ஞாயிறு, 15 மே, 2016

மாலை

                                  மாலை
        எண்சீர் ஆசிரியச் சந்த விருத்தம்

மணித்தூறல் முத்துற்று மண்குளிரும் மாலை;
       மலர்க்கொடி புணர்ந்து,மதிலேறும் மாலை
தணியாத காதலில் தணல்பற்றும் மாலை
        தஞ்சமாய் மஞ்சத்தில் கொஞ்சும் மாலை
கணைக்கரும்பன் வில்லிலே கதைசொல்லும் மாலை
      கருணையிலாக் கன்னியான் பிரிந்துசென்ற மாலை
பிணிகண்டு பெற்றோர் பேசியேசும் மாலை
      பித்துற்றுப் பேயனிடம் பிணையான மாலை.

                                   பொருள்
 பொழுது கண்டு புலம்பும் தலைவி.
       முத்து முத்தாய் விழும் மழைத் துளிகளால் உலகு குளிரும் மாலை நேரம்:
மலர் மலர்ந்த கொடிகள் ஒன்றோடொன்று பிணைந்து மதிற்சுவரைப் பற்றி,மேலேறும் மாலை;
தலைவனைப் பிரிந்த தலைவியரின் தணியாத காதல் மேலும் ஆசைத்தீ பற்றிடத் துடிக்கும் மாலை;
இணைந்திருக்கும் காதலர்,மஞ்சத்தையே தஞ்சமாய்க் கொண்டு கொஞ்சி மகிழும் மாலை;
கரும்பு வில்லாளன் மன்மதன் வில்லிலே மலரம்புகள் தொடுத்துப் புத்தம் புதிய கதை கூறும் மாலை;
காதலில் தழைக்காமல் இரக்கமின்றி,என்னை விட்டு,அந்தக் கன்னியாகுடிக் கைலாசநாதன்
பிரிந்ததால் துயர் தரும் மாலை; எனது பசலை நோய் கண்டு,பெற்றோரும் ஊராரும் என்னை இகழ்ந்து
பேசும் மாலை நேரம்.பேய்களோடு  வாழும் பேயனிடம்,இரக்கமில்லாப் பேய் போன்ற  குணமுற்ற
கன்னியானிடம் மையல் பித்துற்று ,பித்து தெளிய மருந்தாக மாலை வேண்டி வருந்துகின்ற மாலை நேரம்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக