செவ்வாய், 5 ஜூலை, 2016

                    செவிலி இரங்கல்

   எண்சீர்  ஆசிரிய விருத்தம்

நற்றிறம் உற்ற நலமிகு தலைவி,
    நந்தி சூழ்ந்த நான்மறை நாதன்
கற்றவர் சூழ்ந்த கன்னிமா நகரில்
   கலைமகள் பாடவும்,கணங்கள் போற்றவும்
பற்றிலாப் பற்றுடன் பரதம் ஆட்டினான்
  பார்த்தனள் பரவசம் மேலிடப் பறிகொடுத்தாள்:
உற்றனள் காதல்:உடலுளம் வருந்த,
   உறக்கமும் இல்லா உறுதுயர் என்சொல?

                    பொருள்
தலைவியின் மனநிலை கண்டு செவிலி வருந்திக் கூறுவது.
     நற்குடித் தோன்றிய நல்லவாளாம் தலைவி,ஒருநாள் கன்னியாகுடி கோயில் சென்றாள்:
அங்கு,நந்தியின் தாளமும்,கலைமகள் பாடலும்,கணங்கள் போற்றலும் கொண்ட
பேரவையில் கைலாச நாதன் மெய் மறந்து ஆசை பற்றாமலும்,அபிநயம் பற்றியும் ஆனந்த
நடனம் ஆட்டினான்:அந்த நடன மூர்த்தியைக் கண்ட தலைவி,அவனோடு ஒன்றி விட்டாள்:
உள்ளமெல்லாம் காதல் சிந்தனை,உடலும் உள்ளமும் பிரிவு வேதனை,உறக்கமும் மகிழ்வும்
துறந்த பெருந்துயருக்கு ஆளாகி நிற்கிறாள்.அவளின் நிலையை என்ன சொல்லி மாற்ற இயலும்?
எனப் புலம்புகிறாள் செவிலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக