செவ்வாய், 12 ஜூலை, 2016

                 நிலை மண்டில ஆசிரியப்பா

அருளும் அன்பும் அகிலம் காக்க.
கருணையும், கனிவும் காரிருள் களைக.
வரமளி திருக்கரம் வளமெலாம் வழங்குக.
புரமெரி சீற்றம் புன்செயல் ஒடுக்குக.
தவநெறிச் சீலம் அவநெறி அழிக்க.
தவழும் சாந்தம் தனிமை வளர்க.
கூற்றுவன் கடிந்த மாற்றம் மலர்க.
ஏற்றுயர் எருதால் இன்பம் விளைக.
கருநீல கண்டம் காப்பதை உணர்க.
திருநீல கண்டர் விருப்பும் புணர்க.
செஞ்சடைக் கங்கை அஞ்சுதல் காண்க.
பஞ்சினும் மெல்லியாள்பாகம் உள்ளுக.
தலையரி தக்கன் தத்துவம் அறிக.
கலைபுரி ஆடல் கருத்தும் போற்றுக.
அலையும் மனத்தான் அழிந்தமை ஆள்க.
நிலைத்த   நீள்தவ நிம்மதி நிலைக்க.
ஆசான் மகனே அறிஞன் வணங்குக.
பூசலார் நெஞ்சக் கோயில் புகுக.
நந்தி விலகிய நந்தன் நாடுக.
தந்தையை வீழ்த்திய சண்டனைப் பற்றுக.
கனியை வென்ற கணபதி வாழ்க.
கனிமலை நின்ற கந்தன்  வாழ்க.
அணிவேல் அன்பன் இடும்பன் வாழ்க.
மணிச்சொல் வாசகர் வாசகம் வாழ்க.
அப்பர் சுந்தரர் கவுணியர்  வாழ்க.
ஒப்பிலா ஊரதில் உயர்ந்தோன் வாழ்க.
காவிரி வடகரைக் கன்னி  வாழ்க.
பூவிரி பொன்வளர் புதுமையூர் வாழ்க.
மலைமகள் கல்யாணி மாமகள் வாழ்க.
கலையூர்க் கைலாச  நாதன் வாழ்கவே.

                               பொருள்
இறைவா!அருளாலும்,அன்பாலும் உலகைக் காப்பாய்.உனது கருணையாலும்,கனிவான
பார்வையினாலும் உலகைச் சூழ்ந்திருக்கும் தீமைகள் அகலட்டும்.வணங்குவோருக்கு
வரம் அளிக்கும் தங்களின் அழகுக் கரம் வளங்களை வாரி வழங்கட்டும்.முப்புரங்களை சிரிப்பினால்
அழித்த சீற்றம் உலகத் தீமைகளைச் சுட்டெரிக்கட்டும்.தங்களின் மேலான தவக்கோலம்
உலகின் அவலங்களான நசிவு நெறியை அழிக்கட்டும்.அமைதி தவழும் சாந்த மூர்த்தியே!
உம் சாந்தம் உலகெங்கும் பரவட்டும்.அடியவன் உயிர் காக்கக் கூற்றுவனையே காலால்
உதைத்துக் காத்த பேரருள் மாற்றம் என்றும் நிலவட்டும்.அறமாம் எருதினை ஊர்தியாகக்
கொண்டவா!அறவழி இன்பம் அருளவாய் நீயே.அமுதம் வேண்டிப் பாற்கடல் கடைந்தகாலை
தோன்றிய விஷத்தையுண்டு உலகம் காத்த நீலகண்டரே!காக்கும் கடவுள் நீரேயன்றோ!முதுமை வரை
மனையாளின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தனியே வாழ்ந்த திருநீலகண்ட நாயனாரின் தவக்கோலம்
உலகறியச் செய்து இளமை நினைவுகளும் வழங்கிய இனிமை உம்மருளால் மட்டுமே நடக்கும்.
பகீரதன் வேண்டுகோள் ஏற்று வந்த கங்கையின் அகம்பாவ,கர்வச் சீற்றத்தை அடக்க,விரிசடைக்குள்
அடக்கிய காலை அஞ்சி ஒடுங்கிய கங்கையைக் காண்போர் கர்வம் கொள்வாரோ!மென்மையான
பாத மெல்லடி மலைமகளைப் பாகமாக ஏற்றதை உலகே வியந்து போற்றுகிறதன்றோ!
கடவுளை மதியாதோர் அழிவர் என்பதற்குச் சான்றாக,தக்கன் தலையையே கொய்த உம் வீரம்
உலகின் எடுத்துக் காட்டல்லவா!கலைகள் வளரவும்,ஆனந்தம் வெளிப்படுத்தவும்,தங்கள்
ஆடிய ஆனந்த நடனங்கள் மகிழ்ச்சி வெளிப்பாடல்லவா!இறைவன் என நினையாமல்
தவத்தைக் கலைக்க முற்பட்ட மன்மதன் அழிந்த சுவடு பெரியோர் போற்றாதோர்க்கு நற்பாடமன்றோ!
சனகாதி முனிவர்களுக்கு ஞான பாதம் உபதேசிக்க முனைந்து,அமைதி காத்து அமர்தலே
மௌன மொழியே,அலையா மனமே தவம் என உணர்த்தி,மன நிம்மதி அளித்தவா!ஆசானாய்
ஓம்காரப் பொருள் விளக்கிய மகனைத் தோளில் சுமந்து,வாய் பொத்தி,உபதேசம் கேட்ட தந்தையும்
தாங்களே,அறிந்தோர் போற்றும் பண்பையும் அளித்தவர்.மனதிற்குள்ளேயே ஒவ்வொரு நாளும் திட்டமிட்டுக் கோயில் எழுப்பிக் கும்பாபிஷேகமும் செய்ய நாள் குறித்த பூசலார் என்னும் நாயனாரின்
கும்பாபிஷேக நாளன்று,பல்லவ மன்னனது கோயில் கும்பாபிஷேக நாளும் ஒன்றாக,இறைவனோ
திருநின்றவூர்ப் பூசலார் மனக் கோயிலுக்கே சென்றார்.நெஞ்சம் நிறைந்த நீள் புகழ் இதுவன்றோ!
உள்ளே சென்று தரிசிக்கத் தாழ் குலம் தடுக்கக்,கோபுரம் தாண்டி நின்று இறைவன் தரிசிப்பதைப்
படுத்துள்ள நந்தி தடுக்க,தவிக்கும் நந்தனாருக்காக நந்தியை,சற்றே விலகியிரும் பிள்ளாய்,
என ஆணையிட்டுக் காட்சிதந்தஇறைவனையும்,காட்சி பெற்ற நந்தனாரின் அரும் பெருமையையும்
மனதில் போற்றுங்கள்.சிவ பூஜை செய்யும் பொழுது,இடையூறு செய்ப்பவர் தந்தை எனினும்,
அவரையும் தண்டித்த சண்டிகேச நாயனாரை வழியாகக் கொண்டு சிவனைப் போற்றுங்கள்.
உலகமே தந்தை,தாய் தான் என அவர்களைச்சுற்றி வந்து கனியைப் பெற்ற கணபதியின் உயர் ஞானம்
போற்றுங்கள்.கனி கிடைக்காத சினத்தால்,என்மலை தனிமலை அதுவே பழனி,என நின்ற முருகன்போற்றுங்கள்.அவன் வழி சென்று அவன் பணியே தன்பணி என,முருகன் அருகில் நிற்கும்
இடும்பன் போற்றுங்கள்.திருவாசகம் பாடிய மணிவாசகர் வாழ்த்துங்கள்.தேவாரம் பாடிய அப்பர்,சுந்தரர்,திருஞான சம்பந்தர் போற்றுங்கள்.நிகரற்ற ஊராய்த் திகழும் கன்னியாகுடியில்
வீற்றுள்ளகைலாசநாதன்போற்றுங்கள்.காவிரியின்வடகரைஅமைந்துள்ள,பூங்காக்களும்,பொன்மலர்ச் சோலைகளும் நிறைந்து விளங்கும் கன்னியாகுடியைப் போற்றுங்கள்.மலைமகளாம் கல்யாணி
அம்மையின் பாதங்களைப் போற்றுங்கள்.கலைமலிந்த கன்னியாகுடிக் கைலாச நாதனைப்
போற்றி,வணங்கி,நன்மை அடையுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக