகிறார் என முன்கூறி வழி விடச்செய்யும் மரபு
பேரொலிப் பவனி
கலைமகள் பாடல் ,அலைமகள் ஆடல் -----கலைஞர்
பலர்நடு நாரதர் பண்ணொலி,பாரதிர,
பால்பழக் காவடிகள்,வேலலகு குத்தியோர் ----சீலமுடன்
தாளகதி மாறாது தன்மறந்த ஆட்டங்கள்,
வேல்,வேல் வேல் என்றே வெறியுற்றோர் ஆடுகின்ற---வேலாட்டம்,
காலில் சலங்கையுடன் கம்பெடுத்து ஆடுமாட்டம்
பொய்க்கால் குதிரை,புனைமயில் ஆட்டங்கள்-----ஒய்யென
மெய்யெல்லாம் நீர்வியர்வை மெய்சிலிர்க்கும் சாமியாட்டம்,
தேவாரத் தீந்தமிழ்ப் பண்ணோடு நான்மறையும் -----நாவாலே
காவாய்க் கனிமுருகா என்றோதும் சான்றோரின்
உள்ளம் உருக்கும் உயரிசைப் போற்றொலியும் ----வள்ளலே!
முட்பிறவி போக்கியே முள்ளிமலர்ப் பாதநிழல்
சேர்த்தருள் சேந்தனே!செம்முனிவர் வேண்டொலியும் -----ஆர்த்தெழும்
தேராழிக் காலொலியும் ,தேர்க்குதிரை மூக்கொலியும்,
கார்மேகக் களிற்றின் பிளிறொலியும்,கார்மாலைப் -----பேரெருதுக்
கூட்ட மணியொலியும்,கூடிநிற்போர் கண்டகாட்சி
வாட்டத்தைப் போக்கியதால் வாய்போற்றும் வாழ்த்தொலியும் -----கேட்டுநான்
பொருள்
முருகன் பவனி செல்கையில் முன் தோன்றி ஒலித்த பல்வேறு ஒலிகள்:கலைவாணி எழுப்பிய
வீணையொலி,அலைமகள் குழுவுடன் ஆடிய பரதநாட்டிய ஜதியொலி,விண்ணகக் கலைஞர்கள் சூழ்ந்த
நாரதர் எழுப்பும் வீணையொலி,பாற்காவடி,பழக்காவடி எடுப்போர் ஆடும் ஆட்ட ஒலி,மேனியெல்லாம்
வேலலகு குத்தி,ஆடுவோர் தன்னிலை மறந்தும்,தாளம் தவறாது ஆடும் ஆட்ட ஒலி,வேல்"வேல்" என
முழங்கி ஆடுவோர் எழுப்பும் ஒலி,காலில் சலங்கை கட்டிக்கொண்டு சிலம்பாட்டம் ஆடுவோரின்
கம்புகள் உராய்ந்து எழுப்பும் ஒலி,பொய்க்கால் புனைந்து குதிரைபோல் ஆடும் ஆட்ட ஒலி,மயில்போல்
வேடமணிந்து ஆடுவோர் சுழன்று ஆடும் ஆட்ட ஒலி,பக்தி மேம்பாட்டால் சாமி வந்து மெய் மறந்து
ஆடும் ஆட்ட ஒலி,தேவாரப் பண்ணொலி,நான்மறை ஓதும் ஒலி,முருகா முருகா காப்பாற்று என
மனமுருக வேண்டும் சான்றோரின் பக்தியொலி,பிறவியைப் போக்கிப் பாதநிழல் தாரும் என வேண்டும் முனிவர்களின் ஜப ஒலி,தேர்ச்சக்கர ஒலி,தேர்க்குதிரைகளின் கனைப்பு ஒலி,யானைகளின்
பிளிறல் ஒலி,மாலை நேரம் வீடு திரும்பும் மாட்டுக் கழுத்துக்களில் கட்டப்பட்ட மணிகள் எழுப்பும் ஒலி,
நாடு,நகர், சாலை,வழியெல்லாம் கூடி நிற்போர் பக்தியுடன் "முருகா"முருகா" என எழுப்பும் போற்றுதல் ஒலி ஆகிய வற்றைக் கேட்டுக் கொண்டே உடன் வந்த தலைவி மெய் சிலிர்த்துக் கூறுகிறாள்.
பவனி காணாது தலைவி வருந்தல்
மெய்சிலிர்த்தேன் மேன்மை பொருந்திய மூர்த்தியைக்
கையெடுத்துக் கும்பிடக் கைதூக்கிக் கண்பார்த்தேன் ------மையிருள்
நீக்கவந்த மாமணியை மாணிக்க நித்திலத்தை
ஆக்கவழி தேடலுற்றான் முன்தோன்று செல்வம்போல் ------காக்கும்
கடவுளாம் கந்தவேள் காட்சிதரக் கண்டு,
மடம்நாணம் அச்சம் பயிர்ப்பும் மறைய -----உடலெல்லாம்
காதல் உயிரெல்லாம் காதல் உணர்வெல்லாம்
காதலென்னும் நோய்பரவக் கந்தனைக் கண்பார்த்தேன் ----காதலுடன்
மாதவனோ மல்லிகை முல்லை மணந்திருக்க
நாதவென நானழைத்தும்,நல்வரவு நானுரைத்தும்------போதவிழ்
பூவிரும்பா வண்டுபோல் புன்னகைக்க மாட்டானாய்
ஆவிதனைக் கைக்கொண் டடுத்தவூர் செல்லலுற்றான் ----கூவி
அழைத்தேன்:அழுதேன்:அலறிப் புரண்டேன்
மழைக்கண்ணான் முத்துத்தேர் சென்றது புன்கூர் ----விழைந்தேன்.
பொருள்
உடலும் உள்ளமும் சிலிர்க்க வைக்கும் பவனியைக் கண்ட நான்(தலைவி)மேன்மை பொருந்திய
முருகனை வணங்கிடக் கை கூப்பியபடிப் பார்த்தேன்:உலகத் துயரைப் போக்க வந்த மாமணியை,
மாணிக்கக் கொழுந்தை,மரகத முத்தை,செல்வ வளம் தேடிச் செல்லும் வறியவன் முன் தோன்றிய
செல்வம்போல உலகைக் காக்கும் கடவுளாம் கந்தக்கடவுள் தேரிலே நிற்கும் பேரழகைக் கண்டேன்:
கண்டதும் காதல் பற்றிக் கொண்டது.பெண்ணிற்கே உரிய அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு என்னும்
நால்வகைக் குணங்கள் மறைய,உடலிலே,உள்ளத்திலே,உணர்விலே பற்றிக் கொண்டது காதல்.
காதல் நோக்குடன் மீண்டும் கந்தன் திருமுகம் நோக்கினேன்.வள்ளியம்மையும்,
தெய்வயானையம்மையும் இரு பக்கத்திலும் நின்றிருக்க,நாதா!என்றழைத்தேன்:நலமே வருக!என
நல்வரவு கூறினேன்:மாமுருகனோ,மலரை விரும்பாத வண்டு போல என்னைப் பார்க்கவில்லை:
புன்னகிக்கவில்லை:தேர் நகர்ந்தது:என் ஆவியைப் பறித்துக் கொண்டவன் தேர் அடுத்த ஊர் நோக்கிச் செல்லத் தொடங்கியது."வேலவா" "முருகா" என் தலைவா" எனக் கூவி அழைத்தேன்:அழுதேன்:
அலறியபடித் தெருவில் விழுந்து புரண்டேன்:கருணைக் கண்களைக் கொண்ட கந்தனது தேர்
"திருப்புன்கூர்"என்னும் ஊரை நோக்கிச் சென்றது.நானும் அவ்வூர் நோக்கி விழைந்தேன்.
விளக்கம்
ஆக்கவழி தேடலுற்றான் முன் தோன்று செல்வம் போல .........இவ்வரிகளில் உவமையணி பயில்கிறது.
ஆக்கவழி தேடலுற்றான் .......தலைவி
முன்தோன்று செல்வம் ..........முருகன்
போல .............................................உவம உருபு
2.போதவிழ் பூவிரும்பா வண்டு போல் .....இதுவும் உவமையணியாகும்.
போதவிழ்பூ ...........தலைவி
வண்டு ...........முருகன்
போல் ............உவம உருபு
விரும்பாமை ...இரண்டிற்கும் பொது.
திருப்புன்கூர்
நடனச் சிவனை நயந்துநாளை காண்பேன்
கடமை உழுதொழில் ஆற்றியபின் காண்பேன்-----தடக்கோயில்
நந்தி மறைக்கிறதே நன்முகம் நாதனே!
வந்திக்கு மண்சுமந்த சுந்தர!வந்தித்தேன் -----நொந்தமனம்
கண்குளிரக் கண்டிடவே காளைக்கு ஆணையிட்ட
மண்புகழ் மாப்பதி மாமுருகன் தான்செல்ல -----மன்மயிலே!
மாணாக்கர் மாமுனி செல்வழி செல்லல்போல்
வீணவா வெங்காதல் வெந்தழி உள்ளமுடன் -----பூண்பழிப்
பேதையாளும் புன்கூரில் பெற்றிடலாம் புன்னகை
பேதைமனச் சிந்தனை பின்தொடர்ந்தேன் பெற்றதோ ----வேதனைதான்:
பொருள்
தில்லைச் சிற்றம்பல நடராசப் பெருமானைக் காண "நாளை போவேன்"நாளை போவேன்"
என்று கூறியபடி உழுதொழில் கடமை ஆற்றிவந்த "திருநாளைப்போவார்"என்னும் சிவனடியார்
திருப்புன்கூர் ,சிவலோகநாதனாம் சிவபெருமானை நாளும் வணங்குவார்:அவர் கோயிலுக்குள்
செல்லக் கூடாது தாழ்ந்த குலத்தவர் என்பதால்.கோபுர வாயிலில் நின்றபடியே இறைவா!உன்னை
என்மனம் காண்கிறது:கண் குளிரப் பார்க்க இயலாமல் நந்தி படுத்துத் தடுக்கிறாரே, எனக்கு தங்கள்
திருமேனி காணவேண்டும்"என வேண்ட,இறைவனும் "சற்றே நகர்ந்திரும் பிள்ளாய்" என நந்திக்குக்
கட்டளையிட,நந்தியும் விலகிச் சன்னதி மறைக்காமல் கிடந்தார்.அடியவரும் இறைவனை நன்கு
தரிசித்தார்.அப்படிப்பட்ட ஊர் நோக்கி முருகன் தேர் செல்ல,ஆசான் வழி தொடரும் சீடன்போல
வீணாசை வெங்காதலால் வெந்து துன்புற்ற பேதையாகிய நானும் அவ்வூரில் ஆறுமுகன் அருள்
புன்னகையைப் பெற்று மகிழலாம்,எனப் பின் தொடர்ந்தேன்.பெற்றது என்னவோ வேதனை தான்.
விளக்கம்
மாணாக்கர் மாமுனி செல்வழி செல்லல் போல் ........இவ்வரிகளில் உவமையணி பயில்கிறது.
மாணாக்கர் ...........தலைவி
மாமுனி ...........முருகன்
போல் ......உவம உருபு
செல்வழி செல்லல் ......பொது
வைத்தீஸ்வரன் கோயில்
ஆதனூர் தாண்டி அருவேளூர் சென்றது
நாதனவன் நற்றேர்:நலமருள் செவ்வாயின் ------சோதனைகள்
மாற்றி மனம்நிறை வாழ்வு வழங்கிடும்
ஆற்றலான் ஆறுமுகன் ஆனந்தத் திருநகர் ----காற்றாய்
விரையும் கழுகு ஜடாயு வினைதீர்
நறைமலர் நல்லூர்:நரைதிரை நாடாக் ----கறைக்கண்டன்
வைத்திய நாதனாய்த் தையல் தலைவியுடன்
வைத்தியம் பார்க்கும் வளமார் திருநகர் -------பைத்தியம்
கொண்டேன்,குமரனே உன்மேல்.தமரெனக்
கொண்டே குமிழ்முகப் புன்னகை காட்டிடு;---உண்டேன்
திருநீறு:ஓம்முருகா என்பதற்குள் தேர்தான்
பொருள்
தலைவனது தேர் நந்தனார் தோன்றிய "ஆதனூரைத்"தாண்டி,வேளூர் என்னும் வைத்தீஸ்வரன் கோயில் நோக்கிச் சென்றது:நானும் ஓடினேன்."பூமி காரகனாம் அங்காரகன்" சிலபோது உலக
மக்களுக்குத் துயர் அளிக்கக் கூடியவன்.அந்த செவ்வாய் தோஷத்தைப் போக்கும் செல்வமுத்துக்
குமாரசாமியாய் முருகன் வீற்றிருக்கும் ஊர் அது.காற்றாய்ப் பறக்கும் "ஜடாயு"என்னும் கழுகு
இராமாவதாரத்தில் தனக்காக இராவணனோடு போரிட்டு,இறக்கைகள் இழந்து கீழே விழுந்து
உயிர்விடும் தருணம் இராமனே அதற்கு ஈமச்சடங்குகள் செய்த ஊர் இது,அதனால்தான்
இவ்வூருக்குப் "புள்ளிருக்கு வேளூர் "எனப் பெயர் வழங்கலாயிற்று.பிறவாப் பெரியோனாம்
சிவபெருமான்,வைத்திய நாதனாகவும்,அன்னை பார்வதி "தையல்நாயகி" யாகவும் தோன்றி
உலக மக்களின் நோயில்லா நிலைக்கு வைத்தியம் பார்க்கும் ஊர்.அதனால் இவ்வூர் வைத்த்தீஸ்வரன்கோயில் ஆயிற்று.அவ்வூர் வந்த நான் (தலைவி)முருகா!உன்மீது பித்துப்
பிடித்து அலையும் பேதையைப் பார்.என்னைச்சார்ந்தவள் இவள்"என உலகோருக்கு
அறிவிக்கும் முகமாக,உன் அழகு முக வசீகரப் புன்னகையை என்மீது சிந்து.இதோ உன் காலடித்
திருநீறு உண்டேன்"ஓம் முருகா!எனப் போற்றுவதற்குள் தேர் கண்ணிலிருந்து மறைந்துவிட்டது.
விளக்கம்
நரை திரை .......உம்மைத்தொகை
சீர்காழி
திருஞான சம்பந்தச் சீர்காழி செல்ல ----உருவே!
வருவேன்;உளதே!இலதே!வருவேன்:
தருவாய்!கருணை;தளிரிதழ் முத்தம்---அருள்வாய்
மனத்தே புலம்பி மதியாய்த் தொடர்ந்தேன்:
வனத்தே வளர்ந்து வளவன் சுமக்கும் ----குணமயிலே!
சட்ட நாதனாய்ச் சர்வேசன் வீற்றிருக்கும்
கட்டுமலைக் கோயில் கவுணியச் சம்பந்தன் ----நட்டபாடைப்
பண்ணாலும்,பாட்டாலும் போற்றிடப் பாலமுதம்
கண்கலங்கும் காலைக் குளத்தருகே ஊட்டிய -----உண்ணா
முலையம்மை முன்னொருகால் கந்தனுக்கு ஊட்டி
அலைகடல் நல்லுலகு காத்ததுபோல் இன்றும் ----கலைமொழிப்பண்
காத்திட்ட தாயின் கவினருள் சீர்காழி
சேர்ந்திட்ட தேரும் சிலநொடி நின்றபின் ------பூத்திட்ட
பொருள்
மாமுருகனது தேர் திருஞானசம்பந்தர் தோன்றிய "சீர்காழி" என்னும் திருநகரை நோக்கிச் சென்றது.
நானும் (தலைவியும்)என் உருவமே!உன்னோடு வருவேன்:உள்ளதாயும் இல்லதாயும் விளங்குபவனே!
உன் பின்னே ஒடி வருவேன்:கருணைக் கடவுளே! குளிர்ந்த இதழிலிருந்து முத்தம் அருள்வாய்!என
மனத்திற்குள் புலம்பியபடி,அருள்பெறும் அறிவோடு பின் தொடர்ந்தேன்.
காட்டிலே வளர்ந்தாலும் வள்ளல் முருகனின் ஊர்தியாய் விளங்கும் மயிலே!
சட்டை அணிந்த கடவுளாய்,"சட்டநாதர்"என்ற திருப்பெயருடன் விளங்கும் ஊர்:ஊழிக்காலத்தே
உலகெலாம் அழிந்தபின் தோணியில் அமர்ந்த திருக்கோலத்துடன் "தோணியப்பர்"என்ற பெயருடன்
இறைவன் மலைக்கோயிலில் கோயில் கொண்ட ஊர் அது.
கவுணியர் குலத்திலே தோன்றித் தந்தையுடன் குளக்கரை வந்த குழந்தை,குளிக்கும் தந்தை நீரில்
மூழ்கியிருக்கத் தந்தையைக் காணாது அழுதபொழுது, அன்று சரவணப் பொய்கையில் உதித்த
சண்முகருக்கு இறைவன் அருளுடன் முலைப்பால் தந்த இறைவி,இன்றும் இறைவன் அருளுடன்
ஞானப்பால் ஊட்டினாள்.ஆளுடைய பிள்ளை'என்னும் குழந்தை,"தோடுடைய செவி....."எனது தொடங்கி
நட்ட பாடை முதல் பலப்பல பண்களைப் பாடிய திருஞான சம்பந்தர் தோன்றிய ஊர் சீர்காழி.தேரும்
சேர்ந்தது:நானும் ஓடினேன்.நொடிப்பொழுதிற்குள் தேர் கண்ணிலிருந்து மறைந்தது.
விளக்கம்
உவமையணி : கந்தனுக்கு ஊட்டி அலைகடல் நல்லுலகு காத்ததுபோல்
கலைமொழிப்பண் காத்திட்ட தாயின் கவின்
\உவமானம் .......கந்தனுக்கு ஊட்டி அலைகடல் நல்லுலகு காத்தது
உவமேயம் .......சம்பந்தருக்கு ஊட்டி கலைமொழிப்பண் காத்தது
போல் .................உவம உருபு
தளிரிதழ்.........உவமைத்தொகை
தலை ஞாயிறு
புன்னைமலர்ப் புத்தாறு செம்பவழ நல்லாற்று
வண்ணவழி மேல்தொட்டுத் தண்தலை ஞாயிறு ----என்னும்
கருப்பறிய லூரை விருப்புடன் செல்லத்
திருவினைத் தேடும் தரித்திரன் போல ------முருகனைத்
தேடி முருகன் திருமுகம் தேடிநானும்
ஆடி அசையும் அருந்தேர் அருகினில் ----வாடி
வதங்கினேன் வளமாலை வாசம் சுவைத்த
மதங்கி எனவாகி மண்ணோடு விண்ணில் ---பதமடை
பெண்ணாகப் பேறடையப் பின்தொடர்ந்தேன் பண்ணவனை:
மன்னவனோ என்னைநோக்கா மின்னலெனக் கண்மறைந்தான் ----நன்மயிலே !
பொருள்
மாமுருகன் தேர் புன்னைமலர் பூத்துக் குலுங்கும் பழவாற்றின் கரை வழியே "தலைஞாயிறு"
என்னும் "திருக்கருப்பறியலூருக்குள்"விருப்புடன் நுழைந்தது.செல்வம் தேடி அலையும் தரித்திரன் போல் நானும் முருகனைத் தேடி,அவனது அழகுமுகக் கருணை வேண்டி,ஆடி அசைந்து செல்லும்,
தேரருகே வாடி வதங்கி நின்றேன்.முருகனின் மார்பணி மாலையின் நறுமணம் சுவைத்த பெண்ணிவள்" என மண்ணகத்தார் போற்றவும்,விண்ணிலே முருகனது சேவடிப்பதம் பெற்ற பெண்
என்னும் பேறு பெற்றிடும் நோக்குடன் பண்கள் போற்றும் பாலகனின் தேரைப் பின் தொடர்ந்தேன்.
மன்னவனாம் முருகனோ என்னை நோக்காது,மின்னலென மறைந்து போனான்.
விளக்கம்
உவமையணி ........திருவினைத் தேடும் தரித்திரன் போல
இங்கு திரு .......முருகனையும், தரித்திரன் ...........தலைவியையும்
,குறிக்கிறது.
தேடுதல் பொது.
போல ....உவம உருபு
முருகனைத் தேடி அலையும் தலைவி
செந்நெல் வயல்வரப்பு செந்நாரை மூக்குநீட்டச்
செந்தா மரைமலருள் செவ்வண்டு தேன்மாந்து --------செங்கோட்டுப்
பண்ணிசைக்க,மண்ணார்ந்த பொற்காலில் நின்றுதவக்
கண்ணால் கருங்கொக்கு துள்ளிடும் மீன்கவ்வ ------அண்ணாந்து
வானளாவி வண்பருந்து வட்டமிட்டுத் தன்னிரையை
ஞானத்தான் கூரறிவுப் பேரலகால் கொத்தியுண்ணும்,-------தானத்
தலைவாழை தன்குலை கண்டரண்டு மேதி
அலைதெறிக்க ஓடிக் கலையல்லி மிதிக்க-----இலைமீது
பற்றில்லா நற்றவளை பாயப் பவளக்கால்
புற்றுநண்டுகுற்றுயிர் அற்றதுவோ எற்றெண்ணிப்------புற்றடைய
ஆற்றுநீர் வேகத்தில் தூக்கிவரும் நன்மலர்கள்
ஆற்றின் அணைவாய் ஒதுங்கி அழகழகாய்த் ------தோற்றமுற்று
ஆடிவரும் ஆரணங்காய் ஆலய நல்வாயில்
நாடியிடும் நற்கோலக் கோடுகளாய்க் காட்சிதரும் ----தேடிவரும்
ஊர்மக்கள் உள்ளம் உடலும் குளிரவே
நீர்நிலை போற்றிக் குளித்தும்,குடித்தபின் ------ஏர்சால்
உழவின் உயிராம் சிறுசிறு வாய்க்கால்
வழியே நெல்வயல் பாய்ச்சி வளர்த்தே ---உழவுப்
பயனாய் விளங்கும் பழவாறு வாழ்த்தும்
வயலூர் வளர்நாடன் வண்டார் குழலன் ----நயமுகம்
தேடி அலைந்தேன் திருமுகம் கண்டிட
ஒடி உலைந்தேன் ஒருமுகப் புன்னகை -----ஈடிணை
இல்லாக் கருணை பொழியும் இனியசொல்
வல்லவன் வாய்மொழி முல்லைச் சிரிப்பினை ----உள்ளியே
சோழ வளநாட்டின் சுந்தரக் காடெல்லாம்
வாழ்வுவேண்டி வண்ண முருகன் வரம்வேண்டி ----நாழிகை,
திங்கள் பெரும்பொழுது ஆண்டும் கழிந்தது:
மங்களம் கிட்டவில்லை:மாலை கிடைக்கவில்லை:----தங்கச்
பொருள்
செம்மையான நெற்பயிர் விளையும் வயல்களின் வரப்புகளில் அமர்ந்திருக்கும் நாரை,தனது
நீள் கழுத்தை நீட்டும்:வயலிலே மலர்ந்துள்ள செந்தாமரை மலர்களில் வண்டுகள் தேனை மாந்தும்:
உழவர்கள் செங்கோட்டுப் பண்ணைப் பாடிக்கொண்டே உழுதொழில் ஆற்றுவர்:தவமுனிவர்போல்
பொன்னிற ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கு துள்ளிடும் மீன்களைக் குத்தியுண்ணும்:வானத்தில்
வட்டமிடும் பருந்துகள் தனது இரையைக் கூரறிவு மிக்க கண்களால் கண்டு,தவறாது கவ்வும்:
வாழைமரம் குலை விட ,அதைப் பார்த்து மிரண்டு,அஞ்சி ஓடும் எருமை,வயல்,வாய்க்கால் நீரைச் சிதறவைக்கும்:போகும் வழியில் மலர்ந்திருந்த அல்லி மலரையும் மிதித்துச் சீரழிக்கும்:அவ்வொலி கேட்டு,அல்லி இலையில் மீது அமர்ந்திருந்த தவளை பொசுக்கெனத் தாவும்:அந்நேரம் வளையின்
வாயிலில் எட்டிப் பார்த்த நண்டு,தன் உயிர் போய்விட்டதோ,எனும்படி வளைக்குள் செல்லும்:
அருகே ஓடும் ஆற்று வெள்ளம் செடி,கொடி மலர்களை எல்லாம் இழுத்து வரும்.மதகணையில்
நீர் உட்புகுந்தோட ,செடிகொடிமலர்கள் ஓரத்தே ஒதுங்கிச்சுழலும்:ஆடிவரும் ஆரணங்கு போலவும்,
கோயில் வாயிலிலே இட்ட கோலத்தின் கோடுகள் போலவும் அவை காட்சி தரும்:
ஆற்றைத் தேடிவரும் ஊர் மக்கள் ஆற்றிலே இறங்கிக் குளிப்பர்:குடிப்பர்:சிறு சிறு வாய்க்கால் வழியே வயல்களுக்கு நீர் பாய்ச்சுவர்:ஆற்றை மனமார்ந்து வாழ்த்துவர்:
இப்படிப்பட்ட மருத நிலச் சோழநாட்டு ஊர்களில் எல்லாம்,வயலூர் முருகனை,வண்டுகள் மொய்க்கும் குழல் உடைய நன்முகத்தைத் தேடித்தேடி அலைந்தேன்:அவனது தரிசனத்துக்காக
ஒடி ஒடி வாடினேன்.ஒரு சிரிப்பு""ஏற்றேன் உன்னை"என்னும் இனிய சொல்,அருளிடும்
வாய்மொழி வேண்டியே அந்நாட்டின் காடு,மேடெல்லாம் சுற்றினேன்.வாழ்விற்காக,முருகனது
வரத்திற்காக,நாழிகை,மாதம்,பருவம்,ஆண்டும் அலைந்தேன்.வருடம் கழிந்தது;வரம் கிட்டவில்லை:
மாலை கிடைக்கவில்லை.
விளக்கம்
மருத நிலம் வருணிக்கப் படுகிறது.
மயிலிடம் வேண்டுகோள்
சிறகுற்ற சீர்மயிலே!சிந்தை முழுதும்
குறவள்ளி காந்தனையே கொண்ட மயிலே!-----அறவாழி
அந்தணன் தாளடையப் பந்தமென வந்தித்துச்
சொந்தமெனச் சந்ததம் பந்தத் துயரினை -----உந்தனிடம்
சொன்னால் சுகம்கிடைக்கும் பொன்னவன் பூமாலை
நண்ணிட நாடினேன் நின்னையே:நற்றோகைக் -----கண்மயிலே!
பித்தாகிப் பேதலிக்கும் பக்தையின் பற்றறிந்து
சித்தாகிச் சீர்தவத்தின் வித்தான பற்றறிந்து ------கத்துகடல்
நீரலை நீளொலி ஆரவாரப் பாழ்மனத்தின்
வேரான வெங்காமச் சாயலில்லா மென்காதல் ----சீரறிந்து
நாராகி நான்படும் வேதனை தானறிந்து
ஆராயும் ஆய்வில் அடங்காத உள்ளத்தின் -----சேறாகி
அங்கெழும்பும் ஆசைச் செடியின் வளர்வுகண்டு
மங்கைமன மென்மையும் மேன்மையும் மாசிலாத் ----தங்கமென
எண்ணிடும் எண்ணத்தை ஏற்றறிந்து,என்சொல்லைக்
கண்ணும் கருத்தும் அறிந்து,நீ கந்தனிடம் -----பெண்மனம்
பேசி மகிழவைப்பாய் பேய்மனப் பைத்தியம்,உன்
ஆசியால் நீங்கிடும் ஆனபல எண்ணியே ----காசில்
கருமயிலே!கந்தனது வாகனமே!காணும்
திருவுருவே!தில்லைப் பெருமான் தடமே!------இருள்கண்டு
மின்னல் ஒளிகண்டு மின்னிடும் தோகைவிரி
உன்னதமே!உன்னாலே என்காதல் கைகூடும் ----பொன்னனவன்
தார்மாலைப்பேரருளைத் திண்ணியமாய்ப் பெற்றிடுவேன்
ஊர்ப்பழியை மாற்றிடுவேன் உள்ளம் நிறைந்தவன் ------சீர்ப்பாத
தீக்கையருள் தீண்டிடுமே தீயவளை, என்றெண்ணித்
தேக்கிநின்ற என்னெண்ணம் தூக்கிசெல்லத் தூயமயில் ---ஊக்கத்தை
நாடிநாடி ஓடிஓடித் தேடிதேடிப் பாடிபாடிக்
கூடிகூடி வந்துபோற்றிக் கூடலான் கூடிடவே ------ஆடிஆடி
ஆறுமுகன் அங்கன்னி ஆண்டவன் ஆறுதலைக்
கூறுநிலை கேட்டுவரக் கூரலகு மாமயிலே!-----நாறுமலர்
மாலைவேளை மண்மலை முள்மேடு பின்தொடர்ந்து
சோலையிலே சோர்வில்லா உன்னை அடைந்தேனே ;---பாலையிலே
தண்ணாறு வண்ணவயல் வாழவைக்கும் தன்மைபோல்
கண்மறைக்கும் காரிருளில் கைவிளக்குத் தீயொளிபோல் -----பெண்துயரைப்
போக்கவந்த பொன்மயிலே!போற்றுகின்றேன்:மற்றையோர்
ஆக்கவியலாத் தூதுபணி ஆற்றிடுவாய் ஆக்கமுடன் ----ஏக்கமதைப்
பார்த்துதவும் பல்லோர் பணிந்து பகன்றேன்
ஆர்த்தமனம் ஆடுமயில் ஆன்றபணி ஆற்றிடும் ----கூர்த்தமதி
கொண்டபல கோதில்லாச் சொல்தூக்கும் நல்லவுள்ளம்
தொண்டாற்ற வந்திடினும் தூயவன் மாமுருகன் ----கண்டுபோற்றித்
தூதுரைக்கும் சூதுசெயல் தாமறியா,ஆயினும்
மாதுமனக் கோளாறு மற்றபல நாடினேனே --------தூதுபுகழ்
பொருள்
தங்கநிறச் சிறகுடைய மயிலே!வள்ளி மணாளனை எப்பொழுதும் போற்றும் மயிலே!
அறக்கடவுளாம் முருகனின் தாளடையவும்,நாளெல்லாம் அவனையே உயிராகவும்,உறவாகவும்,
மனத்தில் நிறுத்திப் போற்றிவரும்,எல்லாம் அவனே என்ற நினைவில் வாழும்,அபலைப் பெண் படும்
துயரினை உன்னிடம் சொன்னால் பலன் கிடைக்கும்,சுகம் கிடைக்கும்,பொன்முருகன் பூமாலை கிட்டும்,என்ற எண்ணத்தில்,ஆசையில்,உன்னை நாடினேன்:அழகிய தோகை கொண்ட மயிலே!முருகன் மீது பித்தாகிப் பேதலிக்கும் பக்தையின் பற்றினை அறிந்து,முனிவர்போல் முருகத்தவம் கிடக்கும் ஆழ்மன நிலையறிந்து,கடலலைச் சீற்றம்போல் அமைதியின்றித் தவிக்கும் இப்பெண்ணின் ஆழ்மனத்துத் தோன்றிய,வெம்மையான காம எண்ணமற்ற,மென்மையான காதலின் மேன்மையறிந்து,
உடல் இளைத்தும்,மனம் உழன்றும் படும் வேதனையறிந்து,ஆய்விற்கு அப்பாற்பட்ட ஆழ்மனச் சேற்றில் முளைத்துவிட்ட ஆசையாம் செடியின் வளர்ச்சியைப் பார்த்து,இப்பெண்ணின் மனமேன்மை,மென்மை
அறிந்து,மாசறு பொன்னாய் மதிக்கும்,முருக அன்பாம் எண்ணத்தை நன்கறிந்து,என் சொல்லை,என்
வேண்டுகோளைக் கண்ணும் கருத்துமாய் முருகனிடம் எடுத்துரைத்துப் பெண்மனம் புரிய வைத்து,
மகிழ்வை வழங்குவாய் என நம்புகிறேன்.
என்னை ஆட்டுவிக்கும் பேய்மனப்பைத்தியம் உன்னால்,உன் ஆசியால் நீங்கிடும்,என்றெல்லாம்
எண்ணியே,குற்றமற்ற நீலமயிலே!முருகனின் ஊர்தியே!காணும் அழகே!தில்லை நடராசப் பெருமான்
போல் நடனம் ஆடும் மயிலே!கருமேக வானில் மின்னிடும்,மின்னல் கீற்றில் மின்னிடும் தோகை
விரித்தாடும் அற்புதமே!உன்னாலே என் காதல் கைகூடும் முருகனின் தார்மாலை உறுதியாய்ப்
பெற்றிடுவேன்:ஊரார் பழி தூற்றலை மாற்றிடுவேன்:உள்ளம் நிறைந்த ஆறுமுகநாதன் திருவடி தீக்ஷை
பெற்றிடுவேன்:என்றெண்ணி,என்மனத்தில் தேங்கிய எண்ணத்தைத் தூதாக எடுத்துச்செல்ல
தூய்மையான மயிலே சிறந்தது ,என முடிவுற்றேன்,அதற்காக உன்னைக் காடுமேடெல்லாம் தேடி,ஆடி,
ஒடி வந்து,உன்னைப் பாடிப்பாடிப்போற்றிக் கூடி நின்றேன்.கூடலான் முருகன் கூடிடவே உன்னைப் போற்றினேன்.நீயும் ஆடி,ஆடிக்கன்னியாகுடி ஆறுமுகன் அடைந்து,ஆறுதலாய் ஒருசொல்,ஆனந்தமாய் ஒருமாலை வாங்கி வா மயிலே!உன்னைக் காண்பதற்காகக் கண்டுபிடித்துப் பேசுவதற்காக மாலை வேளை மண்,மலை,காடு,மேடு ,முள்வழி எல்லாம் உன்னைப் பின் தொடர்ந்தேன்:முடிவில்
சோலையொன்றில் சோர்வில்லா உன்னை அடைந்தேன்."கொளுத்தும் கோடைக்காலத்தில் வயல்களை வாழவைக்கப் பாயும் ஆற்றுநீர் போல,""கண்மறைக்கும் காரிருளில் அகல் விளக்கு ஒளிச்சுடர் போல "
என் துயரைப் போக்க வந்த மயிலே!உன்னை வணங்குகிறேன்.
தூது செல்ல உதவும் பலப்பல பற்றிப் பல்லோரிடமும் கேட்டேன்.அவர்கள் உன்னையே உயர் பொருளாய் உரைத்தனர்.குற்றமற்ற சொல்லேற்றுத் தூதுரைக்கும் பணியாற்ற பலர்,வரினும்
மயிலுக்கு அவைகள்,அவர்கள் ஈடாகா"என்ற உரை கேட்ட பின்னரும்,பேதைப் பெண்மனத்தால்
மற்றவற்றை அனுப்பி மாத்துயர் நான் அடைந்த கதையைக் கூறுகிறேன், கேள்!
விளக்கம்
உவமை..........பாலையிலே தண்ணாறு வண்ணவயல் வாழவைக்கும் தன்மைபோல் ..என்ற இடத்திலும்,
கண்மறைக்கும் காரிருளில் கைவிளக்குத் தீயொளி போல் ....என்னும் இடத்திலும் உவமை பயில்கிறது.
உவமை பொருள்
பாலை...............................தலையின் துயர்
தண்ணாறு .....................முருகன்
வண்ணவயல் ............... தலைவி
போல் ................................உவம உருபு
வாழவைக்கும் தன்மை ....இரண்டிற்கும் பொது
காரிருள்...........................தலையின் துயர்
கைவிளக்குத் தீயொளி ...முருகன் அருள்
போல்.................................உவம உருபு
செந்தமிழ்
செந்தமிழைச் செய்திசொல்லச் செங்கயல் செங்குளச்
செந்தா மரைமலர் செம்பாதம் சார்த்தியபின் -------செந்தமிழே!
ஆய கலைவாணி ஆன்றகரப் பொன்னேடே!
மாய மனவேக்கம் காய்நிலா கண்டேக்கம் ----சேயோனின்
தூயமுகப் பற்றேக்கம் தூயோன் தொழுதோள்
தூயமேனி கண்டகாலை தூயமனம் கொண்டுவிட்டத் -----தூயகாதல்
சொல்லிமாலை வாங்கிவா சொல்லிநானும் வேண்டிடச்
சொல்லதுவும் சொற்பொருளைச் சார்ந்துதானும் சேர்ந்ததே ------சொல்லானான்
நற்றமிழ் நற்பொருள் ஆனான் முருகனவன்
பொற்பாதம் நாடின் நகருமோ பைந்தமிழ் ------கற்றசொல்
கந்தனோடு ஒன்றிவிடக் காத்திருந்தேன் காலகாலம்,
பொருள்
செந்தமிழைத் தூதனுப்ப முடிவு செய்து மீன்கள் துள்ளிவிளையாடும்,குளத்துத் தாமரை மலர்களைக் கொண்டு,தமிழின் பேரடிகளில் இட்டு,வணங்கி,செந்தமிழே!கலைமகளின் கரத்தமர்ந்திருக்கும் ஏட்டுச்சுவடியே!என் மாயைபடர்ந்த மனத்தின் ஏக்கம்,நிலவைக் காணின் ஏக்கம்
முருகனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற ஏக்கம்,இவைகளை மாற்றுவாயா!
முருகனைத் தொழுதபொழுது ,முருகனின் நிலவுமுகத்தைப் பார்த்தபொழுது தோன்றிய தூய காதல் என்னை வாட்டுகிறது.என்மனத் தூய்மைக் காதலை முருகனிடம் எடுத்த்தோதி,அவனருள் தார்மாலை
வாங்கி வா!என்றனுப்பினேன் தமிழை.
தமிழும் சென்றது:சொல்லும்பொருளுமான முருகனைப் பார்த்தது:அப்படியே அவனோடு ஒன்றி
விட்டது:சொல்லும்,பொருளும்,தமிழும் அவனேயல்லவா!அவனது பொற்பாதம் நாடி,அங்கேயே தங்கிவிட்டது.சென்ற தமிழ் வரும்"வரும்" எனக் காத்திருந்தேன் பல காலம்.மாலையும் வரவில்லை:தமிழும் திரும்பி வரவில்லை.
மேகம்
விந்தைமிகு வெண்மேகக் கூட்ட விரிவானச் ------சந்தையில்
எந்தன் தலைவன் எழிலார் குமரன்போல்
செந்தழல் தோற்றத்தில் செங்கருணை நீர்கொண்ட -----சுந்தரக்
கார்மேகம் கண்டு,கலைமதிக் கந்தனின்
ஊருயர்வு பேர்பெருமை சீர்சிறப்பு சேர்வழிகள் ----தார்மார்பு
போன்றன போற்றிப் புகன்றபின் பக்குவமாய்த்
தேன்துளிர் தண்மாலை தேவனிடம் பெற்றுவா ----ஊனுறக்கம்
இன்றித் தவிக்கும் இளங்காதல் செப்பிவா
என்றுரைத்தேன் ஏர்காளை போல்தலையை இங்குமங்கும் ----நன்றாட்டி
மன்றலிலே மாமுருகன் மாக்கோலம் கண்டவுடன்
தென்றலெனக் கண்ணருள் தீங்காற்று மேனிபடப்-----பொன்னுடல்
குளிர்ந்து குழைந்து குளிர்நீர் உருகித்
தளிர்ப்பாதம் தன்னை வணங்கிக் கரைய ---வளிவழியே
வடிவை அறிந்து விதியை உணர்ந்தேன்.
பொருள்
விந்தையான தோற்றம் பல கொள்ளும் வெண்மேகக் கூட்டம் நிரம்பிய வானத்திலே,எம் உள்ளம்
நிறைந்த தலைவன்,எழில் முருகன் போல,மின்னும் செந்தழல் தோற்றம்,கருணை போன்ற கருமை
கொண்ட கார்மேகத்தைப் பார்த்து,வணங்கித் தூது செல்ல வேண்டினேன்.தலைவனின் அழகு,ஊர்,
சிறப்பு,பெயர்,பெருமை போன்றவற்றை எடுத்துரைத்து,அவன் ஊர் செல்லும் வழியும் கூறிப்
பணிவும் பக்குவமும் கலந்து எம்பெருமானிடம் பேசுவாய்!உண்ணாமல்,உறங்காமல் தவிக்கும் என்மனம் பற்றி எடுத்துரைத்து,அன்புப் பரிசாய் மாலை வாங்கி வா!என்று சொல்லி அனுப்பினேன்.
மேகமும் சென்றது:முருகனைப் பார்த்தது:பார்த்தவுடன் இறைவனின் கருணைப் பார்வை
அதன்மீது,தென்றலாய்க் குளிர்காற்றாய்ப் பட்டது.பட்டவுடன் குளிர்ந்தது:குழைந்தது:குளிர் நீராகி,
எம்மான் மலர்ப்பாதத்தில் வணங்கிக் கரைந்தது.காற்று வழிச் செய்தி அறிந்து விதியை நொந்தபடி நின்றேன்.
விளக்கம்
தீங்காற்று ==இனிமையான காற்று
அன்னப்பறவை
துடியிடைத் தூமகள் தொல்லுவமை ஆகி ----மடிநடைச்
செங்காலும் சங்கன்ன மேனியும் நீர்நீக்கிப்
பொங்குபால் கண்டறியும் பண்பாடும் கொண்டதாம் -----தங்கச்
சிறகன்னம் சிந்தனை தூண்ட செழுமைப்
பறவை அரசி மணித்தாள் பணிந்து -----நிறைமன
அன்னமே!அன்புற்றேன் அந்தணச் சண்முகனிடம்.
கன்னல் மொழியும் கனிமுகக் கந்தனது -----புன்னகையும்
தார்மார் பணிந்த தகைமிகு வீரமும்
பார்போற்றும் பேரழகும் பார்த்தடியாள் ஆசையுற்றேன் ------சீர்த்த
பறவையே!பற்றுற்ற நற்றவப் பெண்ணின்
உறவையும் உள்ளத்தின் உண்மையும் கூறித் ----திறமுடன்
பேசிப் பணிவுடன் போற்றிப் பசுந்தழை பெற்றுவா
ஆசி அளித்தபின் அன்னமும் சென்றது -----வீசிடும்
தென்றல் விளங்கிடும் மல்லிகை முல்லையும்,
நன்றே இருபுறம் பொன்றளிர் மேனியுடன் ------நின்றருள
வெள்ளை மனமும்,விரிநிற வெண்ஆடையும்,
கள்ளமில்லாக் கண்ணருள் காட்டும் கருணையும் -------உள்ளத்தில்
எண்ணியெண்ணி ஈரன்னம் வண்ணமுடன் இங்குநிற்க
எண்ணாது இங்குவந்து என்னெழில் கர்வத்தால் ----விண்பழியை
ஏற்றிடவோ? நாட்டவர் தூற்றிடவோ?நான்நில்லேன்
காற்றாய்ப் பெயர்ந்திடுவேன் அன்னம் அகன்றது -----நாற்றங்கால்
நாடியே.நாணித் தலைகுனிந்த செய்திகேட்டு
வாடி வதங்கினேன் .வாட்டமது போக்கிடத் -------தேடினேன்
பொருள்
ஒடுங்கிய இடை உடைய அழகு மகளிர்க்கு உவமையாகி,அசைந்து அசைந்து நடக்கும் செங்காலும், வெண்ணிற மேனியும்,நீரும்பாலும் கலந்த தன்மையில் நீரை விடுத்துப் பாலை
மட்டும் குடிக்கும் பண்பாட்டையும் கொண்ட தங்கச் சிறகுடைய அன்னப் பறவை,சிந்தனையில் வர,
பறவைகளின் அரசியை வணங்கினேன்.வேண்டுகோள் விடுத்தேன்.நல்ல மனம் கொண்ட அன்னப்
பறவையே!கன்னியாகுடிச் சண்முகப் பெருமான் மீது மையல் கொண்டேன்:கரும்புபோல் இனிக்கும்
அவனது பேச்சும்,கனிவாய் விளங்கும் புன்னகையும்,மாலையணிந்த மார்பும்,வீர கம்பீரமும்,
உலகோர் போற்றிப் புகழும் அழகு மேனியும் கண்டு,அவன்மீது காதல் கொண்டேன்.சீருடைய
பறவையே!சிந்தையெல்லாம் அவன் குடிகொண்டுள்ள தன்மையும்,அவனன்றி வேறு யாரும் உறவில்லாத உறவையும்,உள்ளமெல்லாம் அவனே நிறைந்திருக்கும் தன்மையும் எடுத்துக்கூறித்
திறனுடன்,பணிவாகப் பேசி,அவனணிந்த அழகு மாலை வாங்கி வா!,என்றனுப்பினேன்.அன்னமும்
சென்றது:அங்கே தென்றல்போல முருகனும்,மல்லிகை,முல்லைபோல இருபுறமும் வள்ளியும்,
தெய்வயானையும் நின்றருளும் காட்சியைக் கண்டது.வெள்ளை மனம்,அணிந்திருக்கும் வெண்ணிறப்
பட்டாடை,உள்ளமெல்லாம் நன்மை கலந்த வெள்ளையுள்ளம்,கருணைப் பார்வை கொண்ட இரண்டு
அன்னங்கள் எம்பெருமான் அருகே நின்றிருக்க,அங்கு நானும் சென்று என்னழகு,என்சொல் என நிற்க
இயலுமோ!என்னழகு கர்வத்தால் அங்கு சென்று வீண்பழிக்கும்,விண்ணவர் பழிக்கும் ஆளாவதோ!
நான் போகமாட்டேன்,காற்றாய்த் திரும்பிச் சென்றிடுவேன்.என எண்ணிய பறவை ,தனது நீர்த்தடாகத்தை அடைந்து விட்டது.அன்னப் பறவை நாணி,தலைகுனிந்து திரும்பிய செய்தி அறிந்து
மனம் வருந்தினேன்.வாட்டம் நீங்கக் கிள்ளையை நாடினேன்,
கிள்ளை
கிள்ளையை:முன்கேட்டுப் பின்சொல்லும் வேதம்போல்
தள்ளாது தான்கேட்ட தத்துவம் முத்தாக்கி -----விள்ளாது
உள்ளம் உணரும் உவகை உடன்சேரக்
கள்ளமற்றே காரிகை சார்த்திடும் நல்லிதழ்க் -----கிள்ளையே!
கன்னிமா வேலனைக் கண்டுற்றேன் காதல்நோய்:
சென்னிபோற்றும் சேவடி சிந்தவில்லை நோய்மருந்து -----பொன்னிதழான்
பின்னோடி முன்னோடி என்னபயன்?பொன்கிளியே!
என்மனத் தாபத்தை என்மன ஈடுபாட்டை ----அன்புடனே
சொன்னசொல் பன்முறை சொல்லிடும் பண்புடனே
கன்னல் கனிவாயால் கந்தனிடம் சொல்லிவா ------மின்னும்
மணிமாலை மாமுருகன் தார்மாலை பெற்றுப்
பிணிமனம் காப்பாய், பிணிதனைப் போக்க -----நனிகிள்ளை
பஞ்சாய்ப் பறந்து பதுமமுகம் போற்றியது:
விஞ்சை மணிகிள்ளை,வேட மலர்க்கிள்ளை -----வஞ்சமிலா
வாய்மொழியால் வண்ணநிலா வெண்ணமுது ஊற்றெடுத்த
தாய்மொழியாம் சேய்மொழியாம் கொஞ்சுமொழி கேட்டவன் ------ஆய்வினில்
ஈடுபட்டால் ஈடாகா தென்மொழி ஈங்குநிற்கப்
பீடில்லை:சீரில்லை:காடடைவேன்:என்றேகக்----கூடுவிட்டுப்
பொருள்
ஆசான் சொன்னதை அப்படியே திரும்பவும் பன்முறை சொல்லும் வேதம்போல்,எதையும் விட்டுவிட்டாமலும் குறைக்காமலும் கேட்ட தத்துவத்தை முத்தான சொல்லில் கேட்போர் உள்ளம் ஏற்குமாறு கவிதையாய் உரைக்கும் கிள்ளையே!கன்னியாகுடி வேலனைக் கண்டதும் காதல் நோய்
உற்றேன்:நான் வணங்கும் முருகன் சேவடியோ,அருள் என்னும் மருந்தை அருளவில்லை: மருந்து வேண்டி முன்சென்று வணங்கினேன்:பின்னாடியே ஒடி,ஒடி நின்றேன்:பலன் கிட்டவில்லை:
பொன்னிறக்கிளியே!ஒன்றைக்கேட்டுப் பன்முறை கூறும் உன் அழகிய நாவால் என் காதலை,என் தாபத்தை,நான் படும் துயரை முருகனிடம் எடுத்துச்சொல்!பன்முறை அவன் மனம் ஏற்குமாறு சொல்லி,மணியன்ன மாலை,அவன் அணிந்துள்ள அழகுமலர்மாலை வாங்கி வா!வாங்கிவந்து
என் மனநோயைப் போக்குவாய்!என நான் வேண்டியதும்,எனது துயர் போக்கக் கிள்ளையும் பறந்து சென்றது.முருகனின் தாமரை முகம் கண்டது:மாமுருகன் பக்கத்தில் இரு கிளிகள்:ஒன்று விண்ணவர்
தலைவன் மகளாம் கிளி:மற்றொன்று வேடர்குலக் கிளி:இவ்விரு கிளிகளின் அமுதூறும் குளிர்ச்சிமிக்க
சொற்களைத் தாய் மொழியாய்,சேய் மொழியாய்க் கேட்டு மகிழ்பவன் அல்லவா முருகன்!
அவன் முன் சென்று நான் பேச முற்படின்,அக்கிளிகளின் பேச்சோடு,என் பேச்சை ஒப்பிட்டால்,,,அந்தோ!என்மொழி தாழ்வடையும்.சீர் பெறாது:சிறப்புறாது:நான் இங்கிருப்பதே குற்றம்.
எனக் காடு நோக்கிப் பறந்தது கிளி.
விளக்கம்
முன்கேட்டுப்பின் சொல்லும் வேதம்====வேதம் ஓதும் முறை...ஆசிரியர்,சொன்னதை,மாணவன்
இருமுறை சொல்லவேண்டும்.தனியே பன்முறை சொல்லிபழகவேண்டும்,இதனை,சந்தை=இருமுறை
திருவை ===பலமுறை என்பர்.
இவ்வரி உவமையாய் வந்துள்ளது,
முன்கேட்டுப்பின் சொல்லல்=தலைவி சொல்வதைமுன் கேட்கவேண்டும்.பின் அதைப் பலமுறை
மனதில் பதியுமாறு சொல்லவேண்டும்
உவமை...... வேதம் பொருள்.....கிளி
நெஞ்சம்
போக மறுக்கும் பிணிப்பிறவி போக்குநெறி
ஏகனவன் பக்தர் இடர்களையத் தோன்றல்போல் -----வேகத்
துடிதுடிப்பு நெஞ்சம்தான் தானாக வந்து
மடிவிடு:மத்தின் சுழற்சித் தயிராம் ----அடிமன
ஆழ்துயர் போக்கி அவனடி போற்றியும்,
வாழ்வளி வண்ணமலர் மாலைதான் வாங்கியும் ------சூழிடும்பை
நீக்கிடுவேன் நீங்கிய நெஞ்சமும் நித்திலன்
ஆக்கமதைப் பெறவே அருகினில் சென்றது ------தூக்கிய
பாத தரிசனத்தில் பைந்தமிழ் வாசகர்
நாத நாத என்றழைத்து நற்சிவன் நாடினாற்போல் -------சீதக்
குழலணி,திங்களாய் வானிலே கண்டே
அழகன்னை முன்வீழ்ந்த பட்டர்போல், தானும் ------குழகனைக்
கண்டதும் கண்டேன் திருப்பாதம் கற்றோரும்
கண்டறியாக் காலடி என்றே உரைத்தநெஞ்சம் -----அண்டர்
அகலாச் சேவடியில் ஒன்றிக் கலக்கப் -------பகல்கனவாய்ப்
பற்றதும் சுற்றமாய் நற்றவன் பற்றிட
இற்றது என்மனம்:ஏற்றனன் உற்றதுணை ----நற்றவ,
பொருள்
உயிர்க்கூட்டை விட்டு அகலாத பிறவிப்பிணியைப் போக்கும் நெறிகாட்டும் வள்ளலாம் கடவுள்
அடியவர்முன் தோன்றினாற்போல,வேகமாய்த்துடிக்கும் என் நெஞ்சமும் தானாக என்முன் தோன்றி,
"துன்பம் விடு:மத்தின் வேகத்திற்கேற்பச் சுழலும் தயிர்போல் தவிக்கும் உனது அடிமனத்துயரைப்
போக்கி,முருகன் சேவடி வணங்கி,உன் வாழ்வு மலர மலர்மாலை வாங்கி வந்து,உன்துயரை நானே
போக்குகிறேன்"என்று சொல்லிப் புறப்பட்டது.முருகனின் நல்லாதரவு பெற அவனருகில் சென்றது:
ஆனந்தக் கூத்தாடிய நடராசப் பெருமானின் திருவடி கண்டதும்,"நாத""நாத"என்றுணர்ச்சி மேலீட்டால்
அவன் பாதம் சேர்ந்த மாணிக்க வாசகர் போலவும்,நெருப்பிலே நின்றகாலை குளிர்ச்சியான குழலணி
தோடு,வானிலே அமாவாசை அன்று,நிலவாக உதித்ததும் அன்னையே!அபிராமி!என அன்னையின்
பாதம் சேர்ந்த அபிராமி பட்டர் போலவும்,அழகன் முருகன் சேவடி கண்டதும்,கண்டேன் சேவடி"
கற்றோரும்,மற்றோரும் காண இயலாச்சேவடி"என்றே கதறிய நெஞ்சம் தேவர்கள் காண்பதற்காகக் காலம் காலமாய்க் காத்துநிற்கும் கந்தன் காலடியில் கலந்தது.
என் நெஞ்சமும் முருகனைப் பற்றிடப் பகல் கனவாய் என்மனமும் ஓடிந்தது.இந்த நேரத்தில் எனக்கு
உற்ற துணையாய் வந்த தவ மயிலே!
விளக்கம்
ஏகனவன் பக்தர் இடர் களையத் தோன்றினாற்போல .......இங்கு உவமையணி பயில்கிறது.
ஏகனவன் =கடவுள் உவமானம்
நெஞ்சம் .....உவமேயம்
போல ...உவம உருபு
இடர் களையத் தோன்றல் .....இரண்டிற்கும் பொது.
பைந்தமிழ் வாசகர்=மாணிக்க வாசகர்
பட்டர் =அபிராமி பட்டர்.
மயிலிடம் கூறல்
நனிமயிலே,நன்முருகன் நாடிடத் தூதுப்
பனிமலர் சாற்றும் பணியினில் பண்பு,-----முனிவில்லாச்
சொல்லாக்கம்,சொல்முறை,சொல்லுயர்வு,சொல்லழகு
நல்லன வெல்லாம் தழுவி நளினமாய்ச் -------சொல்லிடும்
வல்லமை பெற்ற வளமயிலே!உன்பெருமை
தொல்புகழ் தோற்றம் தளிர்நடை போன்றன ----கல்லானும்
நன்கறிவான் நாடறிய நாட்டிடுவேன் உன்பெருமை
பொன்மயிலே!பூரித்தே சாற்றிடுவாய் பெண்ணேக்கம் ----பொன்னனிடம்.
பொருள்
அழகு மயிலே!நன்முருகனை நானடையத் தூதுப் பணி ஆற்றிடப் பண்பு தழுவிய சொல்,சினமற்ற
பேச்சு,பேசும் முறை,உயரிய சொல் பயன்பாடு,அழகுடைய சொல் தேர்ச்சி,ஆகியன கடைபிடித்துப்
பேச வேண்டும்.பேச்சு வல்லமை மிக்க மயிலே!உன் பெருமை,உன் புகழ்,உன் தோற்றம்,உன் மென்மையான நடை,
போன்றவற்றைக் கல்லாதவனும் அறிவான்.ஆயினும் உன் பெருமையை
நாடறியச் சொல்வேன்.மகிழ்வடைந்த நீ என் மன எண்ணத்தை முருகனிடம் எடுத்த்தோதுவாய்.
மயிலின் கோலம்
காடுதான் உன்நாடு:பீடுதான் உன்நடை:
ஆடுதல் உன்சிறப்பு:ஈடில்லா உன்தோகை -----வாடுமன
வாட்டம் களையும் வடிவுதான் உன்னழகு
தோட்டம் முழுதுமே தோண்டிடும் உன்னலகு -----கூட்டக்
கருமேகம் கண்டால் உருவெடுக்கும் ஆட்டம்
விரிதோகை வண்ணக்கண் பெண்ணணங்கு போல -----அரங்கேற்றம்
மெய்சிலிர்த்து மேனிமீது மூண்டுவிட்ட மொய்க்கனலின்
தொய்வில்லாத் தூயவாட்டம் தெய்வ மகளிரும் -----கைதொழுது
கால்போற்றும் கால்வந்து கால்தடவும் மேலாட்டம்
சால்பெல்லாம் ஆட்டத்தில் சார்ந்துநிற்கும் கோலமே!------சீலமழி
பொருள்
காடுதான் உனது வீடாகும்:பீடுடைய நடை உன் நடை:அழகாய் ஆடுதல் உன் சிறப்பு:ஈடு இணையற்றது உன் தோகை:துன்புறும் மனங்களில் துன்பம் நீக்கி,இன்ப மகிழ்ச்சி அளிப்பது
உன் அழகுத் தோற்றம்:வயல் வெளிகளைத் தோன்றிச் சீர்மைப் படுத்துவது உன் அலகு:கருமேகக்
கூட்டம் கண்டு விட்டால் உருவெடுக்கும் உன் ஆட்டம்:கண் கண்ணாய்த் தோகை விரித்து,அழகிய
பெண்போல உன் ஆட்ட அரங்கேற்றம் அமையும். மெய் சிலிர்த்து,மேனியெல்லாம் கனலாகி நிறுத்தாத
நீண்ட உன் நடனம் கண்டு,தேவகுல மங்கைகளே கைதொழுவர்:நடனக் கால்களைப் போற்றுவர்:
காற்றாகிச் சுழலும் உன் கால்களைக் காற்றே தழுவும்:சால்புடைய ஆட்டத்தில் சார்ந்து நிற்கும் கோலமே உன்கோலம்.
சூர்மயில்
காரணத்தால் கண்ணுதல் செவ்வரங்கள் வீணாக
வாரணத்தான் வேற்றம்பி போரெடுத்தும் புண்ணியச் -----சூரனவன்
மாளாது சேவல் மயிலாகி மாறுற்றும் மாறாத
சூளுற்றோன் சுந்தரன் செங்கருணைப் பார்வையால் -----தாளுற்றுத்
தன்மையுடன் தாங்கும் தனியூர்தி தானாகி
மென்மையுடன் மேனி சுமக்கும் பரம்பரை ----நன்மையே!
பொருள்
நன்மையில்லாச் செயல்களில் ஈடுபட்ட காரணத்தால் சிவபெருமான் கொடுத்த வரங்கள்
எல்லாம் பலன் அளிக்காத நிலையில்,விநாயகப் பெருமானின் இளவல் முருகன் போர்தொடுத்து,
அரக்கர்களை அழித்தக்காலை,புண்ணிய வரம்பெற்ற சூரன் மட்டும்,மாளாது,சேவலாய்,மயிலாய்
மாறினான்:அந்தநிலையிலும் மாறாத மனத்தோடு,சூளுரைத்துப் போருக்கு முற்பட்டவனைத் தனது
கருணை கெழுமிய பார்வையால் அடியவனாக்கிச் சேவல் கொடியாயும்,மயில் ஊர்தியாயும் மாற்றிட,
முருகன் சேவடி பணிந்து,மென்மையாய் மேனி சுமக்கும் ஊர்தியான பரம்பரையில் தோன்றிய மயில்
நீ அல்லவா! விளக்கம்
வேற்றம்பி ....வேல்+தம்பி=வேலையுடைய தம்பி முருகன்
உவமைப்பொருளே
தேவகுலப் பெண்களுக்கும் தீந்தமிழ்ப் பெண்களுக்கும்
நாவலர் காட்டுகின்ற நல்லுவமை நீயன்றோ!-----பாவலர்
பாட்டினில் பாடா விரிதோகை பண்பாமோ!
காட்டின் கருநீலமே!காந்தக்கண் வட்டமே!-------ஏட்டின்
உவமையாம் உட்பொருள் உத்தமம் நீயே.
பொருள்
விண்ணக மகளிர்க்கும் மண்ணகப் பெண்களுக்கும்,சிறப்பாய்,தமிழ் மகளிருக்கும் புலவர்கள்
காட்டுகின்ற நல்லுவமை நீ அல்லவா!கவிஞர்கள் தமது கவிதையில் உன்னை,உன் விரி தோகையை
வருணிக்காது விடுவாரோ!காட்டில் வாழும் கரு நீல அழகே!மனத்தைக் கவரும் கண் வட்டத் தோகையே!எல்லா நூல்களிலும் உவமை என்னும் உத்தமப் பொருள் நீயே ஆவாய்.
விளக்கம்
விரி தோகை .....வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.
மயிலுருக் கொண்ட அன்னை
தவக்கோலம் தான்கொள்ளத் தத்துவ மூர்த்தி, ---சிவபிரானைத்
தானடையத் தாயாம் தளிரபய நற்கரத்தாள்
தேனூறும் தீஞ்சோலை தென்காவிரித் தென்கரைக் === கோன்நினைந்து
மாமயில் நல்லுருவில் மாதேவன் பூசித்தாள்
மாமயில் மேனியாள் மாதவம் செய்தவூர் -----மாமயில்
ஆடுதுறை ஆகியது:ஆண்டவனும் அம்மையின்
வாடுமனம் நீக்கி வரமளித்துத் தன்னுடன் ----பீடுபுகழ்
பெற்றிடவே பாதியுடல் பெண்ணானான்:பெண்ணவளும்
உற்றதொரு பாகத்தாள் உற்றவுரு மஞ்ஞையன்றோ!------ கற்றவர்
கண்டுபோற்றும் அன்னையாய்க் காட்சி அளிப்பதும்
தண்ணூராய்ப் பேறுபெற்று மண்புகழ்ந்த மாமயிலே!-----ஒண்ணொளிர்வை
என்னென்பேன்!இன்றுமே உன்பெருமை மின்னுதம்மா!
பொருள்
இறைவனாம் சிவபெருமானை அடையத் தவம் மேற்கொள்ள,அன்னையாம் அபயாம்பிகை,
தேனூறும் மலர்கள் நிறைந்த சோலைகள் உடைய காவிரிக் கரையில்,தலைவனாம் ஈசனை நினைத்து,மயில் உருவில் தவம் மேற்கொண்டாள்.மயில் உருவத்தோடு இறைவனைப் பூசனை
செய்தாள்.மாமயில் மேனியாள் மாதவம் செய்த ஊர் "மயிலாடுதுறை"ஆயிற்று.இறைவனும்
அன்னையின் தவ வழிபாட்டால் மகிழ்ந்து,தன்னுடலில் பாதியை அம்மைக்கு அளித்தான்.பாகம்
பெற்றாள் .பவித்திரம் அடைந்தாள்.அப்படி அன்னை பேறு பெற ஏற்ற உரு மயிலே!நீ அல்லவா!
கற்றோர் போற்றும் அன்னையாய்க் காட்சி அளிப்பதும்,ஊர்ப் பெயராய் விளங்குவதும் மயிலே அன்றோ!உன் புகழை எப்படிப் பாராட்டுவேன்.இன்றும் உன் பெருமை மிளிர்கிறது.
இந்திர மயில்
போர்மாயம் ஆற்றிடப் புள்ளான சூரனைத்
தேரிலே சென்றுபோர் ஆற்றுதல் தீரனுக்கு ----வீரமாகா
என்றுற்ற வேலன் குறிப்பறிந்து இந்திரன்
மன்றலறி மாமயிலாய் மாதவன் ஊர்தியாகிச் ----சென்றரக்கச்
சக்கர வாகப்புள் செல்லும் இடமெல்லாம்
புக்கு புகுந்து போர்புரியத் தேரான ----அக்கறை
வெற்றிவேல் வீரவேல் நற்றுணை என்றுன்னை
கற்றறி சான்றோர் புகழ்ந்தனர்:இந்திரன் -----உற்ற
எழில்மயில் தோற்றம் அழியாப் புகழை
வழிவழி பெற்ற செழுமையை வாழ்த்தித் ----தொழுகிறேன்.
பொருள்
போரிலே தோற்ற சூரன் முருகனோடு மாயப்போர் ஆற்றத் தொடங்கினான்.தன்னுருவை ஒரு
கொடுமை மிகுந்த பறவையாக மாற்றிக்கொண்டு போர் புரியும் வெறியுடன் உலகெல்லாம் சுற்றிச் சுற்றி வந்தான்.பறவை உருக் கொண்ட அவனோடு,தேர் ஏறிப் போரிடல் முறையன்று.என முருகன்
மனதில் நினைத்தான்.அவனது மனக்குறிப்பை உணர்ந்த இந்திரன் மயில் உரு எடுத்து,முருகன்
ஊர்தியாக மாறினான்.அந்த இந்திர மயில் மீது அமர்ந்து,சூரப்பறவையாம் "சக்கரவாகப் புள்
செல்லும் மூவேழ் உலகமும் சென்று போரிட்டான்.அவ்வாறு போரிடத் தேர் போன்று அமைந்த
உன்னை,வெற்றிவேலின் உற்ற துணை,என்று உலகோர் போற்றினர்.இந்திரன் எடுத்த எழில் உருவான மயில் தோற்றம் அழியாப் புகழைப் பெற்றது.வழி வழியாய் நீ பெற்ற சிறப்பை வாழ்த்தி வணங்குகிறேன்
என் துயர் களைக
சூர்மயிலாய் இந்திர மாமயிலாய்ச் சுற்றிவந்து
தார்மார்பன் தன்னைச் சுமந்திடும் தன்மையுற்ற ------சீர்மையும்,
அன்னையே உன்னுரு என்னுமுயர் மென்மையும்
முன்னைய தொன்வினை மன்னவன் ஊர்தியும் ------கன்னியர்
காலருள் கண்ணருள் தீக்கையும் பெற்றனை!
வேலனின் மேனிதொடு சீலமும் பெற்றனை!-------மாலவன்
நான்முகன் தேவர்கள் நாதன் வணங்குகையில்
தேன்மொழி மங்கையர் திவ்வியம் போலவே ------கோனமர்
மாமயில் நீயுமே ஆவது மாண்பாகும்.
மாமயிலே!மாமுருகன் மாக்கருணை மேவிரக்கம் ----சேமமெலாம்
கண்கூடாய்க் கண்ட நீ காட்டிடுவாய் கண்கருணை:
பெண்னுற்ற பற்றறிந்து பெண்மனக் கூற்றறிந்து -------வண்ணவடிவே!
என்நெஞ்சம் என்நா எடுத்துரைக்கும் இச்செய்தி
கன்னெஞ்சன் கந்தன் கருணை கனியுமாறு -----பொன்னெஞ்சில்
பூட்டிய ஆபரணம் போலல்லாப் பூநெஞ்சன்
ஏட்டுக் களவியல் பாட்டுரை தேர்ந்தெடுத்துக் ------காட்டிய
சங்கத் தமிழ்நெஞ்சன் தங்கக் குறவள்ளி
பொங்குகாதல் நன்னெஞ்சன் போற்றி வணங்கிவாழ்த்தி -----வங்கக்
கடலலை பட்ட துரும்பெனக் கன்னி
இடரதைச் சொல்லி இளமன ஆறுதல் ----மடலதை
ஆண்டவன் அருளுடன் பெற்றுவா!செல்வழி,
ஆண்டவன் ஆன்ற பெருமை விரித்துரைப்பேன்:----மாண்டனள்
என்னும் அவமதும் உன்னாலே உன்பணியால்
மின்னலாய்த் தோன்றி மறைந்திடும்:என்னருள் -----நன்மயிலே!
பொருள்
சூர் மயிலாய் இன்று முருகனைச் சுமக்கும் ஊர்திப் பெருமையும்,இந்திர மயிலாகவும் சுமந்தபெருமையும்,தவமாற்ற அன்னை எடுத்த உருவமும் ஆன பெருமையும்,புண்ணிய பலத்தால்
முருகன் ஊர்தியான பெருமையும் ,வள்ளி,தெய்வயானையின் காலடி தீக்கை பெற்றுக் கண்ணருள்
பெற்ற பெருமையும்,பெற்றாய்.முருகனது மேனி தீண்டும் செம்மையும் பெற்றாய்.திருமாலும்பிரமனும்
தேவர்களும்நாதனாம் முருகனை வணங்குகையில்,அவ்வணக்கத்தைப் பெறும் தேவியர்போலவே முருகன் ஊர்தியாம் நீயும் பெறுகிறாய்.மயிலே!முருகனது கருணை,இரக்கம்,நல்ல அருள்பாலிப்பு போன்றவற்றைக் கண்கூடாகக் காண்கின்ற நீ என்மீது கருணை காட்டிடுவாய்.வண்ண மயிலே!
இப்பெண் படும் துயரறிந்து,முருகப் பற்றறிந்து,என் நெஞ்சம்,என் நா உரைக்கும் செய்தியினைக்
கல்நெஞ்சனாய் விளங்கும் கந்தனிடம் கருணை பொங்குமாறு எடுத்துக் கூறு.
பொன்னாபரணங்களைப் பூட்டிய மார்பிலே பூப் போன்ற மேன்மை உடையவன் அவன்.களவியல்
உரைகளில் நக்கீரன் உரையே சிறந்தது,என உரைத்த "உருத்திர சன்மனாய் .சங்கத்தில் தோன்றிய
தமிழ் நெஞ்சன் அவன்.குறவள்ளியின் காதல் நெஞ்சன் அவன்.அவனை வாழ்த்தி,வணங்கிச் சொல்வாய்.கடலலையில் தவிக்கும் துரும்பு போல,இப்பெண் படும் துயரை எடுத்துச் சொல்லி,
மன ஆறுதலாய் மடல் வாங்கி வா .செல்வழி,தலைவன் பெருமை,போன்றவற்றை விரிவாய் எடுத்துரைப்பேன்.இறந்தனள்'என்னும் இழிநிலை உன்னால்,உன் பணியால் மின்னலாயத் தோன்றி
மறையும்,நன்மயிலே !
விளக்கம்
சூர்மயில்........உருவகம் ,
செல்லும் வழி
வேங்கடம் தென்குமரி ஆயிடைச் செந்தமிழ்
பாங்குறப் போற்றிடும் ஓங்குயர் செங்கோலைத் -----தாங்கிய
மூவருள் முன்னவன் முத்தலைச் சூலத்தான்
சேவடி போற்றிடும் சைவ சமயத்தின் -----ஆவியாகக்
கோயில் குளங்கள் குணமுடைக் கோபுரங்கள்
மாயப் பிறப்பறு மாசில் பணிகளாக்கித் ----தேயமெங்கும்
நால்வர் திருமுறை நாயனார் வாசகம்
சால்புடன் சாற்றவைத்து,சாத்திர ஆட்சியைச் -----சீலமுடன்
நீதியான் தேர்க்கால் சீத முசுகுந்தன்
சோதித்த புள்ளிற்குச் சொந்தமெனத் தன்னுயிரைச் ----சீதனமாய்த்
தந்த சிபிமன்னன் தோன்றிய சோழகுலச்
சந்ததம் பந்தத் தொடராலே செம்மையும் -----முந்தைப்
பேராற்றல் காரீகை சீர்க்கலைகள் ஊராட்சி,
போராற்றல் பார்புகழ் நல்லாட்சி நாடதனில் ----நீராற்றல்
மிக்குற்று மின்மீன்கள் துள்ளுமலை மண்தொட்டு
முக்கால நற்பயிர்கள் முன்னூறு முத்தளக்கும்-----தக்கோல
நற்கா விரிபாயும் நன்னாட்டுப் பேரூர்கள்
மற்றதனைச் சார்ந்திட்ட சிற்றூர்கள் எல்லாமும் ---நற்றிறம்
கொண்டே விளங்கின:கொண்டிடுவாய் நெஞ்சத்தில்
கொண்டை மயிலுருக் கொண்ட மலைமகள் ------- கெண்டைமீன்
துள்ளும் அலையாற்றில் உள்ளம் உருகவே
புள்ளாய்ப் புதுத்தோகை மெல்ல விரித்தசைந்து -----வெள்ளைப்
பனிமலையான் பூசித்த பெருநகர் ஆடும்
நனிமயில் ஆடுதுறை நாடி வணங்கித் -----தனிமையுறு
வள்ளலார் வீற்றிருக்கும் கோயில் வலம்வந்தே,
அள்ளற் பழனத் தாம்பல் மலர்கின்ற ----புள்ளிருக்கு
வேளூரைப் புண்ணிய செல்வமுத்து வேலனைக்
கோள்போற்றும் வைத்திய நாதனைக் கோலவிழி -----கோள்முகத்துத்
தையல் திருவன்னை தாளை வணங்கியபின்
பையவே சென்று பறவை தொழுதிடுவாய் !------ஐயன்மொழியப்
பாலமுது ஆளுடைய பிள்ளைக்கு ஊட்டிய
சீலத்தால் செந்தமிழ்ப் பண்பிறந்த சீர்காழி -----கோலக்கா
பொற்றாளம் நல்கிய பொன்னவை புண்ணியன்
நற்றாள் பணிந்து,நலக்குகன் கொண்டலும்------கற்றவர்
வாழும் வளத்தலை ஞாயிறாம் ஈசனருள்
வாழ்த்தி உழுதொழில் ஆற்றி மறுநாளே ----வாழ்த்தி
வணங்க வருவேன் வரமருள் அரனே!
சுணங்காத நந்தனின் சுந்தரப் புன்கூர் ----குணம்போற்றின்
பொன்னிவாய்க்கால் சின்னஓடை பொன்னலை மின்னுகின்ற
கன்னியூரின் காட்சிதோன்றும்:செந்நெல் வயல்களும் ------கன்னல்
கரும்பு அரும்புமுல்லை மல்லிகைத் தோட்டம்
மருளும் எருமை அருள்விழி ஆக்கள்-----இரும்பாம்
இலுப்பை புளியன் இனிய வாழை
குலுங்கும் முருங்கை குளிர்நிழல் வேம்பு ----எலும்பென
மூங்கில் முதல்வன் முனியுரை ஆலமரம்
பாங்குடன் தோன்றிப் பறைசாற்றும் கன்னியூர் ----ஓங்குபுகழ்:
ஆவணிச் சித்திரை ஆடியும் மாசியும்
ஓவிய வீதிகள் உவந்திடும் மாமதுரை ------காவியக்
காஞ்சியின் தேரோடும் கற்பக வீதிகள்
நாஞ்சில் நலமாட நல்லாரூர் வீதிகள்போல் ------பூஞ்சரம்
பொன்னிற்கு மாற்றாம் நிலைபோல் பொன்னகர்க்
கன்னியின் கல்புரளும் மண்சாலை தோன்றிடும் ----பொன்னி
நிகராம் புதுவாய்க்கால் நீரலை பட்டே
நகர்வழிச் சாலை நனைந்தே நடக்கும் -----சிகரமாய்க்
கல்வியளி சாலையும் கற்கும் மணிமாணவர்
நல்ல பணிவுடன் நாடி வருகின்ற -------நல்லூரில்
ஆறன்ன தொல்வீதி ஆகாயம் தொடுகின்ற
சீருடை வீடுகளும் சிந்தனைச் சைவமாய் -------ஊருற்ற
வேளாளர் ஊனுயிர் உள்ளமெல்லாம் வேலனையே
நாளும் தொழுதுவரும் நற்காட்சி காண்மயிலே!------தோள்சுமை
வாழையுடன் வெற்றிலை பாக்கும் விரிமலரும்
சூழ்வினை போக்கிடத் தெங்கங்காய் சேர்த்துவைத்து -----வாழ்வுவேண்டும்
பக்தரது கூட்டமும் பட்டினி பேசாமை
முக்காலம் மேவியே முக்தியாம் சட்டிநோன்புப் ----பக்தர்கள்
நின்றாடும் நீள்வரிசை நன்நடுவே நின்னைப்போல்
தென்றலாய்த் தெம்மாங்குப் பாட்டோடு ஆடுகின்ற ------மன்றல்
அடியவரின் ஆட்டமும் கண்டிடுவாய்: ஆன்மப்
பிடிமதம் போக்கும் திருப்புகழ் பாடி -------அடிமனம்
ஆண்டவன் சேவடி அண்டிட ஆறுதனை
வேண்டாமல் வேண்டிட வைக்கும் விளக்கமும் ------கண்டிடுவாய்!
கண்டியூர் காளத்தி காஞ்சிநிகர்க் கன்னியூர்
மண்தொடின் மண்ணகக் கோயில்கள் போற்றிய -----புண்ணியம்
வந்திடும் என்பதை அந்திவான் செஞ்சடையன்
சந்திர சேகரன் சன்னிதி நின்றவுடன் -------புந்தியெல்லாம்
நீடு நிறைந்த நிலையில் உணர்ந்திடுவாய்.
வாடுமனம் போக்கிடும் பீடுற்ற கல்யாணி ------கோடுதனை
நூலெழுதக் கூராணி ஆக்கிய ஏகதந்தன்
ஆலாலத்தென்மூர்த்தி ஆகமச் சண்டிகேசர் ------சீலமெல்லாம்
ஒன்றிணைந்த ஓங்குகோயில் உள்நுழைந்து ஓதுமறை
நன்றிசைக்கும் நல்லடியார் சுற்றுவழி பின்சென்று ------மன்றலில்
கன்றுதேடும் தாய்போலக் கந்தனைத் தேடிநினை
அன்றலர்செந் தாமரை ஆறுமுகன் அன்போடு ----நின்றிருப்பான்:
பொருள்
வடக்கே வேங்கடம்,தெற்கே குமரிமுனை,நடுவே அமைந்த நிலப்பரப்பைச் செந்தமிழ் போற்றிச்
செங்கோலாட்சி நடத்தும் சேர,சோழ,பாண்டிய மன்னர்களுள் மூத்தவன்:முதன்மை பெற்றவன்:
சிவபெருமானின் சேவடி போற்றியே சைவ சமயம் வளர்க்கும் சால்பினன்:இறைவனுக்காக ஆலயங்கள் ,கட்டுதல்,கோபுரங்கள் அமைத்தல்,குளங்கள் வெட்டுதல் போன்றன புரிந்து,மாயப்
பிறப்பு போக்கும்,மாசில்லாத பணிகளைச் செய்பவன்:நால்வர் பாடிய திருமுறைகளை ஆலயங்களில்
ஓத வைத்தவன்:விதிமுறை தழுவி ஆட்சி நடத்துபவன்:தாய்ப் பசுவின் கண்ணீருக்காகத் தன மகனையே தேர்க்காலில் இட்டு மாய்த்த மனுநீதியும்,குரங்கு செய்த முற்பிறவிப் பயனாய்
இப்பிறவியில் அரசன் ஆனாலும் முகத்தைக் குரங்காகவே வைத்துக் கொண்டு தூய ஆட்சி நடத்திய
முசுகுந்தன்,நீதி தேவதையே கழுகு உருவத்தில் வந்து சோதித்த காலை,ஒரு புறாவைக் காப்பாற்றத்
தன் உயிரையே அர்ப்பணித்த சிபி மன்னன் போன்றோர் தோன்றிய சோழகுழப் பாரம்பரியப்
பண்பாடும்,செம்மையான ஆட்சி முறையும்,ஆற்றலும்,ஈகைக்குணமும்,கொண்டு விளங்கி,
ஊராட்சி,போர்முறை,கலைகள் பயில்வு போன்றவற்றில் பெரும் புகழும் கொண்டு,,ஆட்சி நடத்தும்
சோழ நாடு.அங்கே பொன்னியாம் காவிரி பாய்வதால் நீர் வளமும்,நல்ல விளைச்சலால் நிலவளமும்,
கொண்ட நாடு அது.நகரங்கள்,பேரூர்,சிற்றூர்கள் எல்லாம் வளமுடையனவாகவே விளங்கின.
அன்னை அபயாம்பிகை மயில் உருவுடன் ஈசனை வழிபட்ட மயிலாடுதுறை :அங்கு சென்று,
மயூர நாதனை,அபயக்கரத்தாளை வணங்கு,!அதன்பின் மேதா தட்சிணா மூர்த்தியாக ஆலாலன்
விளங்கும் வள்ளலார் கோயில் வலம் வந்து,வணங்கு!, அல்லியும் தாமரையும்மலர்ந்து காணப் படும் குளங்கள் நிறைந்து விளங்கும் புள்ளிருக்கு வேளூர் எனப்படும் வைத்தீஸ்வரன் கோயில் ,கோளான
செவ்வாய்க்குத் தலைவனாய் விளங்கும் செல்வ முத்துக் குமரனையும்,நோய் நொடி தீர்க்கும் வைத்திய நாதனாம் சிவபெருமானையும்,தையல் நாயகியையும் வணங்குவாய்.!அவ்வூரில் முக்தி பெற்றஜடாயு என்னும் கழுகரசனையும் போற்றிப் புறப்படு.!குளக்கரையில் தந்தையைக் காணாது அழுத ஆளுடையபிள்ளைக்கு,அண்ணல் மொழி கேட்டு,அமுதப் பாலூட்டினாள் அன்னை,அன்னை தந்த பாலால் மூன்றுவயதினிலே "தோடுடைய"எனப் பண்ணிசை தேவார பாடல்கள் பாடிய,திருஞான சம்பந்தர் தோன்றியசீர்காழிப் பதியை வணங்கிப் போற்று.பண்பாடும் பிள்ளைக்குப் பொற்றாளம் வழங்கிய ஈசன்வீற்றிருக்கும் திருக்கோலக்கா என்னும் ஊரையும் வணங்குவாய்.பக்கத்தில் அமைந்துள்ள "கொண்டல்"என்னும் ஊரில் காட்சி தரும் கந்தனை வணங்கிப் போற்று."கற்றவர்கள் விரும்பும் ஊர் கருப்பறியலூரே"
எனச் சம்பந்தர் போற்றிய தலைஞாயிறு,என்னும் ஊர் சென்று,குற்றம் பொறுத்த நாதரையும்,
கோல வளை நாயகி ,அம்மையையும் போற்றுவாய்!."நடராசப் பெருமானே!உன்னைக் காண நாளை
வருவேன்"என நாள்தோறும் சொல்லிக் கொண்டே உழுதொழில் பணியாற்றிய நந்தனார் என்னும்
திரு நாளைப்போவாருக்காக நந்தியை விலகச் செய்து காட்சி கொடுத்த சிவலோக நாதனைத்
திருப்புன்கூரில் வழிபடு.அங்கிருந்து,சற்றே திரும்பிப் பார்த்தால் பொன்னி வாய்க்கால் அலைகள்
மின்னும் அழகுடைய "கன்னியாகுடி"என்னும் ஊர் தோன்றும்.செந்நெல் வயல்கள்,கரும்புத் தோட்டம்,
முல்லை,மல்லிகை மலர்த் தோட்டங்கள்,அழகுக் காட்சி அளிக்க,மிரளும் எருமைகள்,அருளோடு பால்
தரும் பசுக்களும் சாலையெங்கும் காணப்படும்.இலுப்பை,புளியமரம்,வாழை,முருங்கை,வேம்பு
மூங்கில்,முனீஸ்வரர் குடியிருக்கும் ஆலமரம்,ஆகியன வழியெல்லாம் காணப்படும்.
ஆவணி வீதி,ஆடிவீதி,சித்திரை வீதி,மாசி வீதி,என ஓவிய வீதிகளைக் கொண்ட மதுரை,
தேரோடும் கற்பக வீதிகளைக் கொண்ட காஞ்சி,உயர் மாடங்களைக் கொண்ட வீதிகளைக் கொண்ட
திருவாரூர்,போல,அமையாத இவ்வூர்,பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல் மாணிக்கக் கற்கள் சிதறிக் கிடக்கும் மண் சாலை தோன்றும்.(இது உயர்வு நவிற்சி)தன்மை நவிற்சியாய் சரளைக் கற்கள்
நிறைந்த சாலை தோன்றும்.
காவிரிக்கு நிகரான புது வாய்க்கால் நீரலைகள் தொட்டோடுவதால்,குளிர்ச்சி மிக்கதாகச் சாலை
விளங்கும்.(வாய்க்காலுக்குப் பாலம் இன்மையால் கடந்து செல்கையில் நனைந்த கால்கள் தெருவெல்லாம் நனைக்கும்.)கல்விச் சாலை கன்னியாகுடியின் சிகரமாய் விளங்கும்.கல்வி கற்கும்
மாணவர்கள் பணிவோடும்,பண்போடும் விளங்குவர்.
ஆறுபோல் நீண்ட தெரு தோன்றும்,வளைந்து வளைந்து செல்வதால் ஆறு உவமையாய் வந்தது.
வான் தொடும் வீடுகள் நிறைந்து காணப்படும்.(மழைக்காலத்தில் ஒட்டு வீடுகளில் மழை ஒழுகுவதால்
வான் தொடும் என்ற என்ற உயர்வுச்சொல்)அவ்வீடுகளில் வசிக்கும் வேளாள மரபினர் சைவ சமயப்
பண்பாளர்கள்.ஊன்,உயிர் எல்லாம் முருகனுக்கே என்னும் பக்தியில் திளைப்பவர்கள்.அவர்களை நீ அங்கு காணலாம்.
வெற்றிலை,பாக்கு,தேங்காய்,மலர் இவைகளை முருகனுக்குப் படைத்து,"இறைவா!எங்களைக்
காப்பாய்"என வேண்டும் அடியவர் கூட்டமும் காண்பாய்.உண்ணா நோன்பும்,மௌன விரதமும் மேற்கொண்டு,முக்காலமும் முருகனை நினைந்து,முக்தி தரும்,ஷஷ்டி நோன்பு நோற்கும் அடியவர்
முருகனை வணங்க நீண்ட வரிசையில் நிற்பார்.நீண்ட வரிசை நடுவே,உன்னைப்போல் உணர்ச்சி
பூர்வமாக ஆடிடும் அடியவர்களையும் காண்பாய்.ஆன்மாவை நல்வழிப் படுத்தும்,திருப்புகழைப்
பாடிக்கொண்டே பரவசம் ஆகுவோரையும் நீ பார்க்கலாம்.ஆங்காங்கு பற்றற்ற தன்மையை விளக்கும்
உரை விளக்கம் அளிப்போரும்,கேட்போரும் காணப் படுவர்.அவ்வுரையை நீயும் கேட்கலாம்.
இக்கோயில் வந்து இறைவனைத் தரிசித்தால் கண்டியூர்,காளஹஸ்தி,காஞ்சிபுரம் போன்ற ஊர்களில்
எழுந்தருளும் கடவுளர்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.நீயும் அந்த அந்திவானச் செஞ்சடையன் கைலாச நாதன் சன்னதி முன் நிற்கையில் உணர்வாய்.எம்பெருமான் தாளை வணங்கி,
அருகிலேயே இடப்பக்கத்தில் வீற்றிருக்கும் கல்யாணி அம்மையை வணங்கிப் போற்று.சுற்றுவழி
(பிரகாரம்)நடக்கத் தொடங்கினால் பாரதம் எழுதத் தன் கொம்பையே எழுத்தாணியாகப் பயன்
படுத்திய விநாயகப் பெருமான் தோன்றுவார்.அவரைப் போற்றியபின்,திரும்பினால் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் தக்ஷிணா மூர்த்தி காட்சி தருவார்.ஞானம் வேண்டி அவரை வணங்கு!ஆகமம் நன்கறிந்த சண்டிகேசரையும் வணங்குவாய்!,தேவாரம்
திருவாசகம் பாடியபடி வரும் அடியவர்களுடன் நீயும் செல்வாய்!உன் மனம் தாயைத் தேடும் கன்றுபோல் ,முருகா முருகா என நினைப்பின் அன்றலர்ந்த செந்தாமரை முகத்துடன் கன்னியாகுடி
வடிவேல் முருகன் அழகுடன் நின்றிருப்பான்.
விளக்கம்
பறவை = முக்தி பெற்ற ஜடாயு என்னும் கழுகு.
தென்மூர்த்தி = தட்சிணா மூர்த்தி
தெங்கங்காய் =தேங்காய்
சுற்று வழி =பிரகாரம்
........
சேவடி .......பண்புத்தொகை
காரீகை ........உவமத்தொகை ...கார்=கருமேகம்
நனிமயில் ....உரிச்சொற்றொடர்
,,,,,,,,
கன்று தேடும் தாய் போல .....இங்கு உவமை பயில்கிறது.
கன்று.........மயில்
தாய்.............முருகன்
தேடுதல்.....பொது
போல.......உவம உருபு
முருகனின் பெருமை
நில்லா உலகத்தின் நீள்நிலை நிற்பவன்
நில்லென நான்முகனை நீடுசிறை தள்ளியோன் ------கல்லாலச்
சீடன் செவிசாய் வணக்கச் சிறப்பாளன்,
தேடிவந்து மால்பணியும் பீடுகொண்ட பேராளன் ------ஏடவிழ்
நான்மறை வாணிக்கு நாவினில் வேல்நுனி
தான்தொடத் தாரக மந்திரம் தந்தவன் -------மான்மகள்
வள்ளியை வான்மகள் வண்டார் குழலியைக்
கள்ளத்தால் காரரக்கர் வெற்றியால் ஏற்றவன் -------புள்ளான
சூரக் கொடியும் ஊர்தியும் சூழ்ந்தவன்
ஈரநெஞ்சும் ஈகை வரமும் இயைந்தவன்--------ஆரமணி
பொருள்
நிலையில்லாத உலகில் நிலைத்துத் திகழ்பவன்:நில்! என நிறுத்திப் பிரணவப் பொருள் அறியாத
நான்முகனைச் சிறையிலே தள்ளியவன்:ஞான குருவான சிவபெருமானே சீடனாகிப் பிரணவப் பொருளறிய வணங்கிய பெருமை உடையவன்:திருமாலும் தேடிவந்து பணிகின்ற பீடுடையவன்:
எல்லாம் அறிந்த கலைமகளின் நாவில் வேல் நுனியால் பிரணவம் எழுதிக் கல்விக் கலைகளை அளித்தவன்:குறமகள் வள்ளியைக் காதலால் மணம் கொண்டவன்:போர்ப்பரிசாகத் தெய்வயானையை மணந்து கொண்டவன்:சூரனாம் சேவலைக் கொடியாகவும்,மயிலை ஊர்தியாகவும் கொண்டவன்:இரக்க உள்ளமும்,கருணை நிறைந்த வரம் அளிக்கும் நெஞ்சமும் கொண்டவன்.
நில்லா.................ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நீடு சிறை ..........வினைத் தொகை
முருகன் மேனி அழகு
மார்பில் மரகத ஆபரணம் மின்னவும்,
கூர்வேல் குளிர்ச்சியைக் கொண்டும் திகழ்பவன் -----போர்ப்படை
பூண்ட புனிதக் கரமலர் ஈரிரண்டும்,
தாண்டவத் தந்தை தழற்பொறித் தோற்றமும் ------ஆண்டவன்
அல்லல் களைபவன் அன்பினை ஏற்பவன்
நல்லன் நலமருள் வில்லன் எனவடியார் -------சொல்லால்
புகழுரை கேட்டுப் பொலிவுறு திங்கள்
முகத்தழகும் தித்திக்கும் செவ்விதழ்ச் சேயின் ----அகத்தழகும்
பண்ணெனப் பாடற் கியைபுதரும் பண்பாட்டுக்
கண்ணோட்டக் கண்ணழகும்,பொன்மறை போதித்த -----தண்ணளி
நாவழகும் நங்கை இருவர் நலம்பெறப்
பூவுடன் சூட்டும் புனிதமாம் சொல்லழகும் -------நாவல்
கனியைக் கிழவிக் களித்த நடிப்பாம்
நனியழகும்,நற்கழுத்து,செஞ்செவி,மூக்கு ----நுனியழகும்,
வெவ்வரக்கர் வென்றழகுத் தோள்களும் ,வெண்பட்டுச்
செவ்விடை ஆடை அழகும்,புரிநூலின் ----திவ்வியமும்
வெற்றிக்கு வித்தாக வெற்றியன்னை கல்யாணி
நற்றவத்தால் பெற்றளித்த செற்றமுடை வேலழகும் --------பற்றற்றார்
பற்றுற்றுப் பல்லாற்றான் போற்றுகின்ற பாதமலர்,
உற்றதுணை ஆகிநின்று உள்ளத்தின் சோர்வுநீக்கிக்------கற்றாரும்
கல்லாரும் காண்கின்ற காலிணைப் பேரழகும்,
நல்லாரும் நற்கன்னி நல்லூரின் நாயகனே!-------இல்லானே!
உள்ளோனே!உன்பெருமை உன்புகழைப் பாடவந்தோம்,
கள்ளமற்றோர் ஊனுருகப் பாடும் கவியழகும் ------துள்ளிவரும்
தோகை அழகும் தவழ்கொடிச் சேவலின்
மோகச் சிறகழகும் முன்னின்று கண்டபின் -----தாகமேது!
ஆசையேது!ஆர்ப்பாட்ட வாழ்வேது!அன்றாடப்
பூசையேது!புன்னகைக் காதலேது!புத்தொளிர் ----ஓசையேது?
எல்லாம் இழந்தே எதுவும் இயையாமல்
தொல்லை,துயரொடு தூயசுகம் தொல்செல்வம் -------அல்லன
இல்லன உள்ளன எல்லாம் அறமறந்து
நல்லவன் நன்முருகன் நம்மனத்தை நாடுவான்:------செல்மயிலே!
பொருள்
மாலைகள் அணிந்த மார்பில் மரகத,நீல,வைர ஆபரணங்கள் மின்னவும்,மார்பிலே சார்த்திய வேலின் கருணைக் குளிர்ச்சியும்,உடையவன்:போராற்றும் பெருமைமிக்க படைகளை ஏந்திய
கரங்களைக் கொண்டவன்:சிவநெற்றிக்கண் தழற்பொறித் தோற்றம் கொண்டவன்:"அடியவர் துயர் நீக்குபவன்:அன்பினை ஏற்பவன்:நல்லவன்:நலமருளும் வில்லை ஏந்தியவன்:" என்றெல்லாம்
அடியவர்கள் போற்றும் புகழுரை கேட்டுப் புன்னகை பூக்கும் நிலவு போன்ற முகத்தழகும்,தித்திக்கும்
செவ்விதழ் கொண்டவனின் உள்ளத்தழகும்,பாடலுக்கு இயைபு தரும் பண்போல ,கண்ணோட்டக்
கருணை ததும்பும் கண்ணழகும்,பிரணவப் பொருள் போதித்த நாவழகும்,வள்ளி,தெய்வயானை
மகிழுமாறு,சூட்டும் மலரோடு,சேர்த்துச் சூட்டும் சொல்லழகும்,நாவல் பழத்தை,ஒளவைக்குக் கொடுத்துப் பழம் சுட்டதோ?என வினவிய நடிப்பழகும்,கழுத்தழகும்,செவியழகும்,நுனி மூக்கழகும்,
அரக்கர்களை வென்ற தோளழகும்,வெண்பட்டணிந்துள்ள இடுப்பழகும்,புனிதப் பூணூல் அழகும்,அன்னை கல்யாணி தவமிருந்து பெற்று,வெற்றி வாகை சூட ,அளித்த வேலழகும்,பற்றில்லார்
பற்றுடன் பற்றிடும் பாத மலரழகும்,உற்ற துணையாகி,உள்ளத்தின் சோர்வு நீக்கிக் கற்றவர்,
கல்லாதவர் எல்லோரும் ஒருசேரப் போற்றிக் காண்கின்ற இரு காலடிகளின் அழகும்
நல்லூராம் கன்னியாகுடியின் நாயகனே!உருவம் இல்லாதவனே!உருவம் உடையவனே!உன் பெருமை போற்றிப் பாடவந்தோம்"என நல்லோர்களும்,கள்ளமற்ற உள்ளம் உடையோரும் போற்றிப்புகழும்
கவிதை அழகும்,துள்ளி நடனமாடும் ஊர்தி மயிலழகும்,கொடிச் சேவலின் மோகச் சிறகு அழகும்,
கொண்டு விளங்கும் முருகனை கண்முன்னே கண்டுவிட்டால்,தாகமில்லை:ஆசை இல்லை:ஆர்ப்பாட்ட
வாழ்க்கை இல்லை:பூசை இல்லை:புன்னகைக் காதல் இல்லை:ஓசை இல்லை:எல்லாம் இழந்தும்
எதுவும் கூடாமல்,தொல்லை,துயர்,சுகம்,செல்வம்,இருப்பன,இல்லாதன எல்லாம் அறவே மறந்து,
முருகநினைவு மட்டுமே நிற்குமானால் நன்முருகன் நம் மனத்தை நாடி வருவான்.
விளக்கம்
கரமலர்..............உருவகம்.
தூதுரைக்கும் பணிவு முறை
சென்றடை முன்சூர ஊர்தியே! சிந்தனை
முன்னவன் மேலகற்றி என்மனம் என்துயர் -----மன்னவன்
காதினிலே சொல்லாக்கிக் கண்ணில் கருணையாய்,
ஆதியான் ஆறுதல்ஆழ்ந்தே இடம்பெற ------வாதிடும்
வண்டமிழ் வாய்ச்சொல் வளம்காட்ட,வாழ்த்தியபின்
வண்டார் குழலிகள் தண்தாள் பணிந்திடு:------கண்கள்
சினம்கொள்ளின் செம்மல் மனம்மாறும்:மாறா
மனம்கொள்ள மங்கையர் போற்றிடு:மஞ்ஞை ----இனமுதலே!
வேலவன் வீற்றிருக்கும் சீலமுடை நல்லூர்திக்
கோலத்தில் தான்மயங்கிக் கொண்டிடாதே காதல்தான். ------காலமும்
கந்தனை நம்பியே காத்திருக்கும் கன்னியின்
பந்தப் பணிதனைப் பக்தியுடன் ஆற்றவே -------வந்துள்ளேன் ,
என்றமனம் கொண்டிடுவாய்:என்றுன்னை வேண்டுகின்றேன்
கன்றழை தாய்ப்பசு காற்றென நாடுதல்போல் -------சென்றவுன்
பாதைநோக்கிக் கண்ணும்,பதில்நோக்கி மாமனமும்
நாதமாலை நோக்கியே நல்லுயிரும் நிற்பதால் ----------ஏதம்
களைந்திடக் கார்மயிலே!நீயும் வருவாய் !
பொருள்
சூரனாம் முருக ஊர்தி மயிலே!முருகனின் முன் செல்க.முருகனின் அழகில் மயங்கி,உன் மனத்தை
இழந்துவிடாதே.என் காதல் மனம்,எனது துயர்,போன்றவற்றை முருகன் செவியில் மனத்தில் பதியுமாறு,வளமான சொற்களாக்கி,அவன் கண்ணில் கருணையும்,அவன் மனத்தில் ஆறுதல் வார்த்தையும்தோன்றுமாறு நீ தூதுரை ஆற்றவேண்டும்.உரையாற்றும் முன் புகழ்ச்சி மிக்க சொற்களால் முதல்வனைப் போற்று.அருகில் நிற்கும் தேவியரைப் பணிந்து போற்று.வள்ளி,தெய்வயானை ஆகியஇருவரின் மனம் மாறின் அவர்தம் கண்களில் சினம் தோன்றும்.தேவியரின் முகத்தில் சினத்தைப்பார்த்தால் செம்மலின் குணமும் மாறும்.ஆதலின் தேவியரைப் போற்றி வணங்கு.
இனத்தில் முதன்மை பெறும் மயிலே!வேலவன் வீற்றிருக்கும் பண்பு வாய்ந்த மயிலின் மீது,
மயக்கம் கொண்டு விடாதே."காலமெல்லாம் கந்தனையே நம்பிக் காத்திருக்கும் இக்கன்னிப் பெண்ணின் பந்தப் பற்றைப்பணிவைப் பக்தியுடன் எடுத்துரைக்கவே,நான்வந்துள்ளேன்"என
மனத்தில் எண்ணம் கொள்!,என உன்னை நான் வணங்கி வேண்டுகிறேன்.
"கன்றின் குரல் கேட்டுக் காற்றாய்க் கன்றருகில் வரும் தாய்ப்பசு போல",தூது சென்ற நீ
திரும்பி வரும் வழி நோக்கிக் கண்ணும்,முருகனது ஆறுதல் சொல் நோக்கி மனமும்,நாதனின் மாலை
நோக்கி உயிரும்,நிற்கும்.அதை உணர்ந்து காற்றாய்க் கடுந்துயர் களைய நீ வரவேண்டும்,
என்கிறாள் தலைவி.
விளக்கம்
சூர ஊர்தி........ உருவகம்
வண்டார் குழலி ..அன்மொழித்தொகை
உவமையணி
"கன்றழை தாய்ப்பசு காற்றென நாடுதல் போல் "
கன்று ....உவமானம்
தலைவி ....உவமேயம்
தாய்ப்பசு ....உவமானம்
மயில் ........உவமேயம்
போல் ...உவம உருபு
காற்றென வருதல் .....இரண்டிற்கும் பொது.
தூதுரை
விளைவயல் வார்க்கும் விரிநீர்போல்,வெண்பாத் ----தளைபோல்
மலைபோல்,கடல்போல் மணிமுத்து சேர்த்த
சிலைபோலச் சொல்லெடுத்துச் சீராய்ப் பகரின் -----தலைவன்
மகிழ்ந்து மலர்முகம் காட்டுவான்:மற்றும்
பகிர்வான் பசுந்தமிழ்:பவளக் கொடியார் -------அகில்குழை
சூடிய செம்மலர் போலவே சூடிடச்
சூடிய மாலையைச் சூடிட நல்குவான்----தேடிய
சொல்லால் சுந்தரத் தூதுமொழி சொல்லுவாய்
வில்லவன் கண்ட விழாவினைக் கூறியும்,------நல்லவன்
நாடியே நாடெல்லாம் நல்வழிப் பின்தொடர்ந்து
தேடிதேடிச் சென்றதும்,வாடிவாடி நின்றதும் -----ஆடியாடிக்
காடுமேடு கந்தனே!கந்தனே!என்றுகூவி
ஓடுஓடு என்றோடி ஓங்காரன் காணாது-------நாடுநாடு
என்றுசொல்லி இன்றுவரை தென்றல்தான் தீண்டவில்லை:
சென்றமனம் தங்கிடவே செத்தவுடல் கல்போல -----நின்றதுவே .
கன்னிமணக் கந்தனே!கன்னிமனம் காத்திடுவாய்!
வன்னிமரக் காட்டினிலே வள்ளிமணம் புணர்ந்தவா!-------உன்னிதயக்
கூட்டினிலே ஓங்கிய பேருலகு உள்ளதென்பர்:
ஏட்டினிலே ஈகைக்கு நீதானே வித்தென்பர்:--------பாட்டினிலே
கற்றதெல்லாம் கந்தன்தான்:உற்றதுணை கந்தன்தான்:
நற்றவமே!உன்மீது பற்றுவைத்த பெண்துயரை ------முற்றிலுமே
நீக்கிடுவாய்!நீங்காத காதல்நோய் நீங்கிடவே
வாக்கிடுவாய்,"ஏற்றிடுவேன்" என்றதொரு வார்த்தையுமே .------பூக்கமழ்
தார்மாலை தந்திடுவாய்!தத்துவனே!தண்டமிழே!
கார்கருணைக் கந்தவேளே!என்றுபோற்றிக் கால்வணங்கு -------பார்போற்றும்
பைந்தமிழ் வள்ளிக்குப் பைம்மாலை சூட்டியவா!
நைந்தவுள நங்கைக்கும் நன்மாலை தந்திடுக.-------ஐந்திரன்
அன்புமகள் தெய்வயானை இன்பமாலை பெற்றதுபோல்
துன்புற்ற கன்னிக்கும் தானளிப்பாய் தார்மாலை -------என்றுதாழ்ந்து
பல்லாற்றான் போற்றிப் புகழ்ந்து,பரமனிடம்
நல்மயிலே!மாலைவாங்கி வா.
பொருள்
விளைவயலை வளமாக்கும் நீர் போல குளிர்ச்சிவளமும்,வெண்பாவின் கட்டுப்பாடுடைய
தளைபோலக் கட்டுப்பாடுடைய சொல்லாக்கமும்,மலைபோல உயர்ந்தோங்கிய சொல்பயில்வும்,
கடல்போல ஆழந்தகன்றவிரிவுடைச் சொல்லும்,மணி முத்துக்கள் பதித்த சிலைபோல வலிவும்,ஒளியும்
நிறைந்த சொற்கள் சேர்த்த வடிவும் கொண்ட சொற்களை அமைத்து,வரிசையாக வளமாகச்
சொன்னால் தலைவன் முருகன் மகிழ்ந்து,மலர்முகம் காட்டுவான்.நல்ல செய்தியும் அருள்வான்.
பைந்தமிழ் போலவும்,பவளம் போலவும் விளங்கும் இரு தேவியரின் குழலில் சூடும் செழுமலர்போலத்
தானணிந்ததண்ணளி மாலையும் தருவான்.ஆகவே ஆராய்ந்து,உயர்ந்த சொற்களைக்கொண்டு,
தூதுரை சொல்லுவாய் மயிலே!
விழாவிலே வேலனைக் கண்டதும்,அவன்மீது காதல் கொண்டதும்,அவனது தேர்ப்பவனி சென்ற
நாடு,நகரமெல்லாம்,பின் தொடர்ந்து தேடித்தேடிச் சென்றதும்,வளமுகம்காணாமல் வாடி வாடி நின்றதும்,இயலாமையால் ஆடி,ஆடி நடந்து,காடு மேடெல்லாம் கந்தா!கடம்பா!என்று கூவியபடி
ஓட்டம் ஓட்டமாய் ஓடியதும்,ஓடியும் ஓங்கார முருகனைக் காணாது தவித்ததையும்,மனம் "நாடு,நாடு"
என்று சொல்லிக்கொண்டிருக்கத் தென்றலைத் தீண்டாமலும்,இன்பநுகர்வுஇல்லாமலும்,இன்று வரை
வாழ்ந்து கொண்டிருப்பதையும்,தூதாகச் சென்ற மனம் அங்கேயே தங்கிவிடச் செத்த உடல் கல்போலக்
காலம் கடத்துவதையும் எடுத்தோதுவாய்.
கன்னியாகுடியின்கந்தக் கடவுளே!கன்னியைக் காத்திடுவாய்!வன்னி மரத்தடியில் வள்ளியை
மணம் புரிந்தவனே!கன்னியைக் காத்திடுவாய்!பேருலகும் உன் இதயத்துள் அடக்கம் என்பர்:
நூல்களெல்லாம் கருணைக் கடவுள்"என்று கந்தனைத்தானே போற்றுகின்றன:பாடல்களிலே
படித்ததெல்லாம் "உற்ற துணை கந்தன்"என்பதை யல்லவா!நற்றவ முருகனே!உன் மீது பற்றுவைத்த
பெண்ணின் துயர் முழுவதையும் நீக்கிடுக.
உன்மீது மாறாத காதலுற்ற மங்கையின் நோய் நீங்கிடவே,"ஒருசொல்" ஏற்றிட்டேன்"உன்னை,
என்றொரு சொல்லும் மார்பணி மாலையும் தந்திடுவாய்!முத்தமிழே!கருணைமிகு கந்தவேளே!
என்று போற்றிப் புகழ்ந்து,முருகன் சேவடியில் விழுந்து வணங்கு.
உலகெலாம் வியக்கத் தமிழ்க் குறவள்ளிக்கு,நறுமண மாலையைத் திருமண மாலையாய்த்
தந்த கடவுளே!உன்னையே நினைந்து நைந்திருக்கும் இப்பெண்ணிற்கும் மணமாலை தந்திடுக,
இந்திரன் மகள் தெய்வயானை இன்பமாலை பெற்றதுபோல,துன்புற்ற தூய தமிழ்ப் பெண்ணிற்கும் தார்மாலை தந்திடுக . என்று வேண்டிப் பணிந்து,பல்லாற்றானும் போற்றிப்
புகழ்ந்து,பரம தயாளன் பைந்தமிழ் முருகனிடம் மாலை வாங்கி வா!நன்மயிலே!
எனத் தலைவி மயிலிடம் தூதுரை கூறி அனுப்புகிறாள்.
விளக்கம்
விளை வயல்.........வினைத்தொகை
மலர் முகம் ............உவமைத்தொகை
பவளக்கொடியர் ..உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
ஓடு ஓடு ...................அடுக்குத்தொடர்.
சொற்பொருட்பின்வருநிலையணி
சூடிய செம்மலர் போலவே சூடிடச்
சூடிய மாலையைச் சூடிட நல்குவான் .......என்ற வரிகளில் "சூடி"
என்னும் சொல் பலமுறை வந்து சூடுதல் என்ற ஒரே பொருளைத் தருவதால் இங்கு
சொற்பொருள் பின்வருநிலை அணி பயில்கிறது,
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக