திங்கள், 3 அக்டோபர், 2016

மயில் போற்றல்

                                                நூல்
                                 கலிவெண்பா
                                 
                                மஞ்ஞை போற்றல்

உலக  வனப்பின் ஒருதனிச்  சின்னம்:
பலகலை மின்னும் பலகோடி வண்ணம்---- அலகே
அறிவுப் பொறியாம்:அருகே அமைந்த
நெறிசார்  கருவிழிகள்  :நித்திலக் கொண்டை----செறிவுடை
நீள்கழுத்து  நிர்மலன் திக்குநோக்கி  நீண்டழுந்தித்
தாள்தொழும்:தன்கைத் தளிரழகுப் பொன்சிறகால் ----வேல்தொழும்:
கூரலகு பேயரக்கர் வீழ்த்தியபோல் தான்கொத்தும்:
வீரச் சிறகோ விரிவான் பறந்தவன் ------பேர்பரப்பும்:
புன்செய் நிலத்துப் புழுபூச்சி கொத்தியுண்டு,
நன்செய் நிலமாக்கும் நன்மயிலே! விண்மயிலே!----பொன்மயிலே!

                                             பொருள்
 கன்னியாகுடி முருகன் மீது காதலுற்ற கன்னி  ஓருத்தித்  தன்காதலை
எடுத்துரைத்து,முருகனிடம் இருந்து மாலை பெற விரும்பி,மயிலைத் தூது
அனுப்ப முடிவு செயது,மயிலைப் பலவாறு போற்றித் தூதுரை ஆற்றிட
வேண்டுகிறாள்.
                                             மயிலைப் புகழ்தல்
 உலகத்து அழகிற்கெல்லாம் எடுத்துக் காட்டாய் விளங்கும் சான்றே!பலப்பல
கலைகள் ஒருங்கிணைந்த பல்கோடி வண்ணமே!உனது அலகு உன் அறிவுப்படை:
அலகின் அருகே அமைந்த நெறி காட்டும் அழகுக் கண்கள்: மின்னும் முத்துக்கள் பதித்தாற்போன்ற கொண்டை: நீண்ட உன் அழகுக்கு கழுத்து,முருகன் வீற்றிருக்கும்
திக்கு நோக்கி வணங்குவதுபோல் நிலத்தைத் தொடும்:நிமிரும்:உன் அழகுச் சிறகோ
உன்கரம்போல் செயல்பட்டு,விரிந்தும்,குவிந்தும் வேலைத் தொழும்:உன் அலகு போரிலே
கொடும் அரக்கர்களை வீழ்த்திய காட்சி போல நிலத்தைக் கொத்தும்:வானிலே பறந்து
உலகம் முழுவதும் முருகன் புகழ் பரப்பும் உன் அழகிய சிறகுகள்.புன்செய் நிலத்தை விவசாய நிலத்தைப் பாழ் படுத்தும்,புழு பூச்சிகளைக் கொத்தி உண்டு.நன்னிலமாக்கும் நல்ல மயிலே!
வான் மயிலே!பொன்னிற மயிலே!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக