புதன், 15 ஜூன், 2016

வியப்பு

                       வியப்பு

    எண்சீர் ஆசிரிய விருத்தம்

காக்கும் கரத்தால் காமனை அழித்தாய்:
       காதலில் கார்மால் கவினில் கலந்தாய்!
ஆக்கும் அறிவே அருந்தவம் என்றாய்:
        ஆடலில் மகிழ்ந்து அம்பலம் ஆடினாய்!
நீக்கும் பற்றே நிம்மதி என்றாய்:
      நீங்காப் பாதி நிமலைக் களித்தாய்!
தூக்கும் திருவடித் தூய்மைக் கன்னியா?
       துலங்கா வியப்பு,நலங்காண் தத்துவம்.

                                    பொருள்
     அபயக்கரம் கொண்ட ஐயனே!நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்த நீ
அமுதம் வழங்க வந்த மாலாம் மோகினியோடு கலந்தது வியப்பன்றோ!
அமைதித் தவமே அறிவின் ஆக்கம் என்று சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த நீ
ஆர்ப்பாட்டம் மிக்கு அம்பலங்களில் ஆடி மகிழ்கிறாய்:
பற்றை விடுங்கள் என உபதேசித்த நீ பாதி அங்கமாய்ப் பார்வதி அன்னையைக்
கொண்டுள்ளாய்:ஆடும் நடராசனாய்க் கன்னியாகுடியில் காட்சி தரும் கைலாச நாதப்
பெருமகனே!உனது செயல்கள் ஆய்வுக்கு உட்படாத வியப்பன்றோ!நலவழி
மேற்கொள்ளும் உனது  தத்துவம் வியப்பினும் வியப்பாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக