வியாழன், 23 ஜூன், 2016

தலைவி இரங்கல்

                தலைவி இரங்கல்

          எண் சீர் ஆசிரிய விருத்தம்

போற்றாச் சாக்கியர் பொன்னடி பெற்றார்:
      போற்றிய புதுக்கஜம் காவலில் உயர்ந்தது:
நாற்றச் சந்தன நறுங்கை மூர்த்தியும்,
    நான்மாடக் கோயில் நன்மனப் பூசலாரும்,
ஏற்றீர் எழிலுடைக் கன்னி ஈசனே!
       ஏனோ என்மீது இரக்கம் தவிர்த்தீர்!
கூற்றாய்க் கொல்லும் மாற்றான் மலர்வில்;
     கூற்றம் கொன்றீர்!கூற்றும் ஆனீரே.

                                 பொருள்
தலைவனிடமிருந்து மாலை பெற ஏங்கும் தலைவி,மனத்துள் புலம்பி இரங்குதல் .
     மாற்று மதத்தில் இருந்த சாக்கிய நாயனார் வழியிலே சிவலிங்கம் கண்டு,அதனைப்
போற்றாதவர் போல் செங்கல்லை எறிய ,அக்கல்லையே மலராகக் கொண்டு,அவருக்கு
அருள் பொழிந்தீர்!
      காவிரியில் துதிக்கை வழியே நீர் சுமந்து வந்து நாள் தவறாமல் பூஜித்த யானைக்கு,
நற்கதி வழங்கினீர்!திருவானைக்கா,என அவ்வூரும் உயர்ந்தது:
    இறைவனுக்குச் சாத்தச் சந்தனம் அரைத்துக் கொடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்ட மூர்த்தி நாயனார்,சந்தன்க்கட்டை இல்லா நிலை ஏற்படத் தன் கையையே கட்டைபோல்
அரைத்துக் குருதி வழிந்த நிலையிலும் விடாது பணி புரிந்தவருக்கு அருள் காட்டினீர்!
     மனமே கோயிலாய் வரைபடததோடு நாளும் உருவாக்கி வந்த பூசலாரின் குடமுழுக்கு
நாளிலே,மன்னன் கட்டிய கோயிலை மறந்து,திருநின்றவூர் நடந்தீர்!பூசலாருக்கு அருள்
புரிந்தீர்!
    எழிலுடைக் கன்னியாகுடி ஈசனே!இவர்களுக்கெல்லாம் கருணை காட்டிய கண்கள் என் மீதும்
சற்று கருணை கொள்ளக் கூடாதா?
  கூற்றுவன்போல் மலர்வில்லால் மன்மதன் என் உயிரை,மனத்தை வதைக்கிறான்:கண்மலரால்
காதல் கருணை காட்ட மாட்டீரோ?கூற்றுவனையே காலால் உதைத்து அழித்த நீர் இன்று
என்னைக் கூற்று உருவெடுத்து அழிப்பதை விட்டு விடும்:அருள் பொழிவீராக. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக