வெள்ளி, 24 ஜூன், 2016

மடக்கு

                              மடக்கு

       எண் சீர் ஆசிரிய விருத்தம்

கூற்றக்  கொடுமை குறைத்த வெள்ளையானைக்
        கூடி வணங்கும் குலவெள்ளை  யானை:
மாற்ற  மாவுரு  மாலழி  மூர்த்தியை,
         மாறா  மனமுனி  மாலழி  மூர்த்தியைச்
சாற்றும் பேரலைச் சலம்வாழ்  சடையனைச்
         சாத்திரம்  போற்றுநல் லசலம்வாழ் சடையனை,
நாற்ற  நறுங்குழல் நற்பாகக் கன்னியானை,
         நாமும் நாடுவோம் நல்லூர்க் கன்னியானை.

                                பொருள்
ஒரு பாடலில் வந்த சொல்லே மீண்டும் வந்து,பிரித்து,பிரிக்காமலோ வேறு வேறு பொருளைத்
தருவது மடக்கணியாகும்.
       கூற்றுவனின் கொடுமையான (மார்க்கண்டேயன் உயிரைப் பறிக்கும் கால் சிவனையே
பாசக் கயிற்றால்கட்டி இழுத்தது)செயல் ஆற்றி,சிறுவன் உயிர் பறித்த செயலால் சினந்து
இயமன் வாழ்வைக் குறைத்த,வெண்மையான உள்ளம் கொண்டவனை,நாடி.
     வணங்கிப் போற்றும் இந்திரனின் ஊர்தியான வெண்மை நிறம் கொண்ட யானை.
   இரண்யணைக் கொன்ற நரசிங்கப் பேருரு ,ஆணவத்தால் உலகையே அழிக்க முற்படச்
சரபப் பறவையாய் மாறி,நரசிங்க மாலை அழித்த சிவன்;
      ஞான வழி தெரியாமல் தவித்த சனகாதி முனிவர்களுக்கு.அவர்தம் மயக்கம் போக்கி
நன் ஞானம் வழங்கிய தெட்சிணாமூர்த்தி.
      கர்வமுடன் பேரலைகள் பொங்கி வழிய சீற்றமுடன் வந்த கங்கையைத் தன் சடைக்குள்ளே
அடக்கியவர்:
     ஆகமச் சாத்திர நூல்கள் எல்லாம் போற்றி வணங்கும் கைலைமலையிலே வீற்றிருக்கும்
செஞ்சடைக் கடவுள்:
   நறுமணம் மிக்க குழலுடையாள்,மலைமகள் அவளைப் பாதிப் பாகம் கொண்டவன்:
  நல்லூராம் கன்னியாகுடியில் அருள் பொழியும் கைலாசநாதனைநாமும் வணங்கிப்
போற்றுவோம்.

                                                         விளக்கம்
முதல்வரி ....வெள்ளையானை,என்றும்,வெள்ளை+யானை என்றும் பொருள் கொள்ள வேண்டும்.
இரண்டாம வரி...மால்  என்பதற்கு,திருமால்,என்றும்,மயக்கம் என்றும் பொருள்.
மூன்றாம் வரி...சலம்=தண்ணீர் என்றும்,  அசலம்=மலை என்றும் பொருள்
நான்காம் வரி....கன்னியான்=ஒருபாகம் கன்னியைக் கொண்டவன் என்றும்,
கன்னியாகுடி வீற்றிருப்பவன் என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக