வியாழன், 9 ஜூன், 2016

குறம்

                        குறம்
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரியசந்த  விருத்தம்

கன்னியதில் சென்று கார்குழலைக் கண்டு,
      கரந்தொட்டுக் கல்யாணக் குறிசொன்னேன் அம்மே!
மன்னுமலை பொன்னிமலை கைலாச நாதன்
     மன்னவனே என்றுரைத்த மலைக்குறத்தி நானே.
அன்னையளி அருமுறத்து நெல்லினிலே பொன்னொளி
    அந்தச்சுவர்ப் பல்லிதரு சொல்லொலி ஆனந்தம்
மின்னுதம்மா!பவனிகண்டு மனதிலுறை கன்னியான்
   மலர்மாலை மணநாணாம் :மங்களமே மங்கைக்கு.

                                   பொருள்
தலைவன் மீது காதலுற்று வருந்தும் தலைவியின் துயர் களையக் குறி பார்த்தல்;குறத்தி
கை பார்த்துக் நல்ல செய்தி சொல்லுதல் குறம் எனப்படும்
     கன்னியாகுடி என்ற ஊருக்குச் சென்ற நான் ,அங்கு கார்மேகம் போன்ற கூந்தல் கொண்ட
கல்யாணி அம்மையின் கரம் தொட்டுக் குறி சொன்ன குறத்தி நான்தான் அம்மே!
மன்னும் பொன்மலைக் கைலைமலைக் கடவுள் கைலாச நாதனே கல்யாணி அம்மைக்குக்
கணவணாக வரப்போகிறான்,என்று மங்களக் குறி சொன்ன குறத்தி நான்.இன்று இதோ
இந்தத் தலைவிக்கும் குறி சொல்லப் போறேன்:அதுக்குள்ள அம்மா முறம் நிறைய நெல் எனக்குக்
கொடுக்க எடுத்து வராங்க.அந்த நெல்லிலே பொன்னொளி வீசுது:மங்கள ஒளி அது:
அதோ தெற்குப் பக்கத்துச் சுவரிலே பல்லி சொல் சொடுக்குது:இனி எங்கும் மகிழ்ச்சி தான்.
ஆனந்த பவனிவந்த தலைவன் கைலாச நாதன் மீது மையலுற்று,மனத்தில் பதித்த மங்கைக்கு
மணமாலை மண நாணாய் வரப்போகிறது:தலைவிக்கு இனி மங்கலம் கைகூடும்.என்று
குறி சொல்கிறாள் குறத்தி.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக