வியாழன், 5 மே, 2016

புறம் காட்டல்

                      புறம் காட்டல்

                நேரிசை ஆசிரியப்பா

மன்னும் மண்ணிசைக் கன்னி மாக்குடி 
பொன்னும் பொருளும் போகமும் கொண்ட 
மன்னவன் ஊரில் மங்கை உன்னிடம் 
கன்னல் கரும்பு வில்லிடம் தோற்றேன்;
பண்ணும் இசைக்குயில் மொழியில் தோற்றேன்;
வெண்ணிலா நன்முகம் கண்டுநான் தோற்றேன்;
திண்ணிய இருகனி திரண்டிடத் தோற்றேன்;
பெண்மைப் பரப்பில் பெரிதும் தோற்றேன்;
மண்ணெலாம் வென்றும் மகிழ்வாய் உன்னிடம் 
மறமது மறந்து,புறமது கண்டேன்;
திறனுடைத் தித்திக்கும் தேனே!
புறமதும் புன்னகை மின்னலுக்குப் பரிசே.

                             பொருள் 
   புறம் காட்டல் வீரத்திற்கு இழுக்கு.ஆயினும் மங்கையிடம் புறம் காட்டல் 
மகிழ்வையே தருமன்றோ!
      உலகின் பெருமை மிக்க கன்னியாகுடி என்னும் ஊரில் பொன்னைப் பொருளைப் 
போகத்தை வாரி வழங்கும்,கைலாசநாதப் பெருமகன் வீற்றிருக்கும் ஊரில், வாழும் 
அழகிய பெண்ணே!வீரனான நான் உன்னிடம் பலவாறு தோற்றுப் போனேன்.
வில்லெடுத்தாய் சரண் அடைந்தேன்;வேனில் மன்மதன் கண்டும் பணிந்தேன்;
இசைபோன்ற குரல் வளம் கண்டும் தோற்றேன்;நிலவன்ன முக வசீகரத்தில் மயங்கி 
நின்றேன்;என்முன் திரண்டெழுந்த இரு கனிகள் இன்பநுகர்வில் பணிய வைத்தன;
இன்பப் பரப்பு மனக்கண் தோன்ற மதி மயங்கி விழுந்தேன்;நாடெலாம் வெற்றி கண்ட 
நான் நங்கை உன்னிடம் உள்ள போர்ப்படைகள் முன் நிற்க முடியாமல் புறம் காட்டித் 
தோற்று நின்றேன்;தித்திக்கும் தேன்போன்ற பெண்ணே!எனது தோல்வி உனது 
புன்னகைக்குப் பரிசாகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக