புதன், 18 மே, 2016

இடைச்சியார்

                                      இடைச்சியார்
                    ப  றொடை வெண்பா
                       

சிவனவன் சிந்தை மகிழச் செங்கண்
நவமலரால் போற்றியோன் நாளும் ====தவமாய்
உவந்துவந்துதோன்று உயர்குடிச் சான்றீர்!
குவளைக்கண் பார்வை,குவலயம் தாங்குமோ?
ஆநிரை காத்து,கா,நிறை வாழ்வதும்
மாநிரை மேய்த்து,மகிழமுது பெற்றிடுவீர்!
மோரும் தயிரும் முதுகண்ணன் வெண்ணையும்
கார்கால வேர்க்காதல் கண்ணாலே நல்குவீர்!
கன்னிவந்தீர்!காண்போர் கலக்கம் வளர்த்தீர்!
பொன்னிடைப் புத்திடைப் போரிடைப்  பேரிடைச்சீர்!
மண்ணிடை மின்னிடை நண்ணிடை நாடினேன்,
கண்ணிடைக் காட்டுவீர்;கா   தல்

                                 பொருள்
  ஆநிரை மேய்க்கும் இடையர் குலப் பெண்ணின் அழகில் மயங்கிக் காதல் வேண்டும்
களிமகன் கூற்று.
     சிவபெருமானைப் பூஜிக்கும்கால் ஒருமலர் குறையத் தன் தாமரைக் கண்ணையே மலராய்
அருச்சித்த திருமாலாம் கண்ணன் விரும்பித் தோன்றிய குலத்தில் பிறந்தவர்களே!குவளை மலர்
போன்ற விழியால் இவ்வுலகைப் படாத பாடு படுத்துகிறீர்களே!உங்கள் பார்வையை உலகு தாங்காது.
ஆ நிரைகளை மேய்த்தும்,பாதுகாத்தும்,காட்டிலேயே வாழ்ந்தும் வருகின்ற தாங்கள் பால் பெற்று,
காய்ச்சி உறைகுத்தி,மோர்,தயிர்,வெண்ணெய் போன்றவற்றைக் கார்காலக் காதல் பார்வையோடு
வழங்குபவரே!கைலாச நாதன் ஊராம் கன்னியாகுடி வந்தீர்;காண்போருக்குக் கலக்கமும்,
மயக்கமும் வளர்த்தீர்!பொன் போன்ற இடை,புத்தியைத் தடுமாற வைக்கும் இடை,போர்போல்
உயிரைக் கொள்ளும் இடை,பெருமை கொண்ட சிற்றிடை கொண்ட இடைச்சியரே!
மண் மீதில் மின்னிடும் இடை நண்ணி,இடை நாடினேன்.என்மீது காதல் கொண்டு கண்ணால்
மொழி பேசுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக