திங்கள், 2 மே, 2016

மதங்கியார்

                                               மதங்கியார் 
                                  எழு சீர் ஆசிரிய விருத்தம் 

சிவமாய் விளங்கும் தவமாம் செல்வர் 
          சீரருள் காட்டும் கன்னியில் 
குவளை விழியீர்!குறுவாள் தொட்டீர்!
          குவலயம் வியந்திடப் பெருவாள் 
நவமெனச் சுழற்றி அவமென அகிலம் 
        நடுங்கிட நற்போர் புரிந்தீர்!
கவர்ந்தது கரத்திறன்: கனிந்தது காதல்:
      கரும்பன் வென்றிடக் கனிவீர்!

                                பொருள் 
   மென்கரம் கொண்ட பெண் இருகைகளிலும் வாளேந்திச் சுழற்றிப் போர் புரிய,
அவள் மீது மையலுற்ற ஆண்மகன் தன் காதலைக் கூறுவது,
        சிவமாயும்,தவமாயும் விளங்கும் கைலாசநாதர் அருள் பொழியும் கன்னியாகுடியில் 
வாழும்,குவளை மலர்போன்ற கண்ணை உடைய பெண்ணே!உன் மென்கரம் முதலில் 
சிறிய வாளைத் தொட்டது;அடுத்து,உலகே வியக்கும் வண்ணம் பெரும் வாள் தொட்டு 
இரண்டையும் சுழற்றி,மூவேழ் உலகங்களும் அஞ்சி நடுங்கும் முறையில் வாள் திறப்போர் 
காட்டிய பெண்ணே!உனது போர்த்திறன் என்னைக் கவர்ந்தது;அத்துடன் உன் மீது 
காதலும் மலர்ந்தது;கரும்பு வில்லுற்ற மன்மதனை நாம் வென்றிடலாம்:இல்லெனில் 
அவனே வென்றிட வழி வகுப்போம்;கனிவுப் பார்வை செலுத்துவாய்!என மையலுற்றோன்
கெஞ்சுகிறான்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக