திங்கள், 20 ஜூன், 2016

                        இரங்கல்

                   வெண்கலிப்பா


மனத்தகத்து மறைவானை,மறையாத மனத்தானை,
வனத்திடையே புணர்ந்தானைப்,புணராதகோ வணத்தானை,
சினத்தாலே சிலையழித்துச் சிலைக்கருளும் சினத்தானை,
பனிக்காலப் பழியேற்றுப் பழிநிலவாப் பனியானை,
முனிபோற்றும் மூதுரையான்,முதுநிலவு முனியானை,
கனிபோற்றக் கணபதியும்,கணம்போற்றக் கனிமலையும்,
அணியங்கம் அலைத்தலையும் அலைபாயா அணியானை,
மணிமுத்தாள் மனங்கொண்டாள்:மணங்கொண்டால் மணியாவாள்.
பிணிதீர்க்கும் கன்னியானோ கன்னியவள் பிணிபோக்கான்?
கணமாலை கரந்தந்து கரமேற்கக்  கணநாதன்.
மணமாலை மங்கையவள் மங்குகுண மனம்மாற்றும்:
தணலேந்தி தண்குணமே தன்குணமாம்
குணமெட்டுக் குணத்திலே குணக்காதல் சால்பு.

                                     பொருள்
 தலைவியின் காதல் கை கூடா நிலை கண்டு,செவிலி இரங்கிக்  கூறுதல்
     
தலைவியின் மனத்திலே ஒளிந்திருப்பவன்,அவள் மனத்தை விட்டு  மறையாதவன்,
காட்டுச்சோலையிலே தலைவியைப் புணர்ந்தவன்,ஆயினும் எந்தப் பெண்ணையும்
விரும்பாத பிட்சாண்டவன்:
சினத்தால் மன்மதனை எரித்தவன்:ஆயினும் சிலை போன்ற இரதிக்குக்  கருணை காட்டியவன்:
கார்காலத்தில் தலைவியைப் பிரிந்து பழிக்கு ஆளானவன்,ஆயினும் குற்றமற்ற கைலை
மலையில் வீற்றிருப்பவன்:
ஆசையில்லா ஞானத்தை முனிவர்களுக்கு அருள்பவன்,ஆயினும் ஆசை நிலவின் மீது
கோபமுறாமல் தலையில் ஏற்றவன்:
கனியைப் பெறப் பெருஞானவழி தேடிய கணபதியும்,கனியால் சினந்து,தனியான பழனி
ஆண்டியும்,மலைமகளும்,தலையில் கங்கையும் கொண்டு விளங்கினாலும்,சஞ்சலம் இல்லாத
யோக நிஷ்டை உடையவன்:
 இத்தகைய குணம் கொண்டவன் மீது காதல் கொண்டாள் தலைவி,தலைவன் மனம் இவளை
ஏற்றால் இவள் மேலும் அழகு பெறுவாள்:
நோய் தீர்க்கும் கன்னியாகுடிக் கைலாசநாதனோ தலைவியின் மன நோயைத் தீர்க்கக் காலம்
கடத்துகிறான்:
வேத மந்திரங்களை மாலையாக அணிந்திருக்கும் ஈசன் இவளுக்கு மணமாலையை அருளின்,
இவளது துயர் நீங்கும்,மகிழ்வும் பெறுவாள்:
நெருப்பைக் கரத்திலே தங்கியவன்:ஆயினும் குளிர் கருணை கொண்ட குணம் உடையவன்:
எட்டுக் குணங்களைக் கொண்ட எம்பிரான் காதல்குணமும் கொன்டு இவளுக்கு அருளல்
வேண்டும்,என,செவிலி இரங்கிக்  கூறுகிறாள்.
                                                      விளக்கம்
இப்பாடலில் அடிகளில் வந்துள்ள சொற்கள் வேறுபட்ட பொருள்களிலும்,மாறுபட்ட சந்தத்திலும்
வந்தமை காண்க,  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக