புதன், 13 ஜூலை, 2016

பதிகம்

                          பதிகம்

               நேரிசை வெண்பாக்கள்

நாதன்காண் நாடன்காண் நாவலன்காண் நான்மறை
வேதன்காண் வேடன்காண் வேலன்காண் ------மாதவன்காண்
மாதொரு பாகன்காண் மாசிலான்காண் மாக்கன்னிக்
காதலன்காண் கைலைநாதன் தான்.

தானவர்  தேவர்கள் தாள்வணங்கும் தலைவனை
நான்முகன் நாரணன் போற்றுவர் -------கானவர்
தேனடைத் தீம்பலா கொண்டாடிக் கூத்திடுவர்
கூன்நிலாக் கன்னியான தான்.

கன்னியோ காவிரிக் கால்வாய்க் கரையது
கன்னியாம் கல்யாணிக் கண்ணளிபோல் ----பொன்னியாற்றின்
புன்னகை பூத்துக் குலுங்கும் மலர்க்கூட்டம்
மன்னவன் தாள்களில் தான்.

தாள்பணியும் தண்ணாறு தண்வயல்கள் தண்சோலை
வேளாண்மை வீரமுடன் வேலாண்மை -----நாளெல்லாம்
தோளணி ஏர்கலப்பை தெம்மாங்கு நற்பாடல்
கோள்பணிக் கன்னியான் ஊர்.

ஊரெல்லாம்   சைவமயம்:வீதிதோறும் தேவாரம்:
நீறெல்லாம் நெற்றியில்:நீள்வாழைத் ----தாரெல்லாம்
சீராக வெற்றிலை பாக்குடன் கோயிலிலே:
ஊரெனில் கன்னியே ஊர்.

ஊர்தியோ காளை உலகமே ஆடையாம்
தார்மாலை ஊமத்தை,தண்கழுத்துக் -----கார்நஞ்சு
ஆர்வமோ ஆட்டச் சுடுகாடு:ஆயினும்
பேராளன் கன்னியான்போற்  று.

போற்றாத தக்கன் பொலிவிழந்து  ஆடானான்:
தூற்றிய சுந்தரன் தோழனானான்---- கூற்றுவன்
சாற்றிய பாசம் சமரிழந்தான்:கன்னியான்
போற்றின் புகலாம் உணர்.

உணர்ந்தாரின் உள்ளமதில் உள்ளானே  கள்வன்:
உணராதார் உள்ளத்தும் தங்கி ---உணர்த்தும்
குணக்குன்று,கல்லெறி சாக்கியர் காத்தான்:
கணங்கள்சூழ் கன்னியான்  காப்பு.

காத்தான்  சிறுவன்:கனிந்தான் மலைமகள்:
கூத்தனோ   தில்லையில்:கூடலில் நூல் ----யாத்தனன்
மூத்தவன் மூவர்க்கும்:மூப்பிறப்   பில்லாதான்:
காத்திடுமே  கன்னிக்  கழல்.

கழல்பணி பக்தர் அழலினைப்  போக்கி,
உழல்துயர் நீக்கி,உளத்தில் ---மெழுகாய்
விழுப்பொருள் வித்திட்டு வேதநெறி காட்டிச்
செழுமையாக்கும் கன்னிக்  கழல்.

கழலினைப் போற்றக் கலம்பகம் யாத்தேன்:
பழவினை மாற்றிடப் பாடல் -----விழைந்தேன்:
அழுமனச் சொல்லினை அன்புடன் ஏற்க
விழுகுணக் கன்னியான தான்.

                             பொருள்

நாதன்,உலக ஆட்சி கொண்டவன்,சொல்லாற்றல் மிக்கவன்,நான்கு மறைகளாகக் காட்சி தருபவன்,
வேடனாகவும்,வேலனாகவும் விளங்குபவன்,மாதவத்தின் மேன்மையாளன்,பெண்ணரசியாம்
மலைமகளைப் பாகமாகக் கொண்டவன்,குற்றம் அணுகாக் குணசீலன்,கன்னியாகுடி மக்களின்
பேரன்புடையவன்,கைலாச நாதன் அவனைப் போற்றுவோம்.
                பிறை நிலவினை அணிந்த கன்னியாகுடிக் கைலாச நாதனை,அரக்கர்களும்,தேவர்களும்
போற்றுவர்:நான்முகனும்,திருமாலும் வாங்கிப் போற்றுவர்:காட்டில் வாழும் மக்கள் தேன்,பலா,
போன்ற பொருள்களைக் காணிக்கையாக்கிக் கூத்தாடிப் போற்றுவர்.
                கன்னியாகுடிக் கல்யாணி அம்மையின் கருணைபோல்,விளங்கும் காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால் வடகரைப் பகுதியில் அமைந்த ஊர் இது,ஆற்று நீரால் செழுமையான மலர்கள் மலர்ந்த
தோட்டங்கள் பல உள.அம்மலர்கள் எல்லாம் கைலாச நாதனை அர்ச்சிக்கப் பயன்படுகின்றன.
                நவ கோள்களும் பணிந்து போற்றும் கைலாச நாதன் திருக்கோயிலைச் சுற்றி,ஆறுகள்,
வயல்கள்,சோலைகள்,உள்ளன.உழவர்கள் ஏர் கலப்பை சுமந்தபடித் தெம்மாங்கு பாடியபடியே
விவசாயம் புரிகின்றனர்:வீர விளையாட்டுக்களும் ஆடுகின்ற ஊர் கன்னியாகுடி.
                 சைவம் நிலைத்திருக்கும் ஊர்:தெருக்கள் தோறும் தேவாரத் திருவாசகப்  பாடல்கள் ஒலிக்கும்.
நெற்றியிலேதிருநீறுபூசாதோரைஅவ்வூரில்காணஇயலாது:தேங்காய்,வெற்றிலை.பாக்கு,வாழைப்பழத்
தார்களும் வைத்துக் கைலாச நாதரை வழிபடும் மக்கள் மிகுந்த ஊர் அது.
                   கைலாச நாதனின் வாகனம் காளை மாடு: உலகையே ஆடையாக உடுத்திருப்பவன்:
ஊமத்தை மலரே கழுத்தணி மாலை:நஞ்சைக் குடித்ததால் நீல மான கண்டம் (அதனால் நீல கண்டன்
எனப்பெயர்)விரும்பி நடனம் ஆடும் இடமோ சுடுகாடு:ஆயினும் கன்னியாகுடிக் கைலாச நாதன்
பேரருள் புரியும் பெருமை மிக்கவன்.அவனைப் போற்றுவோம்.
                      சிவனைப் போற்றாத தக்கன் தலையிழந்து ஆடாக ஆக்கப் பட்டான்:அன்போடு
திட்டிய சுந்தர மூர்த்தி நாயனாரோ சிவனுக்குத் தாழன் ஆனார்:கர்வத்தால் பாசக் கயிற்றை எம்பிரானை இழுக்கப் பயன் படுத்திய கூற்றுவன் தோற்றதோடு,உதை பட்டு வீழ்த்தும் நின்றான்:
ஆதலின் கன்னியாகுடிக் கைலாச நாதனைப் போற்றின் அருள் காட்டுவான் என்பதை உணர்க.
                    இறைவனாம் சிவபெருமானை நன்குணர்ந்தார் நெஞ்சத்தில் உறையும் கள்வன் அவன்:
உணராத மாக்கள் மனத்தே புகுந்தும் மாற்றங்களைப் புரிவதிலும் வல்லவன் அவன்:புத்த மதச்
சாக்கியர் நாளும் கல்லால் சிவலிங்கத்தை அடித்தே வழிபட்டார்:அவருக்கும் அருள் காட்டியவன்
கன்னியாகுடிக் கைலாச நாதன் என்பதை உணர்ந்து போற்றினால் நம்மையும் அவன் காப்பான்.
                    சிறுவனாம் மார்க்கண்டனைக் காத்தவன்:இமவான் மகளாய்ப் பிறந்த அன்னை
கல்யாணி அம்மை மீது அன்பு காட்டியவன்:தில்லையில் ஆடும் கூத்தபிரானும் அவனே.மதுரையம்
பதியில் தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவனாக வீற்று,"இறையனார் களவியல்"என்னும் நூலை இயற்றியவன்:மூவர்க்கும் மூத்தவன்:பிறப்பும்,இறப்பும் இல்லாதவன்:அவனே கன்னியாகுடிக்
கைலாச நாதன் என உணர்ந்து போற்றுக.
                  அடியவர்களின் வறுமை,பிணி,போன்றவற்றை நீக்கியும்,துயரெல்லாம் களைந்தும்,
உள்ளத்தில் அமர்ந்து,அன்பும் அருளும் கலந்து மெய் ஞானத்தைப் பக்குவமாய் அளித்தும்,
நான்மறை,ஆகம நன்னெறிகளைப் பதித்தும் உயிர்களை நல்வழிப் படுத்தும் ஆண்டவன்
கன்னியாகுடிக் கைலாச நாதன் ஆவான்.
              கன்னியாகுடிக் கைலாச நாதனைப் போற்றிப் புகழவே 'கன்னிக் கலம்பகம்' என்னும் நூலை
இயற்றினேன்:எனது முக்கால வினைகள் மாறிட,எம்பெருமானின் புகழைப் பாடினேன்:பாடலில்
அமைந்துள்ள சொற்கள்,ஆழ்மனச்சொற்கள்:அழும் உள்ளத்தில் தோன்றிய சொற்கள்:எம்பெருமான்
திருத்தாட்களிலே இதனைப் படைக்கின்றேன்.எம்பெருமான் திருவருள் புரிக.சான்றோர்களின்
புகழுற்ற நூற்களைப் போல இதனையும் ஏற்றிடுக எனத் தலை தாழ்த்தி வணங்கி வேண்டுகின்றேன். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக