செவ்வாய், 5 ஏப்ரல், 2016

புய வகுப்பு

                                                             புய வகுப்பு

                                          ஆசிரிய விருத்தம்

வான்முடி வரைஅடி  அடைமன இருவரும்
வீண்முயல் வளர்வளர் புதுசோதி பொலிந்தன:
இரணிய அழிவினில் இறுமாந்த நரசிமம்
சரபமாம் உருவினில் சமரினில் அடக்கின:
முறையிலா முனிவரின் முனிவினால் முதுகஜம்
முழுங்கிடக் கிழியுடல் வெளிவரு செறிவின:
தனதுமை மனதினில் பதிந்திடு ஆகமம்
நனிமறை குருபரத் திருமுகம் அருளின:
உலகமே சிவா,சிவா உணர்த்திய கஜமுகன்
நலக்கரம் நனிகனி நிறைவுடன்  அருளின:
அழற்பொறி மழலையை அறுமுகக் குழந்தையை
விழைவுடன் படைத்தபின் அழலுரு அருளின:
பதிகமாய்ப் பழந்தமிழ் உருக்கமாய் விருப்புடன்
பதிசிவ அடியவர் அளியணி அணிந்தன:
அரக்கனாம் தசமுகன் அழகுடல் நரம்பினால்
சிறப்பியாழ் தனிலிசை மறைமலர் அணிந்தன:
மடச்சின அலைநதி பகீரதன் வரநிலை
தடமழி குணம்குறை சிரமதில் அணிந்தன:
சிலைமலை மகளவள் சிவநினை தவநிலை
உலைமனம்  உசுப்பியே உறுதியை உவந்தன:
அருமலர் ஆயிரம் அருச்சனை நடுவினில்
ஒருமலர் திருக்கண் படைத்திட உவந்தன:
ஒருகண் உயர்த்தியும்,மறுகணில் குருதியா?
மறுகணும் பதிப்பிடம் அறிஅடி உவந்தன"
தடுத்தவர் தந்தை எனநினை உளம்தவிர்
அடுத்தனர் அரும்பிழைப்  பதமதை உவந்தன:
மதுரையில் மகிழ்வுடன் மணல்தலைச் சுமையுடன்
முதுகிழாள் பணிமுடித் தரும்பிட்டு விரும்பின:
அயர்வுடன் வருமடி யவர்துயர் களைந்திட
நயப்பொதி உணவுநீர் சுமப்பதை விரும்பின"
அருளொடு மகிழ்வொடு ஆன்றநல் வீர்மொடு
விருப்பொடு புகழுடைக் கன்னியான் கருணையாம்
திருப்புய வகுப்பினைத் தினம்தினம் வழுத்துவோம்.

                                        பொருள்
  பாட்டுடைத் தலைவனின் புயங்கள் (கரங்கள்)ஆற்றிய வீரம்,அருள் போன்றவற்றை விளக்குதல் புயவகுப்பு ஆகும்.
      நானே பெரியவன் என்ற அகந்தை தழுவிய திருமாலின்,பிரமனின் கர்வம் களைதல் நோக்கில்
அருணாசலமாய்சோதி உருவில் சிவபெருமான் நின்ற காலைஅச்சோதியின் முடி அடி தேடி,
விண்ணிலும்,பூமிக்கடியிலும் பிரமனும் திருமாலும் பறவையாய்,பன்றியாய்ச் சென்றனர்;ஓமென நின்றது சோதி.
       இரணியனை அழித்த மமதையில் நரசிங்கம் உலகையே அழிக்கத் துவங்கியது;சரபப் பறவை
உரு தாங்கிய சிவபெருமான் போரிட்டு நரசிங்கத்தை அழித்தார்;அந்த வெற்றிக் கரங்கள்
      தாருகாவனத்து முனிவர்களின் தவறான வழியை மாற்றவந்த சிவபெருமானை,அம்முனிவர்கள்
தீய வேள்வி செய்து,அத்தீயிலிருந்து தோன்றிய யானை யை விட்டுச் சிவனை முழுங்கச் செய்தனர்;
அந்த யானையின் தொலை உரித்துக் கொண்டு வெளிவந்தார் சிவன்;வெற்றி ஆட்டம் ஆடிய கரங்கள்
     மனையாம்மலைமகளுக்கு,மறைகள் ,ஆகமங்களை உபதேசித்த குருவின் உபதேசக் கரங்கள்
கனிக்காக உலகைச் சுற்றிவர முருகன் புறப்பட்டதும் ,"தாய் தந்தையே உலகம்"உலகமே தாய் தந்தை"
எனப் பாரவ்தி பரமேச்வரரைச் சுற்றிவந்த கணபதிக்குக் கனி கொடுத்து,ஆசி வழங்கிய கரங்கள்
        தேவர்களின் வேண்டுகோளுக்குஇணங்க,சூரபன்மாதி அரக்கர்களை அழிக்கும் புதல்வனைத்
தனது நெற்றிக்கண் பொறியிலே தோற்றிய ஈசன் தன்னைப்போலவே மகனையும் அழலுருவாய்
ஆக்கினார்;படைப்புக்கரங்கள்
      நால்வர் பாடல்களை ஏற்று அணிந்து,அவர்களுக்கு அருள் பொழிந்த கரங்கள்
           கயிலை மலையையே தன நாட்டிற்குத் தூக்கிச் செல்ல முனைந்த இராவணனைத் தன்
கால்விரலால் அழுத்த,இடையில் சிக்கிய இராவணன் இறைவனிடம் மன்னிப்பு வேண்ட,அவர்மனம் மகிழத் தன்னுடல் நரம்புகளால்  யாழொலி எழுப்பி,ஸாமகானம்"பாடினான்;அவனுக்கு அருள் வழங்கிய
கரங்கள்,
      பகீரதனின் தவத்தால் விண்வழி விட்டு மண்வழி தொடும்,சீற்றக் கங்கை உலகையே அழித்து
விடுவாளோ?என உலகோர் அஞ்ச,அவளைத் தன் சடையிலே எடுத்து அணிந்து கொண்ட கரங்கள்,
       பார்வதி தேவி  தவம் ஆற்றுகையில் முதியவ வேடம் தாங்கித் தவச்சாலை சென்று,சிவபெருமானை
இகழ்ந்து பேசிநார் சிவன்;சினந்த மலைமகள் என்றும் அவரே என் கணவர்"என உறுதி காட்டியதும்,
அம்மையை மனைவியாக ஏற்று அணைந்த கரங்கள்,
      ஆயிரம் தாமரை மலர்களால் சிவபெருமானை அர்ச்சனை புரியத் தொடங்கிய திருமால் அர்ச்சிக்க
ஒரு மலர் குறைந்தகாலை,தனது கண்ணையே மலராக அர்ச்சித்தார்;அதனால் மகிழ்ந்த சிவன்
அவருக்குச் 'சக்கரம்"என்னும் ஆயுதத்தை வழங்கினார்;அருட்கரங்கள்,
       இறைவன் கண்ணில் குருதி கண்டு,தன் கண்ணை எடுத்து அப்பிய கண்ணப்ப வேடன்,மறு கண்ணிலும் குருதி வடிவது கண்டு,அங்கும் தன் கண்ணை அப்ப,இறைவன் முகத்தில் தன் காலை
அடையாளமாக வைத்தபடிக் கண்ணைப் பிடுங்க முயல,அவனைத் தடுத்தாட்கொண்ட கரங்கள்,
       சிவபூஜை செய்யும் பொழுது,தடை வந்தால் தண்டிக்கும் (சண்டேசர்)விசாரசருமன் ,தடையாகத் தன்
தந்தையே வந்தபொழுது,தடுத்த அவர் காலை வெட்டினார்:மகிழ்ந்து விசார சருமனுக்கு " சண்டிகேஸ்வரர்"என்னும் பதம் அருளிய கரங்கள்,
        மதுரை மாநகரில் வந்தி என்னும் கிழவிக்காக வைகை வெள்ளம் தடுக்க,ஆளாகி,மண் சுமந்து,
அதற்குக் கூலியாக உதிர்ந்த பிட்டுக்களைப் பெற்றுக்கொண்ட கரங்கள்,
        திருப்பைஞ்ஞீவி  என்னும் தலத்திற்கு இறைவனைப் போற்றவந்த திருநாவுக்கரசர் களைப்பால்
வாடியபடி,நடக்க,அவரது பசி,தாகம் போக்கக் கையிலே கட்டுசோறு  சுமந்துசென்று குலமும்,காற்றும்
ஏற்படுத்தி அடியவரின் பசி,தாகம் தீர்த்த கரங்கள்.
        அருளும்,மகிழ்வும்,வீரமும்  ஈகையும் கொண்டு விளங்கும் கன்னியாகுடிக் கைலாசநாதரின்
கருணைமிகு திருக்கரங்களை நாளெல்லாம் போற்றுவோம்,



   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக