செவ்வாய், 21 ஜூன், 2016

போற்றுக

                                          போற்றுக
     
                       பதினான்கு சீர் ஆசிரிய  விருத்தம்

சால்பு கூறும் சாத்திரச் சங்கரன் சன்னதி சார்ந்து போற்றிடின்
      சங்கடச் சுவடும்,சலச்சுழி வாழ்வின் பிணித்திடு துயரும் நீங்கிடும்:
நால்வர் பாடல்,நலமெலாம் காட்டும் நடந்த நிகழ்வோ நிற்குமே
     நாளும்:நாடிய நங்கை நற்பால் ஞான  நலப்பால் அளித்தமை,
மால்மண மயக்கம் மறைத்து,மறைகழல் காட்டித் தோழமை கொண்டமை,
     மாறிய சமயம் மாற்றி நோயில் உழற்றி,மாக்கழல் தீக்ஷை
சீலப்  பரிகளாய்ச் சிறுநரி ஆக்கிச் சிரிய வாசகம் ஏற்றமை,
     சீர்மிகு கன்னியான் செம்மைச் சால்பாம்:சீறடி போற்று.

                                      பொருள்
 முழுமுதற் கடவுள் சங்கரனே,எனச்சாத்திரங்கள் போற்றும்,சிவனின் சன்னதி,அடைந்து,
அவனை மனமெல்லாம் நிறுத்திப் போற்றினால்,துயர்கள் தோன்றா நிலையும்,நீர்க்குமிழி
போன்ற வாழ்வின் எதிர்ப்படும் இன்னல்களும் மறைந்திடும்:இதற்குச் சைவ சமயக் குரவர்கள்
நால்வரின் பாடலும்,அவர்கள் இறைவனிடம் பெற்ற அருள் ஆட்கொள்ளலுமே சான்றாக
விளங்கும்.
        சீர்காழிக் குளக்கரையில் தந்தையைக் காணாது அழுத ஆளுடைய பிள்ளை முன் தந்தையாய்த்
தாயாய் முன் வந்து ஞானப்பால் வழங்கி அருள்காட்டிய அற்புதம்:
       திருமண நாளிலே,ஓலை காட்டி,மணமகன் தன்னடிமை,எனக்கூறி,பித்தன்,பேயன்,என்றெல்லாம்
திட்டவைத்து,வெண்ணெய் நல்லூரிலே சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட அற்புதம்,
      சமண சமயம் சார்ந்த மருள்நீக்கியாரை,ஆட்கொள்ள,அவருக்குச் சூலை நோய் கொடுத்து,
அதனைத் தானே தீர்த்து வைத்து,அப்பராய்,நாவுக்கரசராய்மாற்றிய அற்புதம்,
   பாண்டியன் அமைச்சரான திருவாதவூரருக்காக நரிகளைப் பரிகளாக்கியும்,பிட்டுக்கு மண்
சுமந்தும்,அவரை மாணிக்கவாசகராக்கி,அவர் வாயால் திருவாசகம் கேட்டனுபவித்த அற்புதம்.
  நால்வரின்மேன்மை வளர நல்லருள் புரிந்த கன்னியாகுடிக் லைலாச நாதன் திருத்தாள்
வணங்கிப் போற்றின் வையகம் வாழும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக