செவ்வாய், 10 மே, 2016

பறவை விடு தூது

                                பறவை விடு தூது

                     எண்சீர் ஆசிரியச் சந்த விருத்தம்

காக்கும் கடல்வேலி கனைக்கும் கடல்சீற்றம்
           காத்திடும் கடும்பசி காக்காத கடுங்குரல்
ஊக்கமாய் உறுமீன்கள் தேக்கமாய் சிறுவட்டம்
          ஊர்ந்திடுமே ஊனுணவாய்த் தேர்ந்திடும் பறவைகாள்!
ஏக்கமாய் ஏங்கியே தீர்க்கமாய் மோகித்து
         ஏகனவன் இனியசுகம் ஏந்திழையாள் வேண்டுவதைத்
தாக்கலாய்க் கன்னிசென்றுநோக்கமது தானறிந்து,
        தார்மாலை வாங்கிவந்து தழல்துயரை மாற்றீரோ!

                                   பொருள்
   தலைவியின் காதல் துயர் கண்டுக் கடல் பறவைகளைத் தூதாக அனுப்புகிறாள் செவிலி.
      உலகைக் காக்கும் வெளியான கடற்கரையில்,அலைச்சீற்ற மாலைநேரம் கடும்பசி போக்கிக்கொள்ள கடுமையாய்க் குரல் எழுப்பி,கடல்நீர் மேல் வட்டமிடும் மீன்களை விட்டுவிடாமல்
அலகால் பற்றி,உண்டு மகிழும் பறவைக் கூட்டங்களே!கன்னியாகுடிக் கைலாசநாதன் மீது
காதலுற்று,அவனையே நினைந்து,ஏங்கி அவனோடு இணைந்து சுகம் காண,விரும்பும்
இந்தத் தலைவியின் துயரை மாற்ற மாட்டீரோ?இவளுக்காகக் கன்னி நகர் சென்று,கயிலை
நாதனின் எண்ணம் அறிந்து,தக்க சமயத்தில் இவள் காதலை எடுத்துரைத்து அவனணி
மலர் மாலையை வாங்கிவந்து அளித்து,இவள் துயரை மாற்றுங்களேன்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக