திங்கள், 11 ஜூலை, 2016

                  செவியறிவுறூஉ    மருட்பா

தேனார் நறுங்கொன்றைத் தீஞ்சடை போற்றிடு:
மானேந்தி மாப்புகழ் ஓதிடு ------கானார்நது
ஆடும் ஆட்டம் அகிலம் ஆட்டும்:
தேடும் பிரமன் தேடும் திருமால்
காணா அடிமுடி அன்பால் கண்டிடு:
வாணாள் மேன்மை வளமுடை வாழ்வு
குருளைகள் காக்கத் தாயாய் ஆனவன்
கருணை மேலிடக் கன்னியான் அருள்வனே.

                              பொருள்
 தேன் சிந்தும் கொன்றை மலரணிந்த சடையானைப் போற்றிடுவாய்:
வன்குரல் காட்டும் மானையும் ஒரு கரத்தில் தாங்கியோன் உயிர்களிடத்தில் காட்டும் அன்பைப்
போற்றிடு:சுடுகாட்டில் அவன் ஆடும் ஆட்டம் மூவேழ் உலகையும் ஆட்டிப் படைக்கும் என்பதை
உணர்ந்து போற்று:அண்ணாமலையானின் அடியைத் தேடித் திருமாலும்,முடியைத்தேடிப் பிரமனும்
சென்று,இன்றுவரை காண இயலாது தவிக்கின்றனர்:அந்த ஜோதியின் அடியைப் பணிந்துபோற்றிக்
காண்:முடியைப் புகழ்ந்தும்,பாடியும்,ஆடியும் காண்: பன்றிக் குருளைகளைக் காக்கத் தாயாகிப்
பாலூட்டிய கன்னியாகுடிக் கைலாச நாதப்பெருமகன் கருணை காட்டுவான்:வாழ் நாளில் மேன்மையும்,வளமான வாழ்வும் அளித்திடுவான்.ஆதலின் அவனைப் போற்றுக.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக