வெள்ளி, 3 ஜூன், 2016

ஊசல்

                          ஊசல்


கைலாய  மலைகூடக்  கடிப்பொழுதில்  நாடிடலாம்:
         கைலாசர்  அருள்கூடக்  கால்வணங்கிப்  பெற்றிடலாம்:
கையைந்தோன் கரவேலன் கண்டுபோற்றிப் பணிந்திடலாம்;
        கைகாத்துக் கரம்புரக்கும் கண்ணருளாள் போற்றிடலாம்:
கைபற்றிக் கால்குவிக்கும் கார்ச்சோலைக கன்னியரே!
        கைம்மலர் தொட்டுதொட்டுக் கண்ணூஞ்சல் ஆடிடுக:
கைலாசக் கன்னியான் கருணைபாடி ஆடிடுக:
        கைலையருள் கன்னித்தமிழ் பாடிப்பாடி ஆடுகவே.

                                          பொருள்
  கன்னியாகுடியின் சோலையிலே ஊஞ்சல் ஆடும் பெண்களே!ஆடுங்கள்:ஆனந்தக் கூத்தன்
புகழ் பாடி ஆடுங்கள்.ஆடும்பொழுது ஆற்றும் அழகிய தமிழ்ப் போற்றலால் நொடிப்
பொழுதில் கைலை  மலையைத் தரிசிக்கலாம்: ஆங்கு வீற்றிருக்கும் இறைவன் பாதங்களை
வணங்கலாம்:விநாயகப் பெருமானையும்,வேல்முருகனையும் கண்டு போற்றிடலாம்:
அபயக் கரமும்,அருள்நோக்கும் கொண்ட கல்யாணி அம்மையை வணங்கிடலாம்:
மலர்க் கையால் தொட்டு ஊஞ்சல் ஆட்டும் பெண்களே!உங்கள் மன வேகமும்,ஊஞ்சல்
வேகமும் உங்களை உயர் நிலைக்கு அழைத்துச் செல்லும்:ஆதலின்,கன்னியாகுடியில்
வீற்றிருக்கும் கைலாச நாதன் புகழைப் பாடிப்பாடி ஆடுங்கள்:இறையனார் அருளிய
கன்னித் தமிழைப் பாடியபடி ஆடுக பொன்னூஞ்சல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக