வெள்ளி, 6 மே, 2016

பாண்

                                       பாண்
            இரண்டு எண்சீர் ஆசிரியச் சந்த விருத்தம்


பரிசுவேண்டிப்  பைந்தலைவன் பழமைகாட்டும் பாணனே!
        பண்பில்லாப் பரிவுமில்லான் பற்றுச்செய்தி பேசாதே.
விரிநிலவு வியனிழலில் வேட்கையுற்றுக் கூடிவிட்டு 
      விந்தைசுகம் என்றுரைத்து அந்தோஅவன் மறைந்தானே!
நரிகளையே பரியாக்கிய நாற்றகுணம் நாடறியும்;
     நலமோகினி உளக்காதல் ஊரெல்லாம் பேசிடுமே;
சுரக்கங்கை தலையேற்றுச் சொந்தமுற்ற சுந்தரன் 
     சுத்தசக்திப்  பாதியுடல் சித்தாந்தச் சொக்கனன்றோ!

பரிவுகாட்ட ஆரூரில் பண்ணிற்கு நடந்தவன் 
      பகலிரவாய்ப்   புணர்ந்தசுகம் அகமதிலே மறந்தானே.
உரிகாக்கும் பானைபோல் உயிர்காத்த தாயிடமே 
      உறுகாதல் மறைத்திட்டேன்;உளமார நொந்திட்டேன்.
அரிதான அருந்தமிழால் ஆற்றவந்த பாணனே!
       அரன்கன்னி உறவுபோதும்;அதுபற்றி மறந்திட்டேன்.
எரிமனத்தில் வெறிதாழ்த்தி இறைபணிக்கு அர்ப்பணிக்கும் 
      எழில்கொண்டேன்; என்னில்லம் விட்டுநீயும் ஏகிடு.

                                                     பொருள் 
    தலைவியின் சீற்றத்தைத் தணிக்கத் தலைவனது செய்தி கொண்டு வந்த பாணனிடம் 
தலைவனது,குறைகளைச் சுட்டியும்,அவனோடு இனி உறவில்லை என்பதையும் தலைவி 
விளக்குவது.பாண் ஆகும்.

       தலைவன் தந்த பரிசினைப் பெற்று, மகிழ்ந்து, தலைவனின் புகழ் பாடும் பழமை 
நிகழ்வுகளைக் கூறும் பாணனே! தலைவியின் உள்ளம் அறியும் பண்பில்லாதவன்,
தலைவிமீது பரிவும் இல்லாதவன் உன் தலைவன். அவனைப்பற்றிப் பேசாதே.
வானக்கூரையில், வட்டநிலாக்குளிர்வில் என்னோடு இணைந்தும், இன்பம் பற்றிப் 
புகழ்ந்தும் பேசிய அவன் என்னைத் தனியே விட்டுவிட்டு மறைந்து போனான்.
மதுரையில் வாதவூரடிகளுக்காக நரியைப் பரிகளாக்கிய மாயவித்தையை நாடறியுமே.
மோகினியாய் அமுதம் அளிக்க வந்த திருமால் மீது மோகம் கொண்டதை உலகே பேசுமே.
பகீரதனுக்காக வந்த தேவகங்கையைத் தலையிலே ஏற்றவன், கல்யாணி அம்மைக்குப் 
பாதியுடல் தந்ததை உலகே அறியுமே.
          திருவாரூர்த் தேரோடும் வீதியில்,தனது அடியவன் சுந்தரமூர்த்தி நாயனாருக்காகத் 
அவரது காதலி வீடு நோக்கித் தூது சென்றவன்,பகலிரவாய் என்னோடு கலந்தஉறவை மட்டும்  
மறந்துவிட்டானே!தயிர்ப் பானையைத் தாங்கிக் காக்கும் உரிபோல என்னைக் காத்துவரும் 
அன்னையிடம் கூடச் சொல்லாமல் மறைததேனே ,இன்று மனம் நொந்து நிற்கிறேன்.
 அருந்தமிழ் காட்டி,அருஞ்சொல் கூறி,என்னைச் சமாதானப் படுத்த வந்த பாணனே!
உன் தலைவன் கன்னியாகுடிக் கைலாசநாதனின் மீது மையலுற்ற உறவை நான் மறந்துவிட்டேன்.அலைபாயும் மனத்தை அடக்கி,ஆண்டவன் பணி செய்ய முற்படப் 
போகிறேன்.என்முன் நிற்கவேண்டாம்.போய்விடு பாணனே!

      
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக