அழகில் மயங்கல்
வெண்கலிப்பா
பணிநாக அணிநோக மணியம்மை மணவாளா!
பழிசூழ விழிதூற்ற அழிநெஞ்ச மழகளிறே!
மணியார
மணமாலை மகிழ்வோங்க அருளீரோ!
மதிசூடி மலர்சூடி மனம்நாடி மயக்கலாமோ?
தணியாத
தவிப்பெய்தி தளிர்மனங்கள் துடிக்கலாமோ?
தனித்தேரோன் நுனியம்புப் பிணிக்காய்ச்சல் தகிக்கலாமோ?
நனியழகில் நடையழகில் நகையழகில் நலுங்குற்றேன்:
நல்லூர!தொல்முறையோ?சொல்.
பொருள்
கன்னிக் கைலாச நாதனின் அழகில் மயங்கி மனதைப் பறிகொடுத்த
தலைவியின் இரங்கல்.
மாலையாகவும்,அணியாகவும் சிவபிரான் அணிந்திருக்கும் நாகங்கள்,
பார்வதியம்மை,பாதி உடல் பெற்று,நாக மணியாய்
ஒளிவீசி,அருள் பாலித்த
திறன் கண்டு நாணிக் குறுகின: மலைமகளின் மணவாளா!
உன்னைக் கண்டு,உன் அழகில் மயங்கிய மங்கைகளின் மண
விருப்பம்
நிறைவேறாமையால் பழிக்கு ஆளாகி,காதல் விழிகள்
எல்லாம் தூற்றவும்,
மணமாலை கிடைக்காமையால் இழிந்த நெஞ்சங்களைக்
கொண்ட மங்கையர்
மனத்தில் தங்கிய இளம் களிறு போன்றவனே!
உன்னையே நினைந்து தவிக்கும் எனக்கு மணமாலை நல்க மாட்டீரோ?
காதலை வளர்க்கும் நிலவையும்,மலரையும்
சூடியிருக்கும் நீ மங்கையர்
மனத்தால் சூட்டப்படும் நீ வீணாசைகளைவளர்த்து
மயக்கல்முறையாகுமோ?
உன்னையே விரும்பும்
மங்கையர் அடங்காத ஆசையும்,தவிப்பும் கொள்ள
நீயே காரணம் அன்றோ?
கிளித் தனித் தேரில் வரும் மன்மதனின் மலரம்பு
நுனி வருடி,காதல் நோய்
என்னும் நெருப்பு கொண்டு சுடுகிறதே!காரணம் நீயே
அல்லவா!
உனது நடை அழகிலும்,புன்சிரிப்பு
அழகிலும்,மேனியழகிலும் நெஞ்சத்தைப் பறிகொடுத்தேனே!
நல்லூராம் கன்னியாகுடி நாத!எம்மை இப்படித்
தவிக்கவிடுவது முறை ஆகுமோ?சொல்வாயாக,,எனத் தலைவி புலம்புகிறாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக