வியாழன், 6 அக்டோபர், 2016

                                        வேண்டுகோள்
வேல்கரத்து  வேலவன் விண்ணகத்து மேலவன்
வேல்மேனி தாங்கியே வேல்சுற்றம் ஆனாயோ?-----காலடி
கண்பார்க்கக்  கையருள் கன்னியர்கள் மேலமரப்
பண்பாடும் செந்தமிழ்ப் பைஞ்செவி கேட்கையில் -----மண்ணோடு
விண்ணெல்லாம் வீறுற்று மேல்சுற்றும் புண்ணியத்
தண்மயிலே!தண்டமிழ் வண்டான  பெண்ணடியாள் -----கொண்டதொரு
 காதலால் பித்தானேன்:காத்தருளும் கந்தனவன்
வேதமுகம் கண்டுநான் நாத நாத! என்றரற்றி --------ஏதமெலாம்
சுற்றுநின்று ஏசுநிலைக் காளாகிக்   காலத்தால்
புற்றுடைப் பாம்பன்னப்   புன்காற்று விட்டவளாய்க்------கற்றிட்ட
கல்வி மறந்து,    கவினுடல் வற்றியே
அல்லும் பகலும் அறுமுகனை எண்ணியெண்ணி த் ----தொல்பிறவி
நற்பயனாம் நாதனவன் நல்லருளை நாடிநிற்கும்
விற்புருவ வெண்திங்கள் கன்னிக்கு வேலவனின் ------நற்சொல்லை
உன்வழியே பெற்றிடவே உன்தாள் பணிந்துநான்
உன்னையே வேண்டுகின்றேன்:என்காதல் சென்றியம்பப் ----பொன்மயிலே!
கன்னியான் கந்தவேள் கன்னிக்கு அருள்வானோ?

                                           பொருள்
உலக நன்மைக்காக வேலினைக் கையிலேந்திய வேலவன்,விண்ணகத் தேவருக்கெல்லாம்
மேலான மாமுருகனைத் தங்கிடும் நீ அவ்வேலவனின் சுற்றம் அல்லவா!காலடி போற்றி நிற்போர்,கண்ணால் கருணை பெறுவார்:கையால் அருள்பெற்ற வள்ளியும்,தேவயானையும்,இரு பக்கத்தில் அமர,நடுநாயகமாய் உன் முதுகின் மேல் அமர்ந்த முருகனைப் பைந்தமிழ்ப் புலவர்கள் பாடும் பண்களைக் கேட்டுக் கொண்டே வானில் எழும்பி,மண்ணும்,விண்ணும் சுற்றி வரும் பெருமையைப் புண்ணிய தவ மேம்பாட்டால் பெற்ற மயிலே!முருகன் என்னும் தமிழ் மலரை நாடி,
அன்பு கொண்டு,அவனையே எண்ணி எண்ணி அவன்மீது மையல் கொண்ட பெண்ணடியாள் யான்.
காதல் நோயால் தவிக்கும் யான் கந்தன் முகம் பார்த்து,தலைவா!தலைவா!என்று நாளும் அவன்
நினைவிலே உழல்பவள்:சுற்றமும்,பிறரும் என்னை :பித்து ,என்றும்,பேய்,என்றும் திட்டி ஒதுக்குகின்றனர்: தனிமையிலே,புற்றுள் சீறும் பாம்பு போல் பெருமூச்சு அனல் மூச்சு விட்டே
காலத்தைக் கழிக்கிறேன்:கற்ற கல்வி மறந்தது:அழகுடன் வற்றித் துரும்பாய்க் கருகிற்று:
ஆயினும் அம்முருகன் நினைவு என்னை விட்டகலவில்லைஆறுமுகா! ஆறுமுகா !என்றே
இரவும் பகலும் அவனருள் வேண்டி அரற்றுகின்றேன்.இப்பிறவி பெற்ற நற்பயன் முருகனை
அடைவதே,என எண்ணி வாழும் அழகிய இளமை வாய்ந்த இப்பெண்ணிற்கு வேலவனின்
பேரருள்,மணமாலை உன் வழியே கிடைக்கும் என எண்ணியே உன்னைப் பணிந்தே ,உன்
தாள் வணங்கியே வேண்டுகோள் விடுக்கின்றேன்.என் காதல் ஈடேற,கன்னியாகுடி மாமுருகன்
பேரருள் எனக்கு  கிடைக்க பொன்மயிலே!உன்னைப் போற்றினேன்.

                                                               விளக்கம்
வேல் கரத்து .........இவ்விரண்டு வரிகளிலும் "வேல்" என்ற சொல் பலமுறை வந்து ஒரே
                                    பொருளைத் தருவதால் சொற்பொருள் பின்வரு நிலை அணி ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக